கடந்த இரண்டு வாரங்களாக இண்டர்நெட் உலகில் எங்கு திரும்பினாலும் ஆர்.ஜே.பாலாஜி முகம் தான் இருந்தது. எந்த வீடியோவை தொட்டாலும், ‘டேய் பச்சை சட்டை, வர்ற 25ஆம் தேதி என் படத்தை போய் பாரு’ என அமர்க்களமாய் புரொமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வந்தார் ஆர்.ஜே.பாலாஜி.
இது வழக்கமாக தன்னுடைய பட ரிலீஸ் வேளைகளில் அவர் செய்வதே என்றாலும், அத்தனை புரொமோஷன் பேட்டிகளும் சுவாரஸ்யமாகவே இருந்தது. அதே சுவாரஸ்யம் படத்தில் இருக்கும் என்கிற நம்பிக்கையுடன் ‘சிங்கப்பூர் சலூன்’ படம் திரையிடப்படும் தியேட்டருக்குள் சென்றோம்.
படத்தின் தொடக்க காட்சியிலேயே தான் கட்டிய பிரம்மாண்ட சலூனில் இருக்கும் கதாநாயகன், தற்கொலைக்கு முயல்கிறான். இப்படியான ஒரு ஒப்பனிங் காட்சி அழுத்தமான, சுவாரஸ்யமான திரைக்கதைக்கு ஏற்ற ஒரு ஆரம்பம் தான். கட் செய்தால் அப்படியே பிளாஸ்பேக்கில் ஆர்.ஜே.பாலாஜியின் பதின்பருவம் காட்டப்படுகிறது.
பதின்பருவ காதல், நட்பு, ஊர், ஊரில் அவரை ஈர்க்கும் முடி திருத்தும் ’சாச்சா’ என்கிற கதாபாத்திரம், அந்த கதாபாத்திரத்திற்கும் ஆர்.ஜே.பாலாஜிக்கும் இடையேயான உறவு, என சிறப்பாகவே இருந்தது. அந்த பிளாஸ்பேக் காட்சிகளில் நடித்திருந்த சிறுவர்களும் மிக சிறப்பாகவே நடித்திருந்தனர். இருந்தாலும் அவர்களை கொஞ்சம் அளவாக நடிக்க வைத்திருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கக் கூடும்.
தன்னை ஈர்த்த ‘சாச்சா’-வைப் போல் தானும் ஒரு சிறந்த ஹேர் ஸ்டைலிஸ்ட் ஆக வேண்டும் என நினைக்கிறார் ஆர்.ஜே.பாலாஜி. அவருக்கு உறுதுணையாய் இருக்கும் தந்தையாய் வருகிறார் ‘தலைவாசல்’ விஜய். ‘படிப்பு வரலன்னா செரைக்கத் தான் போணும்னு சொல்லுவாங்க. என்ன யாரும் அப்படி சொல்லக் கூடாதுன்னு தான் நல்லா படிச்சிட்டு எனக்கு பிடிச்ச வேலைய செய்யப் போறேன்’ என ஆர்.ஜே.பாலாஜி பேசும் வசனம் பிரமாதம்.
அவரது கல்லூரி காதல் காட்சிகள் பெரிதாக அழுத்தம் ஏற்படுத்தவில்லை. அதனால் அவருக்கு ஏற்படும் இழப்பு பார்ப்போரை பெரிதாக பாதிக்கவில்லை. அதுவரை மெல்லிய ஃபீல் குட் டிராமாவைப் போல் நகர்ந்த திரைக்கதை, சத்யராஜின் எண்ட்ரிக்கு பிறகு ஹியூமர் ராக்கெட்டில் ஹைஸ்பீடு எடுக்கிறது.
