பவதாரிணி. திரையிசைப் பின்னணிப் பாடகிகளில் தனித்துவமான குரலுக்குச் சொந்தக்காரர். இசைஞானி இளையராஜாவின் வாரிசுகளில் ஒருவர். தந்தையை, சகோதரர்களைப் போன்று இசையமைப்பிலும் ஈடுபட்டவர்.
அவ்வப்போது அவரிடம் இருந்து இசை வெளிப்பட்டாலும், அவை அனைத்தும் நம் மனதில் என்றென்றும் ரீங்காரம் இடும் வகையில் இருக்கும். கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 2024 ஜனவரி 25 ஆம் தேதியன்று மரணமடைந்தார் பவதாரிணி.
அந்தத் தகவல் அறிந்ததும் பதைபதைத்த ரசிக மனங்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காது. அந்தக் கணத்தில் அவர் பாடிய பாடல்கள் அனைத்தும் நம் நினைவுக்குள் வந்துபோனது.
பதின்ம வயதின் சில்லிப்பு
சில பாடல்களைக் கேட்கையில், ‘இதைப் பாடியது அவரா, இவரா’ என்று சில கலைஞர்கள் குறித்த எண்ணங்கள் அலைமோதும். அந்தக் குரலில் தென்படும் தனித்துவத்தைத் தனியாகக் கண்டறிந்து, அலசி ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வருவதற்குள் ‘போதும் போதும்’ என்றாகிவிடும்.
பின்னணி பாடுவதற்கென்று ஒவ்வொரு காலகட்டத்திலும் வகுக்கப்பட்ட வரையறைகளுக்குள் அந்தக் குரல்கள் அடங்கியிருப்பதும் அதற்கொரு காரணம். அதில் இருந்து விலகிச் சட்டென்று ரசிகர்கள் அடையாளம் காணும் குரல்களில் ஒன்று பவதாரிணியுடையது.
பவதாரிணி பின்னணி பாடகியாக முதன்முறையாக அறிமுகமானது, ராசய்யா படத்தில் இடம்பெற்ற ‘மஸ்தானா மஸ்தானா’ பாடல் வழியாகத்தான். தமிழ் ரசிகர்கள் அவரைக் கண்டறிந்த பாடல் அதுவே. அதற்கு முன்னரே, ‘மை டியர் குட்டிச்சாத்தான்’ படத்தில் ‘தித்தித்தை தாளம்’ என்ற பாடலை அவர் பாடியிருக்கிறார்.
இவ்விரு பாடல்களில் ‘தித்தித்தை தாளம்’ பாடலில் அவரது குரலில் ஒரு இளம்பெண்ணின் தொனி தென்படும். ஆனால், ‘மஸ்தானா மஸ்தானா’ தொட்டுப் பல பாடல்களில் பதின்ம வயதின் சில்லிப்பை உணர முடியும் என்பது ஒரு ஆச்சர்யமான விஷயம். அதுவே, அவரது குரலின் மிக முக்கியமான சிறப்பம்சமாகவும் உள்ளது.
அலெக்சாண்டர் படத்தில் வரும் ‘நதியோரம் வீசும் தென்றல்’, கருவேலம் பூக்கள் படத்தில் இடம்பெற்ற ‘பல்லக்கு வந்திருக்கு’, காதலுக்கு மரியாதையில் உள்ள ‘என்னைத் தாலாட்ட வருவாளா’, ‘இது சங்கீதத் திருநாளோ’, ‘ஓ பேபி பேபி’, அழகியில் வரும் ‘ஒளியிலே தெரிவது தேவதையா’, ப்ரெண்ட்ஸ் படத்தின் ‘தென்றல் வரும் வழியைப் பூக்கள் அறியாதா’ உட்படப் பல பாடல்களில் அந்த சில்லிப்பை உணர முடியும்.
அப்பாடல்களில் பதின்ம வயதுக்குரிய பெண்ணின் துடிப்போடு, அவ்வயது ஆண் மகனின் குரலில் இருக்கும் வன்மையின் சிறு துளியும் நிறைந்திருக்கும். ஆனால், அவற்றைப் பகுத்துப் பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு அப்பாடல்களின் கட்டமைப்பு நம் மனதில் இன்னொரு உலகை விரியச் செய்யும்.
காற்றில் வரும் கீதமே
’ஒருநாள் ஒரு கனவு’ படத்தில் இடம்பெற்ற ‘காற்றில் வரும் கீதமே’ பாடல் இளையராஜா பிரியர்களின் பேவரைட் பாடல்களில் ஒன்று. மலரினும் மெல்லிய என்ற பதம் சொல்லப்படுமே, அத்தகைய ஒன்றை அப்பாடலில் கேட்கலாம். தன்னை முழுவதுமாகச் செலுத்திக் கலையை வெளிப்படுத்துபவரால் மட்டுமே நிகழ்த்த முடிகிற மாயாஜாலம் அது.
