தமிழ் சினிமாவில் சில நடிகர்களின் படங்கள் தொடர்ந்து ஹிட் ஆகும்போது, தியேட்டர் வாசலில் அவர்களுக்கென்று புதிதாக ரசிகர் மன்றங்கள் முளைக்கும்.
அதுவே படங்கள் தொடர் தோல்விகளாக அமைந்தால், ‘காளான்’ போல அவை காணாமல் போகும். வெற்றி, தோல்விகளை மீறித் திரைத்துறையில் சீரான பயணம் வாய்க்க ஒரு விஷயம்தான் உதவும்.
அது, ஒரு குடும்பத்தில் உள்ள அனைத்து வயதினரும் ஒன்றாகச் சேர்ந்து வந்து படம் பார்க்கலாம் என்ற உறுதியில் இருந்து அவர்களது படங்கள் விலகாமல் பார்த்துக்கொள்வது. அதனை மிகக்கவனமாக முன்னெடுத்து வருபவர்களில் ஒருவர் ஜெயம் ரவி.
கடந்த ஆண்டு அவரது நடிப்பில் ‘அகிலன்’, ‘பொன்னியின் செல்வன் 2’, ‘இறைவன்’ என்று மூன்று படங்கள் வெளியாகின. இதில் மணிரத்னத்தின் படம் மட்டுமே ஜெயம் ரவிக்குச் சொல்லும்படியாக அமைந்தது.
மற்ற இரண்டும் அவரது ‘ஸ்கிரிப்ட்’ தேர்வினைக் கேள்விக்குட்படுத்தின. இந்த நிலையில், தற்போது ஆண்டனி பாக்கியராஜ் இயக்கத்தில், அவர் நடித்துள்ள ‘சைரன்’ படம் வெளியாகியுள்ளது.
இதில் ஜெயம் ரவியுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், சமுத்திரக்கனி, அஜய், அழகம்பெருமாள், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ’சைரன்’ படம் மீண்டும் ஜெயம் ரவியை வெற்றி பீடத்தில் அமர்த்துகிறதா? என்பதை இங்கே பார்க்கலாம்.
முரண்படும் பாத்திரங்கள்
பதினான்கு ஆண்டுகள் கழித்து பரோலில் வீடு திரும்புகிறார் திலகவர்மன் (ஜெயம் ரவி). காஞ்சிபுரத்தில் அவரது பெற்றோர், சகோதரர்கள், சகோதரி அனைவரும் வசிக்கின்றனர்.
தாயைக் கொலை செய்துவிட்டுச் சிறைக்குச் சென்றவர் என்ற எண்ணம் அடிமனதில் பதிந்த காரணத்தால், திலகனின் பதின்ம வயது மகள் மலர் (யுவினா பர்தவி) அவரைக் கடுமையாக வெறுக்கிறார்.
பரோலில் வரும் திலகனுக்குக் காவலாக காவலர் வேளாங்கண்ணி (யோகிபாபு) நியமிக்கப்படுகிறார். எந்நேரமும் அவர் உடன் இருக்கிறார். அதையும் மீறி, திலகன் திருட்டுத்தனமான சில வேலைகளைச் செய்கிறார்.
ஒருநாள் இரவு, அண்ணாச்சி பார் சென்று இருவரும் மதுபானம் வாங்குகின்றனர். அடுத்த நாள் காலையில், அதன் உரிமையாளர் மாணிக்கம் (அழகம்பெருமாள்) கொலை செய்யப்பட்டுக் கிடக்கிறார். அவர் ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்.
அதன்பிறகு திலகனின் நிலத்தை விற்பது தொடர்பாக, அவரை மாணிக்கத்தின் விசுவாசி (அஜய்) ஒருவரிடம் அழைத்துச் செல்கிறார் வேளாங்கண்ணி. அங்கு, வேளாங்கண்ணியை ஏமாற்றி திசை திருப்பிவிட்டு அந்த நபரைக் கொல்கிறார் திலகன்.
அப்போதுதான், முதல் கொலையையும் செய்தது அவரே என்ற விஷயம் நமக்குத் தெரிய வருகிறது. இரு வழக்குகள் குறித்து விசாரணை மேற்கொள்கிறார் இன்ஸ்பெக்டர் நந்தினி (கீர்த்தி சுரேஷ்).
அப்போது, அவரையே குற்றவாளியாக்கும் வகையில் சில ஆதாரங்கள் கிடைக்கின்றன. ஆனால், அவரோ திலகன் மீது தனது விசாரணை பார்வையைத் திருப்புகிறார். திலகன் இருந்துவரும் சிறைக்குச் செல்லும் நந்தினி, அவரது கடந்த காலம் குறித்த சில உண்மைகளை அறிகிறார்.
அது மட்டுமல்லாமல், அவர் அடுத்து யாரைக் கொலை செய்யப் போகிறார்? என்பதையும் கண்டறிகிறார். நந்தினியின் முயற்சி வெற்றி பெற்றதா? இல்லை திலகன் தனது பழி வாங்கும் எண்ணத்தில் வெற்றி கண்டாரா? என்று சொல்கிறது ‘சைரன்’.
