ஞானவேல்ராஜா ஸ்டுடியோ கிரீன் சார்பில் தயாரித்திருக்கும் படம் பத்துதல.
கன்னடத்தில் ஷிவ ராஜ்குமார் நடிப்பில் ‘முஃப்டி’ எனும் பெயரில் கடந்த 2017ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன இப்படம் அந்த வருடம் கன்னடத்தில் வெளியாகி அதிக வசூல் செய்த படங்களில் முதல் இடத்தை பிடித்தது.
இப்படத்தை முதலில் அப்படியே தமிழில் ரீமேக் செய்ய திட்டமிட்டு அதில் சிலம்பரசன், ஷிவ ராஜ்குமார் கேரக்டரில் நடிக்க உள்ளதாகவும், இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க உள்ளதாகவும் கடந்த 2019-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.
முஃப்டி படத்தை இயக்கிய நாரதன், அதன் தமிழ் ரீமேக்கையும் இயக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் வழக்கம்போல சிலம்பரசனுக்கும் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு படம் முடங்கியது.
இதையடுத்து கொரோனா பொது முடக்கத்தின்போது படப்பிடிப்புகள் நடைபெறவில்லை. அந்த காலகட்டத்தில் சிலம்பரசன் உடல் எடையை குறைத்தார்.
அவர் நடிக்கும் படங்களை தயாரிக்க தயாரிப்பாளர்கள் தயங்கி, தவிர்த்து வந்த நிலையில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி துணிந்து சிலம்பரசன் நாயகனாக நடித்த மாநாடு படத்தை தயாரித்தார்.
பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு படத்தை சுரேஷ் காமாட்சி ரீலீஸ் செய்தார். படத்தில் வில்லனாக நடித்த எஸ்.ஜே.சூர்யா- சிலம்பரசன் காம்பினேஷன் படத்தை மிகப்பெரும் வெற்றிபெற வைத்தது.
அதன் பின் சிலம்பரசன் – ஞானவேல் ராஜாவுக்கு இடையில் சமரச பேச்சுவார்த்தைகள் நடைபெற்று படப்பிடிப்பை மீண்டும் தொடர முடிவு செய்யப்பட்டது.
நீண்ட காலமானதால் இயக்குநர் நாரதன் படத்தை இயக்குவதில் இருந்து விலகினார்.
அதன் பின் ஒபிலி என். கிருஷ்ணா இயக்குநராக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
முஃப்டி படத்தை அப்படியே தமிழில் எடுக்காமல் திரைக்கதை மூலத்தை மட்டும் எடுத்துக்கொண்டு தமிழ்நாடு அரசியலை பின்புலமாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டு படப்பிடிப்பை நிறைவு செய்தனர்.
இன்றைய இளம் கதாநாயகன் கவுதம் கார்த்திக், நாயகியாக ப்ரியா பவானி சங்கர், கௌதம்மேனன் ஆகியோர் படத்தில் இணைக்கப்பட்டனர், ஏ.ஆர்.ரஹ்மான் இசை என படத்திற்கு புது கலர் உருவானது.
இதற்கிடையில் கௌதம் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு வணிகரீதியாக வெற்றிபெற்றது.
பத்துதல படத்திற்கு கூடுதல் வணிக மதிப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது.
நேற்று உலகமெங்கும் 1150 திரைகளில் பத்துதல ரிலீஸ் ஆனது. சுமார் 40 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்ட இந்த படம் வெளியீட்டுக்கு முன்பே சுமார் 70 கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்யப்பட்டது.
தமிழகத்தில் 450 திரைகளில் வெளியான பத்துதல முதல் நாள் திரையரங்குகளில் டிக்கெட் விற்பனை மூலம் 12.3 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக படத்தை தயாரித்துள்ள ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
வழக்கமாக வெள்ளிக்கிழமை புதியபடங்கள் வெளியாகும். பத்துதல ஒரு நாள் முன்னதாக வியாழக்கிழமை ரீலீஸ் செய்யப்பட்டு 12.3 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்துள்ளது திரைப்பட வணிக வட்டாரங்களில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
இராமானுஜம்
கல்லூரிகளுக்கு மாஸ் திட்டங்கள்: பொன்முடி வெளியிட்ட 23 அறிவிப்புகள்!
விழுப்புரம் சரக புதிய டிஐஜி யார்?