இது பெற்றோர்களுக்கான படம்
விஜய் சேதுபதி நடித்த பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சிந்துபாத் படங்கள் பார்த்தவர்களுக்கு, அவற்றில் இருக்கும் அழகியலும் கதை சொல்லும் பாங்கும் ரொம்பப் பிடிக்கும். மூன்றாவதாக வந்த சிந்துபாத்தில் இருந்த நேர்த்திக் குறைவு, அதன் இயக்குனர் எஸ். யு. அருண்குமாரை ரசிகர்கள் மறக்கக் காரணமானது. அந்த வீழ்ச்சியில் இருந்து மீண்டு வந்து, அவர் தந்திருக்கும் படமே ‘சித்தா’. இதில் சித்தார்த், நிமிஷா சஜயன், பாக்யாஞ்சலி, குழந்தைகள் சகஸ்ரஸ்ரீ, அபியா தஸ்னீம் உட்படப் பலர் நடித்துள்ளனர்.
பெண் குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல் பற்றி இப்படம் பேசுவதை முன்கூட்டியே உணர்த்தியது ட்ரெய்லர். படம் எப்படியிருக்கிறது? குடும்பத்தோடு பார்க்க முடியாத அளவுக்கு கோரமாக இருக்கிறதா அல்லது அந்தப் பிரச்சனையைச் சரியான முறையில் திரையில் காட்டியிருக்கிறதா?
சித்தா – பெயர்க் காரணம்
பழனியிலுள்ள உள்ளாட்சி அமைப்பில் இடைநிலைப் பணியாளராக இருப்பவர் ஈஸ்வரன் (சித்தார்த்). பள்ளிப் பருவத்தில் காதலித்த சக்தியை (நிமிஷா சஜயன்) மீண்டும் அவர் சந்திப்பதில் இருந்து கதை தொடங்குகிறது.
அண்ணி (பாக்யாஞ்சலி), அண்ணன் மகள் சுந்தரி (சகஸ்ரஸ்ரீ) உடன் வாழ்ந்து வருகிறார் ஈஸ்வரன். அண்ணன் இறந்ததால், வாரிசுரிமை அடிப்படையில் அந்த வேலையை அவர் பார்த்து வருகிறார். சிறுவயது முதலே சுந்தரிக்குப் பிடித்த ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து தேர்ந்தெடுக்கிறார் ஈஸ்வரன். பெண் குழந்தை என்பதால் பொத்திப் பாதுகாத்து வளர்க்க எண்ணுகிறார்.
குழந்தைக்குச் சிறிதளவில் கஷ்டம் என்றாலும், அவரால் தாங்க முடியாது. தனது நண்பர் வடிவேலுவின் சகோதரி மகள் பொன்னியிடமும் (அபியா தஸ்னீம்) அதே பாசத்தை அவர் வெளிப்படுத்துகிறார். இந்த நிலையில், பொன்னியிடம் பாலியல் அத்துமீறலை நிகழ்த்தியதாக ஈஸ்வரன் மீது பழி விழுகிறது. அதன்பிறகு, அவர் குற்றவாளி இல்லை என்ற உண்மை தெரிய வருவதற்குள் சுந்தரி காணாமல் போகிறார்.
குழந்தையைக் காணாமல் காவல் நிலையத்தில் ஈஸ்வரன் புகார் கொடுக்கையில், அடையாளம் தெரியாத நபரோடு சுந்தரி செல்வது பேருந்து நிலைய சிசிடிவி பதிவில் இருந்து தெரிய வருகிறது. அதற்கடுத்த நாள், பழனியில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவிலுள்ள நெடுஞ்சாலையோரத்தில் ஒரு சிறுமியின் பிணம் எரிக்கப்பட்டு சிதைந்த நிலையில் கிடைக்கிறது. ஆனால், ஈஸ்வரனும் அவரது அண்ணியும் ‘அது தங்களது மகளாக இருக்காது’ என்று உறுதியாக நம்புகின்றனர்.
இறந்தது சுந்தரியா? அவருக்கு என்ன நேர்ந்தது என்பதை பயத்தையும் பதற்றத்தையும் ஊட்டும் வகையில் சொல்கிறது ‘சித்தா’வின் இரண்டாம் பாதி.
நிரம்பியிருக்கும் யதார்த்தம்
’சிவப்பு மஞ்சள் பச்சை’யில் நம்மை வெகுவாக ஈர்த்த சித்தார்த், மீண்டும் ரசிகர்களின் வாழ்க்கைக்கு நெருக்கமான கதையொன்றைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.
