கொரோனா குமார் படத்தை முடிக்காமல் மற்ற படங்களில் நடிக்க சிம்புவுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற வேல்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவன கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் இன்று (நவம்பர் 10) நிராகரித்துள்ளது.
வேல்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் கொரோனா குமார் படம் தயாரிக்க முடிவு செய்து நடிகர் சிம்புவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த படத்தில் நடிப்பதற்கு சிம்புவுக்கு ரூ.9.5 கோடி சம்பளம் பேசப்பட்டு ரூ.4.5 கோடி முன்பணமாக 2021-ஆம் ஆண்டு கொடுக்கப்பட்டது.
பணத்தை பெற்றுக்கொண்டு படப்பிடிப்பிற்கு சிம்பு வராததால் கொரோனா குமார் படத்தை முடித்து கொடுக்காமல் மற்ற படங்களில் நடிக்க அவருக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணையில் கொரோனா குமார் பட விவகாரம் தொடர்பாக வேல்ஸ் நிறுவனம், சிம்பு இடையே போடப்பட்ட ஒப்பந்தம் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் வேல்ஸ் நிறுவனம் ரூ.1 கோடி மட்டுமே சிம்புவுக்கு வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து ஒப்பந்தத்தில் உள்ளபடி ரூ.1 கோடியை வேல்ஸ் பிலிம் நிறுவனத்திற்கு செலுத்த சிம்புவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்தநிலையில் கொரோனா குமார் பட வழக்கு நீதிபதி கி.சரவணன் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.
நடிகர் சிம்பு தரப்பில், நீதிமன்ற உத்தரவுப்படி ரூ.1 கோடி டெபாசிட் செய்ததற்கான ரசீதை தாக்கல் செய்தனர்.
இதனையடுத்து நீதிபதி கி.சரவணன், “டெபாசிட் செய்யப்பட்ட தொகை 2 மாதங்களுக்கு மட்டுமே செல்லும். இந்த விவகாரத்தில் மத்தியஸ்தராக மூத்த வழக்கறிஞர் என்.என்.ராஜா நியமிக்கப்படுகிறார்.
கொரோனா குமார் படத்தில் நடிக்காமல் மற்ற படத்தில் நடிக்க சிம்புவுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற வேல்ஸ் நிறுவன கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. சிம்பு வெளிநாடுகளுக்கு செல்வதற்கோ, வேறு படங்களில் நடிப்பதற்கோ தடை விதித்தால் மற்ற நிறுவனங்களுடன் அவர் தொழில் ரீதியாக மேற்கொண்ட ஒப்பந்தங்கள் பாதிக்கப்படும்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
2024-ல் எத்தனை நாட்கள் பொது விடுமுறை!
டிடி பொதிகை பெயர் மாற்றம்: எல்.முருகன் அறிவிப்பு!