இந்தக் கதையில் திலகன் மீது சந்தேகத்தோடு சுற்றுவதாக இன்ஸ்பெக்டர் நந்தினி பாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்விரு பாத்திரங்களும் முரண்படும்போது திரைக்கதை பரபரப்பானதாக மாறுகிறது.
’சால்ட் அண்ட் பெப்பர்’ ரவி
நாற்பதுகளைத் தாண்டிய நடுத்தர வயது மனிதராக இதில் தோன்றியிருக்கிறார் ஜெயம் ரவி. அதற்காக, லேசாகக் கூன் விழுந்தது போன்ற உடல்மொழியை வெளிப்படுத்தியிருக்கிறார்;
கூடவே, ‘சால்ட் அண்ட் பெப்பர்’ ஸ்டைலில் நரைத்த முடியோடு வந்து போகிறார். அதனால், இளமையான ரவியைக் காட்டும் ‘பிளாஷ்பேக் பகுதி’யில் சட்டென்று நம்மை ஈர்க்கிறது.
கீர்த்தி சுரேஷ் இதில் இன்ஸ்பெக்டராக வருகிறார். அவரது ‘அமுல் பேபி’ முகம் முதலில் அப்பாத்திரத்தில் துருத்தலாகத் தெரிந்தாலும், ‘எவண்டா சொன்னது’ என்று ஜெயம் ரவியிடம் எகிறும் காட்சியில் மிரட்டல் நடிப்பைத் தந்திருக்கிறார்.
அனுபமா பரமேஸ்வரன் முதல் பாதி முழுக்க சிற்சில ஷாட்களில் வந்து போகிறார். அதனைப் பார்த்துவிட்டு ‘கௌரவ தோற்றமா’ என்று நாம் யோசிப்பதற்குள், பின்பாதியில் நான்கைந்து காட்சிகளில் நயமாகத் தோன்றி நம்மைக் கவர்கிறார்.
என்ன, கர்ப்பகாலத்தைக் காட்டும் காட்சிகளில் ’டயட் மாடல்’ போலத் தோன்றியிருப்பதைத் தவிர்த்திருக்கலாம். யோகிபாபுவின் ஒன்லைனர்கள் முன்பாதியில் ஆங்காங்கே நம்மைச் சிரிக்க வைக்கின்றன.
துளசி, சாந்தினி உட்பட ஜெயம் ரவியின் குடும்பத்தினராக ஒரு டஜன் பாத்திரங்கள் காட்டப்படுகின்றன. ஆனாலும், அவர்களில் எவருக்கும் பெரியளவு முக்கியத்துவம் தரப்படவில்லை.
ரவியின் மகளாக வரும் யுவினா சட்டென்று நம் மனம் கவர்கிறார். ஆனால், தந்தையைத் தீவிரமாக அப்பாத்திரம் வெறுப்பதைக் காரண காரியத்தோடு விளக்கும் காட்சிகள் இல்லாதது ஒரு குறை.
இந்த படத்தின் மாபெரும் பலவீனம், வில்லனை மிக அழுத்தமாகக் காட்டாதது. இத்தனைக்கும் இதில் அழகம்பெருமாள், அஜய், சமுத்திரக்கனி என்று மூன்று பேர் வில்லத்தனம் செய்கின்றனர்.
அவர்களைச் சாதி ஆணவம் மிக்கவர்களாகவும் காட்டியிருக்கிறார் இயக்குநர் ஆண்டனி பாக்கியராஜ். அப்படியிருந்தும், அவர்களுக்கான ‘இடம்’ குறைவாகவே திரைக்கதையில் தரப்பட்டுள்ளது.
எஸ்.ஐ.யாக வரும் மதன் தட்சிணாமூர்த்தி, சக கைதியாக வரும் முத்துக்குமார் போன்றவர்களுக்குக் குறைவான காட்சிகளே இதிலுள்ளன. ஜி.வி.பிரகாஷ்குமார் பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார். அவரது இசையில் ‘நேற்று வரை’, ‘கண்ணம்மா’ பாடல்கள் திரும்பத் திரும்பக் கேட்கும்விதமாக உள்ளன.
முன்பாதியில் வரும் காட்சிகளில் நிறைந்திருக்கும் ‘த்ரில்’லை எளிதாக நமக்குக் கடத்துகின்றன சாம்.சி.எஸ்ஸின் பின்னணி இசை. அழகம்பெருமாள் கொலை செய்யப்படும் காட்சி திரும்பத் திரும்பக் காட்டப்படும்போது, அதில் நிறைந்திருக்கும் திருப்பங்களை அடிக்கோடிடுகிறது அவரது இசை.
படம் முழுக்க நாம் பரபரப்பை உணரவும் அவரது பங்களிப்பே முக்கியக் காரணமாக உள்ளது. எஸ்.கே.செல்வகுமாரின் ஒளிப்பதிவில் இரவு நேரக் காட்சிகள் அருமையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
முன்பாதியில் பிளாஷ்பேக்கும், நிகழ்காலமும் மாறி மாறி அடுத்தடுத்து நேர்த்தியாகக் காட்டப்படக் காரணம் ரூபனின் படத்தொகுப்பு. அதிலும் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் இருவரும் அடிப்படையில் ஒரேமாதிரியான குணாதிசயங்களைக் கொண்டவர்கள் என்ற உணர்வை அதிகப்படுத்துகிறது அவர்களது அறிமுகக் காட்சிகள்.
