மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் பிறந்த தினத்தை, ஈரோட்டில் அவரது தீவிர ரசிகர் ஒருவர் வித்தியாசமாக கொண்டாடி இருக்கிறார்.
80 காலக்கட்டம் தொடங்கி தற்போதுள்ள தலைமுறை வரை இன்னும் ரசிகர்களை கொண்டவர் என்றால் அது சில்க் ஸ்மிதா மட்டும்தான்.
சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அதன்பிறகு புகழின் உச்சிக்கு சென்ற நடிகை சில்க் ஸ்மிதாவின் 63வது பிறந்தநாள் இன்று(டிசம்பர்).
அவரது பிறந்தநாளை ரசிகர்கள் இன்றுவரை கொண்டாடி வருகின்றனர். அந்த வரிசையில், ஈரோட்டில் அவரது ரசிகர் ஒருவர் சில்க்கின் பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடி இருக்கிறார்.
ஈரோடு அகில் மேடு வீதியில் தேநீர் கடை நடத்தி வரும் குமார், தமிழ் திரையுலகின் கவர்ச்சி நடிகையாக வலம் வந்த சில்க் சுமிதாவின் தீவிர ரசிகராவார்.
இவரது கடை முழுவதும் எப்போதும் சில்க் சுமிதாவின் புகைப்படங்களும், அவரது நினைவுகளும் நிறைந்து காட்சியளிக்கும்.
ஒவ்வொரு ஆண்டும் சில்க் சுமிதாவின் பிறந்த தினத்தை நண்பர்களுடன் கொண்டாடி வரும் குமார், இந்த ஆண்டு தனது மகளின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில், தூய்மை பணியாளர்களுடன் இணைந்து கொண்டாடினார்.
மலர்களால் அலங்கரிக்த சில்க் சுமிதாவின் படத்திற்கு முன்பாக கேக் வெட்டி கொண்டாடிய அவர், அனைவருக்கும் லட்டு மற்றும் இனிப்புகளை வழங்கினார்.
மேலும், 50 தூய்மை பணியாளர்களுக்கு இலவசமாக புத்தாடைகளை வழங்கி மகிழ்வை பரிமாறி கொண்டார்.
சில்க் சுமிதா மறைந்து பல ஆண்டுகள் ஆனாலும், அவரது நடிப்பும், கண்களால் கவரும் அவரது உடல் மொழியும் மறக்க முடியாதது என குமார் தெரிவித்தார்.
சில்க் சுமிதாவின் பிறந்த தினத்தை கொண்டாட உறுதுணையாக இருந்த குமாரின் குடும்பத்தினர், சில்க் சுமிதாவை கவர்ச்சி நடிகையாக பார்க்காமல் நடிப்பாலும் திறமையாலும் இன்று வரை பலரை ஆச்சரியப்பட வைக்கும் பெண்ணாக அவர் வாழ்வதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் சில்க் சுமிதாவின் புகைப்படம் அடங்கிய காலண்டர்களை குமார் விநியோகம் செய்வது வழக்கம்.
இதை போல் அடுத்த ஆண்டிற்கான நாள்காட்டியை சில்க் சுமிதாவின் நினைவாக தேநீர் கடை வாடிக்கையாளர்களுக்கு வழங்கிய அவர், சில்க் சுமிதாவின் புகைப்படத்துடன் கூடிய கடந்த ஆண்டுகளின் காலண்டர்களையும் கடையில் வரிசைபடுத்தி வைத்திருக்கிறார்.
கலை.ரா
வருது வருது… வாட்ஸ் அப்பில் மெட்ரோ ரயில் டிக்கெட்
குவாரி, குட்காவில் லஞ்சம்-கூவத்தூரில் செலவு: விஜயபாஸ்கரை சிக்க வைக்கும் ஐடி