சிலம்பரசன் நடித்திருக்கும் வெந்து தணிந்தது காடு படத்தின் டிரைலரை படக்குழு இன்று (செப்டம்பர் 2) வெளியிட்டது.
கவுதம் வசுதேவ் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் வெந்து தணிந்தது காடு படம் தயாராகி வெளியீட்டுக்குக் காத்திருக்கிறது. ஆக்ஷன், த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் இந்த படத்தில் சிம்புவிற்கு ஜோடியாகச் சித்தி இட்னானி நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் ராதிகா சரத்குமார் நடித்துள்ளார்.
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பாக ஐசரி கணேஷ் படத்தை தயாரித்துள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இது சிம்புவிற்கு 47 ஆவது படமாகும்.
இந்த படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. படத்தின் கதையை இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் “சில சமயம் உண்மையை சொல்லறது, கதை சொல்லறத விட கஷ்டம், இது ஒரு உண்மையான மனிதனுடைய கதை” என்று தொடங்குகிறார்.
படத்தில் சிம்பு ஆரம்பத்தில் ஒரு அப்பாவியான மனிதனாக இருந்து இறுதியில் கொலை செய்யும் அளவிற்கு செல்வது போல் காட்சியமைக்கப்பட்டுள்ளது. சிம்பு ஏதோ ஒரு சிக்கலில் சிக்கிக் கொண்டு அதில் இருந்து தப்பிக்க முயல்கிறார்.
சித்தி இட்னானியுடன் காதல் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. ட்ரெய்லரில் சஸ்பென்ஸ், த்ரில்லருடன் சேர்ந்து சண்டை காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
இப்படம் செப்டம்பர் 15 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. தமிழகத்தில் இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது.
மோனிஷா
லாபம் தருமா வெந்து தணிந்தது காடு’!