ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படம் ‘அமரன்’. இந்திய ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.
முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். அவருடன் சாய் பல்லவி, புவனா அரோரா, ராகுல் போஸ், லல்லு, ஷ்யாம் மோகன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீர், சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது. போஸ்ட் புரொடக்ஷன் உள்ளிட்ட அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில், அக்டோபர் 31-ஆம் தேதி தீபாவளி வெளியீடாக திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது. சமீபத்தில் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது,
இந்தநிலையில், ‘அமரன்’ படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழுவினர் இன்று (ஆகஸ்ட் 14) வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில், காஷ்மீர் பகுதியில் ஷூட் செய்யப்பட்ட காட்சிகளே பெரும்பாலும் இடம்பெற்றுள்ளது. பல இடங்களில் குண்டுகள் வெடிக்க, சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்தாக தீவிரவாதிகளுடன் சண்டையிடும் காட்சிகள் பிரம்மிக்கவைக்கிறது.
அங்கு வசிக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துகின்றனர். சிவகார்த்திகேயன் ராணுவ வீரர் கதாபாத்திரத்தில் மிளிர்கிறார். படத்தின் சண்டைக்காட்சிகள் விறுவிறுப்பு கூட்டுவதாக இருக்கிறது.
பின்னணியில் ஒலிக்கும் ஜி.வி.பிரகாஷின் இசை படத்திற்கு மிகவும் அழுத்தம் கொடுத்து வலுவூட்டுவதாக இருக்கிறது. ‘போர் செல்லும் வீரன்… ஒரு தாய் மகன் தான்’ என்ற பாடல் உணர்வுப்பூர்வமாக உள்ளது. இதனால் அமரன் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
திருச்சி எஸ்.பி வருண்குமார் புகார்… சீமான் மீது வழக்கு!
ஆம்ஸ்ட்ராங் கொலை… சம்பவ செந்தில் உயிருடன் பிடிபடுவாரா? துரத்தும் 3 டீம்கள்! ஷாக் ரிப்போர்ட்!