சிவராஜ் குமார் கன்னடத்தில் கதாநாயகனாக நடித்து 2017ம் ஆண்டு வெளியான படம் “முஃப்டி”. கர்நாடக மாநிலத்தில் வெற்றிபெற்ற இந்த படத்தின் தமிழ் ரீமேக் தான் சிலம்பரசன் நாயகனாக நடித்திருக்கும் ’பத்துதல’.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் படத்தைத் தமிழுக்கு ஏற்ப திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் கிருஷ்ணா. சிலம்பரசனுடன், கௌதம் கார்த்திக், கௌதம்மேனன், பிரியா பவானி சங்கர், கலையரசன், ரெடின் கிங்ஸ்லி முதலியோர் நடித்திருக்கின்றனர்.
மார்ச் 30 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ள பத்து தல படத்தின் முன்னோட்டம் நேற்று (மார்ச் 3) மாலை வெளியிடப்பட்டிருக்கிறது.
சிலம்பரசன் ரசிகர்களால் மட்டும் கொண்டாடப்பட்டுவரும் பத்துதல முன்னோட்டம் என்ன சொல்ல வருகிறது.
மாநாடு, வெந்து தணிந்தது காடு படங்களில் கதைக்குள் கதாநாயகனாக நடித்திருந்த சிலம்பரசன் பத்துதல படத்தில் வழக்கமான கதாநாயக பிம்பத்தை தூக்கிப் பிடிக்கும் திரைக்கதையில் நடித்திருக்கிறார் என்பதை முன்னோட்டம் உணர்த்துகிறது.
திரைக்கதை என்னவோ தமிழகத்தை ஆளும் அரசியல் கட்சிக்கு அட்சய பாத்திரமாக நன்கொடை வழங்கும் மணல் மாபியா பற்றியதாக இருக்கிறது.
கன்னியாகுமரி முதல் தூத்துக்குடி வரையிலான கடற்கரையில் கனிம வளம் நிரம்பிய மணல் பரப்பை குத்தகைக்கு எடுத்து வெளிநாடுகளில் கனிமவள மணலை கோடிக்கணக்கில் வியாபாரம் செய்து வரும் வைகுண்டராஜனை நினைவூட்டுகிறது சிலம்பரசன் நடித்திருக்கும் ஏ.ஜி.ஆர் எனும் சரவணன் கதாபாத்திரம்.
அவர் பேசுகிற பஞ்ச் வசனங்கள் தமிழ் சினிமாவில் அவருக்குப் போட்டியாளர்களுக்கு பதில்கூறுவதை போன்றே இருக்கிறது.
“மண்ண ஆளுகிறவனுக்குத்தான் எல்லை, அள்ளுகிற எனக்கு அது இல்ல”, “நான் படியேறி மேல வந்தவன் இல்ல எதிரிகள மிதிச்சு ஏறி மேல வந்தவன்”
போன்ற பஞ்ச் வசனங்கள் விஸ்வரூபமாக வளர்ந்து நிற்கும் தனுஷ்க்கு கூறுவது போன்றே இருக்கிறது.
ஏனென்றால் கடந்த பல வருடங்களாக சிலம்பரசன் நடித்த படங்கள் தோல்விகளைத் தழுவியதுடன் பெரும் சர்ச்சைகளில் சிக்கினார்.
இனிமேல் சிலம்பரசனை வைத்துப் படமெடுப்பது ரிஸ்க்கான விஷயம் என்கிற நிலையில் சுரேஷ் காமாட்சி பெரும் முயற்சியில் மாநாடு படம் தயாரிக்கப்பட்டு வெளியாகி வெற்றி பெற்றது.
இதன் மூலம் சிலம்பரசன் மீதான நம்பிக்கை தயாரிப்பாளர்களுக்கு ஏற்பட்டது. வெற்றி பெற்ற மாநாடு, வெந்து தணிந்தது காடு இரண்டுமே இயக்குநர்கள் சொல் கேட்டு சிலம்பரசன் நடித்த படங்கள்.
பத்துதல முழுக்க சிலம்பரசன் விருப்பப்படி இயக்கப்பட்ட படமாக டிரைலர் பஞ்ச் டயலாக் உணர்த்துகிறது.
இராமானுஜம்
இந்தியா ஊக்கமளிக்கிறது: மோடியை சந்தித்த பில்கேட்ஸ்
வதந்தி பரப்பிய பாஜக நிர்வாகி: டெல்லி விரைந்த தனிப்படை!