பிச்சைக்காரன் படத்தில் ‘இந்த பக்கம் ஒரு ஹார்லிக்ஸ், இந்த பக்கம் ஒரு பூஸ்ட் தொங்குது’ என்று விஜய் ஆண்டனியை மூர்த்தி கிண்டலடிப்பார். சித்தார்த்தை எந்த படத்தில் பார்த்தாலும், ’ஒரு மெட்ரோபாய்’ சாயல் தெரியும். இதில் அது கொஞ்சம் கூட தென்படவில்லை என்பதே அவரது நடிப்புக்கான பாராட்டுப் பத்திரம்.
நிமிஷா சஜயனுக்கு இதில் கதையோடு இணைந்த பாத்திரமில்லை. ஆனாலும், அவரது இருப்பு திரைக்கதையில் லாஜிக் ஓட்டைகள் விழாதவாறு தாங்கிப் பிடிக்கிறது.
மலையாளப் படங்களில் குணசித்திர வேடங்களில் கலக்கும் பாக்யாஞ்சலி, நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழில் நடித்திருக்கிறார். கணவனை இழந்த கைம்பெண்ணாக, கொழுந்தன் உடன் வாழ்பவராக, அந்த பாத்திரத்தை வெகு இயல்பாகத் திரையில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
குழந்தைகள் சகஸ்ரஸ்ரீ, அபியா தஸ்னீம் நடிப்பைச் சார்ந்தே இப்படம் அமைந்துள்ளது. அவர்கள் அந்த எதிர்பார்ப்புக்கு நியாயம் செய்துள்ளது சிறப்பு.
வடிவேலுவாக நடித்தவர், இன்னொரு நண்பராக வருபவர், அவர்களது உறவினர்கள், ஊர்க்காரர்கள், போலீசார் என்று திரையில் வரும் ஒவ்வொருவரும் கதையின் முக்கியத்துவத்தை உணர்ந்து தோன்றியிருக்கின்றனர். அதிலும், வில்லனாக நடித்தவரின் இருப்பு நம்மை இருக்கை நுனிக்குக் கொண்டு வருகிறது.
’சித்தா’ திரைப்படம் குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறலைப் பேசுகிறது. இப்படியொரு கதையை வெறுமனே திரைப்படமாக நோக்காமல், ஒரு வாழ்க்கையாகப் பார்ப்பது மிக முக்கியம்.
இயக்குனர் எஸ்.யு.அருண்குமாரின் திரைக்கதை அமைப்பும், அதனைத் திரையில் காட்டப் பயன்படுத்தியிருக்கும் ட்ரீட்மெண்டும் படத்தில் யதார்த்தத்தை நிறைக்க உதவியிருக்கிறது. அதனாலேயே, ஒருவித பயமும் பதைபதைப்பும் ஆரம்பம் முதலே நம்முள் பரவுகிறது.
இயக்குனரின் கற்பனைகளுக்குத் திரையில் உருவம் தந்திருக்கிறது பாலாஜி சுப்பிரமணியனின் ஒளிப்பதிவு. இயற்கை அழகுடன் கூடிய ஒரு களத்தைத் தேர்ந்தெடுத்த காரணத்தால், பிரேம்களில் அழகூட்டலுக்கு முற்படாமல் கதை சொல்வதில் கவனம் செலுத்தியிருக்கிறது அவரது உழைப்பு.
சாதாரண மனிதர்களின் வீடுகள், காவல் நிலையங்கள், ஆளரவமற்ற கட்டடங்கள், நீதிமன்றம், மருத்துவமனை என்று நிஜ வாழ்வில் நாமே நேரில் பார்க்கும் உணர்வைத் திரையில் ஊட்ட உதவியிருக்கிறார் கலை இயக்குனர் சி.எஸ்.பாலச்சந்தர்.
படத்தொகுப்பாளர் சுரேஷ் பிரசாத் பெரிதாகக் குழப்பமின்றி கதை சொல்ல வகை செய்திருக்கிறார்.
ஒரு சித்தப்பாவுக்கும் மகளுக்குமான பாசப்பிணைப்பில் தொடங்கும் கதை, மெல்ல அந்தச் சிறுமி என்னவானார் என்ற தேடல் நோக்கி நகர்வதற்கு ஏற்ப பின்னணி இசை தந்திருக்கிறார் விஷால் சந்திரசேகர். அவரது இசை தரும் ‘த்ரில்’ உணர்வு அபாரம்.