ஒட்டுமொத்தப் படத்தின் வண்ணம் இப்படித்தான் அமைய வேண்டுமென்று தீர்மானித்தது முதல் பிரேமுக்குள் வரும் உள்ளடக்கத்தை வடிவமைத்தது வரை, பலவற்றில் நம்மை ஆச்சர்யப்படுத்துகிறது கதிரின் தயாரிப்பு வடிவமைப்பு.
புதுமுகமான ஆண்டனி பாக்கியராஜ் இப்படத்தை இயக்கியிருப்பதோடு எழுத்தாக்கத்தையும் கையாண்டுள்ளார். ‘ஒருத்தன் சாதி இல்லைன்னு சொன்னா, அவன் என்ன சாதின்னு தேடாதீங்கய்யா’ என்பது போன்ற வசனங்கள் பின்பாதியில் கைத்தட்டலை அள்ளுகின்றன.
போலவே, வழக்கமான கமர்ஷியல் படங்களுக்கு உரித்தான பிரமாண்டத்தை பிரேம்களில் நிறைக்காமல் வெறுமனே ‘த்ரில்’ சார்ந்த காட்சிகளைக் கொண்டு பரபரப்பான திரைக்கதையைத் தந்திருப்பது நல்ல விஷயம்.
இன்னொரு ’அடங்கமறு’வா?
மேம்போக்காகப் பார்த்தால், இந்த படத்தின் கதை ஏற்கனவே ஜெயம் ரவி நடித்த ‘அடங்க மறு’ போன்று தென்படலாம். காரணம், இதிலும் வில்லன் கூட்டத்தை வேட்டையாடுபவராக நாயகன் பாத்திரம் வடிவமைக்கப்பட்டிருப்பதே. அதில், ‘இன்றைய உலகில் இளம்பெண்களின் மீதான பாலியல் அத்துமீறல்’ பூதாகரப்படுத்தப்பட்டிருந்தது.
இதிலோ, ‘சாதி ஆணவக் கொலைகள்’ மையப்படுத்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில், ‘அடங்க மறு’வை வெகு எளிதாகக் கடந்து சென்று வேறுவிதமான காட்சியனுபவத்தைத் தருகிறது ‘சைரன்’ இரண்டாம் பாதி. அதுவே இப்படத்தின் யுஎஸ்பியாக உள்ளது.
லாஜிக் மீறல்கள் என்று யோசிக்க ஆரம்பித்தால், முக்கியத் திருப்பங்கள் அனைத்தையும் கேள்விக்கு உட்படுத்த வேண்டியிருக்கும். முழுக்க கமர்ஷியல்மயமான படம் என்பதால், அவற்றைப் புறக்கணித்துவிடலாம்.
அதேநேரத்தில், தன்னைக் குற்றவாளி ஆக்கியவர்கள் குறித்த நாயகனின் புலம்பலோ, நாயகனை அவரது மகள் வெறுப்பதோ திரையில் தெளிவாக உணர்த்தப்படவில்லை.போலவே ஆம்புலன்ஸ், மருத்துவமனை, செவிலியர் என்பது போன்ற பாத்திரங்களின் தினசரி வாழ்வைத் தெளிவுறச் சொல்வதற்கான விஷயங்கள் இதில் இல்லை.
பிளாஷ்பேக்கில் வரும் சண்டைக்காட்சியில் ‘காமெடி’யை புகுத்தியிருப்பது, அதுவரையிலான திரைக்கதை ‘ட்ரீட்மெண்டில்’ இருந்து மொத்தமாகத் தடம் புரண்டதைக் கவனித்திருக்கலாம்.
படம் முடிந்தபிறகும் ‘இரண்டாவது கிளைமேக்ஸ்’ என்று ‘க்ரிஞ்’சான ஒரு காட்சியைக் கடைசியில் இணைத்திருக்கிறார் இயக்குநர். உண்மையைச் சொன்னால், அதனை வெட்டிவிடுவது மிக நல்லது. ஏனென்றால், அது இல்லாமலேயே இந்த படம் நல்லதொரு தாக்கத்தை உருவாக்கக் கூடும்.
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், ஜெயம் ரவியின் சமீபத்திய படங்களில் இருந்து வேறுபட்டு நல்லதொரு காட்சியனுபவத்தைத் தருகிறது ‘சைரன். அது, அவரது ‘ஸ்கிரிப்ட் தேர்வு’ மீண்டும் பழைய ‘பார்ம்’முக்கு திரும்பியதை உணர்த்துகிறது. வெல்கம்!
-உதய் பாடகலிங்கம்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
INDvsENG : டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த அஸ்வின்
செந்தில் பாலாஜி கோரிக்கையை ஏற்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
டெல்லி போராட்டத்தில் விவசாயி உயிரிழப்பு!