நீ தேவதைகளுடன் சொர்க்கத்தில் பிறந்தநாளை கொண்டாடுவாய் என்று இறந்த தனது மகளுக்கு பாடகி சித்ரா போட்ட உருக்கமான பதிவு மனதை உறைய வைப்பதாக இருக்கிறது.
தமிழ் சினிமாத் துறையில் சின்னக் குயில் சித்ரா என்று சொன்னால் தெரியாதவர் யாரும் இருக்க முடியாது. மனதை வருடும் ஏராளமான பாடல்களை பாடி உள்ளார்.
இவர் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி, பெங்காலி, ஒரியா, பஞ்சாபி, குஜராத்தி என 25,000-க்கும் அதிகமான பாடல்களைப் பாடி சாதனை படைத்துள்ளார்.
6 முறை தேசிய விருதுகள் உட்பட பல்வேறு விருதுகளையும் பெற்றவர் பாடகி சித்ரா. அவர் சினிமா துறைக்குள் நுழைந்து 40 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது.
பாடகி சித்ரா, விஜய சங்கர் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 15 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்தது. பல்வேறு வேண்டுதலுக்குப் பிறகு நந்தனா என்ற மகள் பிறந்தார்.
சித்ரா தனது மகளை எங்கு சென்றாலும் கூடவே அழைத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இதேபோன்று கடந்த 2011-ம் ஆண்டு ஏ.ஆர். ரஹமான் நிகழ்ச்சி ஒன்றில் பாட துபாய் சென்றிருந்த போது அவரது மகள் நந்தனாவையும் அழைத்து சென்றிருந்தார்.
8 வயது குழந்தை நந்தனாவுடன் துபாயில் நட்சத்திர ஹோட்டலில் அறை எடுத்து தங்கியிருந்தார் சித்ரா. அந்த ஹோட்டலில் நீச்சல் குளத்தில் எதிர்பாராதவிதமாக விழுந்து நந்தனா உயிரிழந்துவிட்டார்.
இந்த விபத்தில் மகளை பறிகொடுத்த சித்ரா மீண்டு வருவதற்கே நிறைய ஆண்டுகள் ஆனது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் சித்ரா, அவ்வப்போது தனது மகளை நினைத்து அழுவார்.
ஒரு குழந்தையை இழந்துவிட்டாலும் ஏராளமான குழந்தைகளுடன் இருக்கும் வாய்ப்பை கடவுள் எனக்கு கொடுத்திருக்கிறார் என்று நெகிழ்ச்சியுடன் கூறுவார். இந்த நிலையில் தனது மகளின் பிறந்தநாளில் (டிசம்பர் 18) அவர் உருக்கமான ஒரு பதிவை போட்டுள்ளார்.
அதில், நந்தனா நீ தேவதைகளுடன் சொர்க்கத்தில் உன் பிறந்தநாளை கொண்டாடுவாய். எத்தனை ஆண்டுகள் சென்றாலும் உனக்கு ஒரு போதும் வயதாகாது. நீ என்னை விட்டு வெகு தூரத்தில் இருந்தாலும் பாதுகாப்பாக இருப்பாய்.
உன்னை எப்போதும் நேசிக்கிறேன். இன்றைய தினம் உன்னை அதிகமாகவே மிஸ் செய்கிறேன் என்று குழந்தை நந்தனாவின் புகைப்படத்துடன் சித்ரா பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு காண்போரை கலங்க வைப்பதாக இருக்கிறது.
ரசிகர்கள் பலரும் நந்தனாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்ததுடன், இன்னொரு பிறவியில் நந்தனாவுக்கு நீங்கள் மகளாக பிறப்பீர்கள், அவள் உங்களுக்கு தாயாக இருப்பார் என்று பாடகி சித்ராவுக்கு ஆறுதலும் சொல்லி வருகின்றனர்.
கலை.ரா
பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு வளைவு திறப்பு!
உதகை மலை ரயில் போக்குவரத்து மீண்டும் துவக்கம்!