‘ராசாத்தி ஒன்ன காணா நெஞ்சம்’ பாட்டை பாடிய ஜெயச்சந்திரன் காற்றோடு கரைந்து விட்டார். அவருக்கு 80 வயதாகிறது. கொச்சி அரச பரம்பரையை சேர்ந்த ஜெயச்சந்திரன் பாடகரானாதே ஒரு சுவாரஸ்ய சம்பவம்தான். ஜெயச்சந்திரன் பிரபல பாடகர் ஜேசுதாஸ் போல சங்கீதம் கற்றவர் அல்ல. ஆனால், அபாரமான இசைஞானம் இருந்தது. இதை அடையாளம் கண்டு கொண்டவர் பிரபல மலையாள பட தயாரிப்பாளரான பரமு அண்ணன் என்று அழைக்கப்படும் ஷோபனா பரமேஷ்வரன் நாயர். இவர்தான் மறைந்த பிரபல எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் நாயரையும் மலையாள திரையுலகில் அறிமுகப்படுத்தியவர்.
1965 ஆம் ஆண்டு வாக்கில் ஷோபனா பரமேஷ்வரன் நாயர் தனது படத்தில் ஒரு பாடலை படிக்க ஜெயச்சந்திரனை புக் செய்துள்ளார். ஸ்டூடியோவுக்கு ஜெயச்சந்திரன் பாட சென்றுள்ளார். ஆனால், ஸ்டூடியோவின் சூழல் நன்றாக இல்லை என்பதால் ஜெயச்சந்திரனுக்கு பாட வரவில்லை. இதையடுத்து, அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். அடுத்த நாள் தனது வீட்டில் ஒளிந்து கொண்டிருந்துள்ளார். அப்போது, அவரை வீட்டுக்கே தேடி வந்து விட்டார் ஷோபனா பரமேஷ்வரன் நாயர். பின்னர், ஜெயச்சந்திரனை பிடித்து கொண்டு போய் ஸ்டூடியோவுக்கு கொண்டு சென்று பாட வைத்துள்ளார். ஆனால், இந்த பாடல் வெளிவரவில்லை.
இப்படி திரைத்துரைக்குள் நுழைந்த ஜெயச்சந்திரன் முதன் முதலாக குஞ்சாலி மரக்கார் என்ற படத்தில் பிரேம்நசீருக்காக’ ஒரு முல்லப்பூ மலக்கன்’ என்ற மலையாள பாடலை பாடினார். அதற்கு பிறகு, அவர் திரும்பி பார்க்கவே இல்லை. மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் 15 ஆயிரம் பாடல்களை அவர் பாடியுள்ளார்.
1944 ஆம் ஆண்டு பிறந்த ஜெயச்சந்திரனின் தந்தை ரவிவர்மா கோச்சினியன் தம்புரான். இவர், கொச்சி அரச பரம்பரையை சேர்ந்தவர். தாயார் பெயர் சுபர்தாரா குஞ்சம்மா. முதலில் கொச்சி ரவிபுரத்தில் வசித்த ஜெயச்சந்திரன் குடும்பம் பின்னர் திருச்சூர் இரிஞ்சலக்குடாவுக்கு இடம் மாறியது. ஜெயச்சந்திரனுக்கு லலிதா என்ற மனைவியும் லட்சுமி என்ற மகளும், தீனானந்த் என்ற மகனும் உண்டு.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்