இந்தப் படத்தின் மிகப் பெரிய பலம் சத்யராஜின் கதாபாத்திரம் என்றே சொல்லலாம். படத்தில் ஆர்.ஜே.பாலாஜியின் கதாபாத்திர வடிவமைப்பை விட சத்யராஜின் கதாபாத்திரமே சிறப்பாக எழுதப்பட்டு இருந்தது. நிச்சயம் அப்படி ஒரு கதாபாத்திரத்தை நம் வாழ்வில் என்றாவது கடந்து வந்திருப்போம். சத்யராஜே இந்தப் படம் சார்ந்த பல மேடைகளில் கூறியது போல், இதற்கு பிறகு இது போன்ற முழு நேர காமெடி கேரக்டர்கள் அவரைத் தேடி வரப் போவது நிச்சயம். குறிப்பாக பாரில் வரும் ஒரு காமெடி காட்சியில் சத்யராஜின் உடல்மொழி, வசனம், ரியாக்ஷன் என அனைத்திலும் அனுபவமிக்க பட்டையை கிளப்புகிறார்.
அவருடன் ரோபோ சங்கரின் வசன உச்சரிப்பு, ரியாக்ஷன் என அந்த காம்பினேஷனே ஆடியன்ஸை சிரிப்பில் அதிர வைக்கிறது. ஆனால், படத்தின் இரண்டாம் பாதியில் கதை, ரியாலிட்டி ஷோ, இயற்கையின் முக்கியத்துவம், மரங்களின் முக்கியத்துவம் என அப்படியே எங்கெங்கோ திரும்புகிறது.
பொதுவாக இது போன்ற திரைப்படங்களில் ஹீரோ ஒரு சாதரண இளைஞனாக இருக்க வேண்டும். அவன் அடைய நினைக்கும் இலக்கு மிகப் பெரியதாக, சிக்கல் மிக்கதாக இருக்க வேண்டும். அந்த சிக்கல்களை ஹீரோ எப்படி கடக்கிறான், தன் இலக்கை அடைகிறான் என்பதோடு முடியும் கிளைமாக்ஸ் காட்சி சுபம். இது போன்ற படங்களை ‘அண்டர்டாக்(under dog)’ ஜானர் படங்கள் என சொல்வார்கள். தமிழில் அதற்கு ஒரு அற்புத எடுத்துக்காட்டு ’சூரரைப் போற்று’.
ஆனால், இந்தப் படத்தில் ஹீரோ 3 கோடி ரூபாய் செலவில் ஒரு சலூனை ஆரம்பிக்கிறார். அப்படி ஒரு சலூனை எவரும் நம்மூரில் பார்த்திருக்கவே முடியாது. ஏறத்தாழ ஒரு ஸ்டார் ஹோட்டல் போல் வடிவமைக்கப்பட்டுள்ளது அந்த சலூன்.
ஆக, இங்கேயே படம் கொஞ்சம் சறுக்குவதை உணர முடிந்தது. பார்க்கும் சாதாரண இளைஞனை விட்டு கொஞ்சம் அந்நியமானது. மேலும், இந்தப் படத்தில் உள்ள களமான ஹேர் ஸ்டைலிஸ்ட் துறை, கலை குறித்த ஆழமான காட்சிகள் எதுவும் இந்தப் படத்தில் இல்லை என்பதால் அந்த களம் குறித்தே ஒரு மேம்போக்கான பார்வையே தென்பட்டது.
படத்தின் கலை வடிவமைப்பு, குறிப்பாக பழைய சலூன், பிரம்மாண்ட மாடர்ன் சலூன், என அனைத்துமே சிறப்பாக இருந்தது. விவேக் மெர்வினின் பாடல்கள், ஜாவெட் ரியாஸின் பின்னணி இசை படத்திற்கு நிச்சயம் வலு சேர்க்கிறது. மற்றபடி படத்தின் முக்கியமான காட்சியில் இடம்பெற்றுள்ள கிராஃபிக்ஸ் படு மோசமாக அமைக்கப்பட்டது பெரும் உறுத்தலாகவே இருந்தது. மொத்தத்தில் நம்மை முதல் பாதியில் வாய் விட்டு சிரிக்க வைக்கும் ’சிங்கப்பூர் சலூன்’ இரண்டாம் பாதியில் பொறுமையை சீண்டுகிறது.
– ஷா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
‘கோவாவுக்கு பதிலாக அயோத்திக்கு தேனிலவு’ – விவாகரத்து கோரிய இளம்பெண்!
குடியரசு தினம்: ஆளுநர் ரவி தேசியக்கொடி ஏற்றினார்!
நேரடி நெல் கொள்முதல்: அன்புமணி ராமதாஸுக்கு சக்கரபாணி விளக்கம்!