simbu joined with thug life
கமல் – மணிரத்னத்தின் ‘தக் லைஃப் படத்தில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ஒருவர் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
‘நாயகன்’ படத்துக்கு பிறகு 34 வருடங்கள் கழித்து மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் ‘தக் லைஃப்’. இதில் அவருடன் சேர்ந்து ஜெயம் ரவி, கௌதம் கார்த்திக், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, அபிராமி என முன்னணி நட்சத்திரங்கள் பலரும் நடித்து வருகின்றனர்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வரும் இப்படத்தை கமலின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ், உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் என மூன்று பெரும் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
கமலின் 234-வது படமாக உருவாகி வரும் ‘தக் லைஃப்’ ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகவும் உள்ளது. இதற்கிடையில் கால்ஷீட் பிரச்சினை காரணமாக இப்படத்தில் இருந்து சமீபத்தில் நடிகர் துல்கர் சல்மான் விலகினார்.
துல்கர் சல்மானின் இந்த விலகல் ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்தது. என்றாலும் அந்த கதாபாத்திரத்தில் நடிக்கப்போவது யார்? என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் ஏற்கனவே இந்த வேடத்தில் நடிக்க சிம்புவிடம் கேட்டிருந்த மணிரத்னம் தற்போது மீண்டும் அதற்கான முயற்சிகளை தொடங்கி இருக்கிறாராம்.
முன்னதாக கால்ஷீட் பிரச்சினை மற்றும் தேசிங்கு பெரியசாமி படத்திற்காக தோற்றத்தினை மாற்றியது ஆகிய காரணங்களால் சிம்புவால் ஒப்புக்கொள்ள முடியவில்லையாம்.
ஆனால் தற்போதைய சூழ்நிலையில் சிம்பு இந்த வாய்ப்பினை ஏற்றுக்கொள்ளும் முடிவுக்கு வந்துள்ளாராம்.
சிம்புவின் நடிப்புத்திறன் அனைவருக்கும் தெரியும் என்பதால் அதற்கு தீனி போடுவது போல ஒரு கதாபாத்திரத்தினைத் தான் மணிரத்னம் உருவாக்கி இருக்கிறாராம்.
எல்லாம் சரியாக அமைந்து சிம்பு இப்படத்தில் நடித்தால் கமல்-மணிரத்னம்-சிம்பு காம்போவில் உருவாகும் இப்படம் பாக்ஸ் ஆபிசையும் ஒரு கலக்கு கலக்கி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நேற்று அட்மிஷன், இன்று ஆபரேஷன்… அப்பல்லோவில் அஜித்! முழு ஹெல்த் அப்டேட்!