11 ஆண்டுகால திருமண உறவில் இருந்து பிரிவதாக அறிவித்த பாடகி சைந்தவி ஜிவி பிரகாஷ் உடனான 24 வருட நட்பு தொடரும் என்று தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், பாடகி சைந்தவி இருவரும் தங்கள் திருமண பந்தத்தில் இருந்து பிரிந்து வாழப்போவதாக ஒரே நேரத்தில் அறிவித்தனர்.
தங்கள் குடும்பத்தார், உறவினர்கள் எல்லோரிடமும் கலந்து பேசிய பின்னரே இந்த முடிவுக்கு வந்ததாகவும், தெளிவுபட அறிவித்திருந்தனர்.
இந்த அறிவிப்புக்கு பின்னர் வலைதள சேனலில் இருவரது பிரிவுக்கும் என்ன காரணம் என்பதை அவரவர் வசதிக்கு ஏற்ப பரபரப்பு வீடியோக்களாக வெளியிட தொடங்கினர்.
இந்த நிலையில் ஜி.வி பிரகாஷ் நேற்று முன்தினம் பதிவு ஒன்றை தனது x தளத்தில் வெளியிட்டார்.
அதில்,
“புரிதலும், போதுமான விவரங்கள் இல்லாமலும் அனுமானத்தின் பேரில் இரு மனங்கள் இணைவது, பிரிவது குறித்து பொதுவெளியில் விவாதிக்கப்படுவது துரதிருஷ்டவசமானது.
பிரபலமான நபராக இருப்பதாலே ஒருவரின் தனிப்பட்ட வாழ்விற்குள் அத்துமீறி நுழைந்து தரம் தாழ்ந்த விமர்சனங்கள் வைப்பதும் ஏற்புடையதல்ல.
தங்களின் கற்பனைக்கு வார்த்தைகள் மூலம் வடிவம் கொடுத்து சமூக ஊடகங்களில் வெளிப்படுத்துவதால் அது யாரோ ஒரு தனி நபரின் வாழ்க்கையை பாதிக்கும் என்பதை உணராத அளவுக்கு தமிழர் மாண்பு குறைந்து விட்டதா..?
இருவரும் பரஸ்பரம் ஒப்புக்கொண்டு பிரிந்ததால் பின்னணியையும் காரணங்களையும் நெருங்கி பழகிய நண்பர்கள், உறவினர்கள் நன்கறிவார்கள். அனைவரிடமும் கலந்த ஆலோசித்து பின்பு தான் இருவரும் இந்த முடிவை மேற்கொண்டோம்.
எங்களை பிரபலங்களாக உருவாக்கிய உரிமைகளோ அல்லது என் தனிப்பட்ட வாழ்க்கை மீது தங்களுக்கு இருந்த பேரன்பின் வெளிப்பாடாகவோ தங்களின் ஆதங்கமான விமர்சனங்கள் இருந்தாலும் பட்டவர்களின் மனதை அது மிகவும் காயப்படுத்துகிறது என்பதை உணர்த்தவே இதை பதிவிடுகிறேன்.
ஒவ்வொரு தனி மனிதரின் நியாயமான உணர்வுக்கும் மதிப்பளியுங்கள். தங்களின் பேரன்பிற்கும் ஆதரவுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.” என ஜி.வி. பிரகாஷ் குறிப்பிட்டிருந்தார்.
அப்படியும் தொடர்ந்து வலைதளங்கள் விமர்சித்து வந்த நிலையில்,
நேற்று, பாடகி சைந்தவி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
— Saindhavi (@singersaindhavi) May 16, 2024
அதில்,
நானும் ஜீவி பிரகாஷும் மனம் ஒத்து போய் பிரியப் போகிறோம் என்று சொன்ன பிறகு ஏராளமான யூடியூப் சேனல்களில் நாங்கள் ஏற்கனவே பேசிய விஷயங்களை மேலும் சில செய்திகளை சேர்த்து புனையப்படுவதை பார்ப்பது வருத்தம் அளிக்கிறது.
எங்கள் விவாகரத்து வெளியே உள்ள அடுத்தவர்களால் ஏற்படவில்லை. மேலும் ஒருவரின் குணாதிசயத்தை ஆதாரம் இல்லாமல் தோராயமாக படுகொலை செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது.
நாங்கள் விவாகரத்து செய்ய வேண்டும் என்ற முடிவு எங்கள் முன்னேற்றத்திற்காக இருவரும் பரஸ்பரமாக எடுத்தோம். ஜீ.வி பிரகாஷும் நானும் பள்ளி பருவத்தில் இருந்து 24 வருடங்களாக நண்பர்களாக இருந்தோம். அந்த நட்பை தொடர்ந்து பேணுவோம். நன்றி” என்று அந்த பதிவில் பாடகி சைந்தவி கூறியிருக்கிறார்.
சைந்தவின் ட்வீட்டை டேக் செய்துள்ள ஜி.வி.பிரகாஷ், “சொந்த அனுமானங்களின் அடிப்படையில் கதைகளை எழுதும் சேனல்களுக்கு, நீங்கள் சொல்வது உண்மை இல்லை என்று தெரிவித்துகொள்கிறேன்.
சில ஐடிகள் தங்கள் சொந்த கற்பனை மற்றும் கதைகளின் அடிப்படையில் மக்களை படுகொலை செய்வதை ரசிக்கிறார்கள்.
இந்த கடினமான நேரத்தில் ஆதாரவாக இருப்பவர்களுக்கு நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.
இராமானுஜம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹெல்த் டிப்ஸ்: நீரிழிவு கட்டுக்குள் வராமல் இருக்கிறதா? இதைச் செய்யுங்கள்!
கிச்சன் கீர்த்தனா : சிவப்பு அரிசி இடியாப்பம்!
கபில் சிபல் காட்டிய டிரெய்லர்: உச்ச நீதிமன்ற பார் அசோசியேஷன் தேர்தலில் வெற்றி!