சில பாடல் கச்சேரிகளில் அதனை பவதாரிணி பாடுகிறபோது, அக்குரலில் கொஞ்சம் வெட்கம் தெரியும். அதுவே கூட, அவர் இசையமைப்பிலும் பாடுவதிலும் நிறைய பங்களிக்காமல் போனதற்குக் காரணமாக இருக்கலாம். தனது படைப்பைக் கொடுத்துவிட்டு, ரசிகர்களிடம் இருந்து விலகி நிற்கும் விருப்பம் கூட அவரிடம் இருந்திருக்கலாம்.
தந்தை மட்டுமல்லாமல் கார்த்திக் ராஜா, யுவன்சங்கர் ராஜா என்று சகோதரர்கள் இசையிலும் பாடியிருக்கிறார் பவதாரிணி. கார்த்திக் ராஜாவின் இசையில் ‘முத்தே முத்தம்மா’, ‘நடனகலாராணி’, ’மடோனா பாடலா நீ’, ‘அடி ரெண்டே காலுல மான்குட்டி’, ‘முட்டைக்குள்ள இருக்கும்போது’ உட்படப் பல பாடல்களைத் தந்திருக்கிறார்.
அதேபோல, யுவன் இசையில் ‘ஆல் தி பெஸ்ட்’ தொடங்கி ’பூத்தது பூத்தது மனது’, ‘நீ இல்லை என்றால்’, ‘சடுகுடு ஆடாதே’, ‘மெர்க்குரி பூவே’ என்று நிறைய பாடியிருக்கிறார். அப்பாடல்கள் அனைத்தும், அவரது குரலால் தனிக்கவனத்தைப் பெறுவதாக இருக்கும்.
பிற இசையமைப்பாளர்களைப் பொறுத்தவரை சிற்பி, தேவா, ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடியிருக்கிறார். அப்பாடல்களும் கூட திரும்பத் திரும்பக் கேட்டு ரசிக்கும் ரகத்தில் சேர்பவை. ’மித்ர மை ப்ரெண்ட்’, ‘வெள்ளச்சி’ உட்பட பத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைப்பு செய்திருக்கிறார்.
அனைத்துக்கும் மேலே, யுவனின் தொடக்க காலத்தில் அவருக்கான இசை வழிகாட்டியாகவும் திகழ்ந்திருக்கிறார். மிக முக்கியமாக, வெகு அரிதாகத் தன் குடும்பத்தினரோடு மேடையில் பார்க்கும் தருணங்கள் ரசிகர்களுக்கு வாய்த்திருக்கின்றன.
அப்போதெல்லாம், அவர்களை ஒன்றிணைக்கும் இழையாகவும் அவர் திகழ்ந்ததை உணரலாம். இப்படிப் பவதாரிணியை நினைவூட்டும் விஷயங்கள் நிறைய, அவரது குடும்பத்தினருக்கு, இணைந்து பணியாற்றியவர்களுக்கு, நட்பு வட்டத்தில் இருந்தவர்களிடம் கொட்டிக் கிடக்கும்.
வழிந்தோடும் குதூகலம்
திரைப்படங்களைப் பார்க்கையில் ரசிகர்களைக் குதூகலம் தொற்றுவதென்பது மிக முக்கியமானது. அந்த தருணங்கள் தான் திரையோடு ஒருவரைக் கட்டிப் போடுகிறது. அது சரியாக நிகழ்ந்தால், அந்த படைப்பும் கொண்டாடப்படும். அவற்றோடு சம்பந்தப்பட்ட கலைஞர்களைக் கொண்டாடித் தள்ளுவார்கள் ரசிகர்கள்.
தனது குரலின் வழியே, அப்படியொரு குதூகலத்தையும் கொண்டாட்ட மனநிலையையும் உருவாக்கியவர் பவதாரிணி. தன்னில் இருந்து வெளிப்பட்ட இசையின் வழியாக அதைச் சாதிக்க வேண்டுமென்ற விருப்பத்தின் பிரதிபலிப்பாகவே அதனைக் கருத வேண்டியிருக்கிறது.
மிகக்குறைவான படைப்புகளில் அவர் பங்களிப்பு அமைந்திருந்தாலும், அவற்றில் ஒன்றைக் கூட நம்மால் விலக்கி வைக்க முடியாதென்பது அவரது சிறப்புகளில் ஒன்று.
‘டைம்’ படத்தில் இடம்பெற்ற ‘தவிக்கிறேன் தவிக்கிறேன்’ பாடலில் ‘காலமே காலமே காலத்தால் அழியா வாழ்வு கொடு’ என்ற வரிகளைப் பாடியிருப்பார் பவதாரிணி. தெரிந்தோ தெரியாமலோ அது அவரது வாழ்வுக்கும் பொருந்திப்போனதை என்னவென்று சொல்வது?!
உதய் பாடகலிங்கம்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தனுஷ் படத்தை இயக்கும் அடுத்த தெலுங்கு இயக்குனர் இவரா?
குடியரசு தினவிழா கோலாகலம்: தேசியக்கொடி ஏற்றினார் திரவுபதி முர்மு