நடிகர் விஷால் நடித்துள்ள ‘லத்தி’ படத்தின் வெளியீடு சிலம்பரசனின் பட வெளியீட்டுடன் போட்டியிட உள்ளது.
‘வீரமே வாகை சூடும்’ படத்தை அடுத்து நடிகர் விஷால் நடித்துள்ள படம் ‘லத்தி’. புதுமுக இயக்குநர் வினோத் இந்த படத்தை இயக்கியுள்ளார். படத்தின் கதாநாயகியாக சுனைனா நடிக்கிறார். விஷாலின் நண்பர்களான ரமணா, நந்தா இருவரின் ராணா புரொடக்ஷன்ஸ் படத்தை தயாரிக்கிறது. படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
படத்தின் வெளியீட்டினை அடுத்த மாதம் 12ம் தேதிக்கு படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால், இறுதிக்கட்ட படப்பிடிப்பின் போது சண்டை காட்சி ஒன்றில் விஷாலுக்கு எதிர்பாராத விதமாக அடிபட, அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. படப்பிடிப்பில் விஷாலுக்கு அடிபட்ட வீடியோ ரசிகர்களிடயே கவனத்தை பெற்றது. இந்த எதிர்பாராத விபத்து காரணமாக, ‘லத்தி’ படப்பிடிப்பிலும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளிலும் தாமதம் ஏற்பட்டிருக்கிறது.
இதனால், ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி என்று இருந்த ரிலீஸ் தேதியை இப்போது செப்டம்பர் மாதம் 15ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர். இதே நாளில் நடிகர் சிலம்பரசனின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் வெளியீடும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
‘லத்தி’ படத்தில் கான்ஸ்டபிள் ஒருவரின் வாழ்க்கை படமாக காண்பிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் விஷாலின் கதாப்பாத்திரத்தின் பெயர் முருகானந்தம். ஏற்கனவே, போலீஸாக பல கதாபாத்திரங்களிலும் நடித்திருந்தாலும் கான்ஸ்டபிள் கதாபாத்திரம் ஏற்பது இதுவே முதல்முறை என்கிறார் விஷால். நடிகர் பிரபு இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பின்னணி இசை சாம் சிஎஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
–ஆதிரா