சந்தோஷ் நாராயணன் மற்றும் திபு நிணன் தாமஸ் இசையில் பாடல்கள் மெலடி மெட்டுகளாக அமைந்திருக்கின்றன. ஆனால், கேட்டவுடனே ஈர்க்கும்விதமாக அவை இல்லை.
இவர்கள் தவிர்த்து ஒலியமைப்பு, ஒப்பனை என்று பல அம்சங்கள் இதில் சிலாகிக்கும்படியாக உள்ளன.
சமூகத்தில் நிகழும் குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல்களையும், அக்குற்றங்களைச் செய்துவரும் ஒரு கொடூரனையும் இப்படத்தில் காட்டியிருக்கிறார் இயக்குனர் எஸ்.யு.அருண்குமார். ஆனால், ஓரிடத்தில் கூட அப்பாதிப்பை நேரடியாகக் காட்டிப் பார்வையாளர்களின் மனதைப் பிறாண்ட அவர் முயற்சிக்கவில்லை. அதுவே, ஒரு படைப்பாளியாக ஒரு பெரும் பிரச்சனையை எவ்வளவு லாவகமாகக் கையாண்டிருக்கிறார் என்பதைக் காட்டுகிறது.
நுணுக்கமான சித்தரிப்புகள்
இந்த படத்தைப் பார்க்கும் ஒரு சாதாரண மனிதருக்கு, சித்தார்த்தும் பாக்யாஞ்சலியும் ஒரே வீட்டில் வாழ்வது நெருடலாகத் தோன்றக்கூடும். அதேபோல, பெண் குழந்தைகளிடத்தில் தவறான எண்ணம் இல்லாமல் சித்தார்த் பாத்திரம் பழகுவதும் வித்தியாசமாகத் தெரியலாம்.
அதுவே, சாதாரண மனிதருக்கும் அந்த நாயக பாத்திரத்திற்குமான இடைவெளியைக் காட்டிவிடும். படத்தில் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே சித்தார்த் ஹீரோயிசத்தை வெளிப்படுத்துகிறார். அப்போது, எதிரே இருக்கும் பாத்திரம் ‘அவன் நம்ம குழந்தை கேஸ்ல அக்யுஸ்டு இல்ல’ என்று சொல்லும். அதைக் கேட்டதும், இன்னும் ஆத்திரத்தோடு முஷ்டி முறுக்குவார் சித்தார்த். அந்த காட்சியை நியாயப்படுத்துவது, அப்பாத்திரத்தை தனித்துவமானதாக இயக்குனர் வடிவமைத்ததுதான்.
’அந்த அண்ணி ஏன் இன்னொரு கல்யாணம் செய்துகொள்ளவில்லை’ என்பது உட்படப் பெண் சுதந்திரம் சார்ந்தும் சில கேள்விகளை நாம் முன்வைக்கலாம். ஆனால், இப்படம் வெகு சாதாரண மனிதர்கள் எதிர்கொள்ளும் அசாதாரணமான பிரச்சனைகளை முன்வைக்கிறது. அதற்கான தீர்வாக, பெண் குழந்தைகளைச் சுயாதீனமானவர்களாக வளர்க்க வேண்டுமென்பதையும் முன்வைக்கிறது.
படத்தின் இறுதியாக வரும் அக்காட்சிகளை இன்னும் கொஞ்சம் விலாவாரியாகச் சொல்லியிருக்கலாம் என்பதைத் தாண்டி, இதில் ஒரு சாதாரண ரசிகர் உற்றுநோக்கும் அளவில் எந்தக் குறைகளும் இல்லை.
இந்த படத்தில் மிக நுணுக்கமான விவரிப்புகள் நிறைய உண்டு.
அதிலொன்று, வில்லன் பாத்திரம் ஓரிடத்தில் முடியை வழித்துவிட்டு வரும் காட்சி. அப்போது. அவரது கழுத்துப் பகுதியில் முடி இருப்பதாகவும், தலையில் சந்தனம் தேய்த்திருப்பதாகவும் காட்டப்பட்டிருக்கும். அதுவே, அந்த நபரைக் கூர்மையாகக் கவனிப்பவரைத் துணுக்குறச் செய்வதாக இருக்கும்.
சித்தார்த்தின் அண்ணன் எங்கிருக்கிறார்? சில ஆண்டுகள் நிமிஷா ஏன் வேறு ஊருக்குச் சென்றார் என்பது போன்ற பல கேள்விகள் படத்தின் தொடக்கத்தில் எழுகின்றன. அதற்கு, ஆங்காங்கே சில வசனங்கள் வழியே பதில் சொல்லப்படுகிறது. அவ்வளவு ஏன், தன்னைச் சார்ந்தவர்களின் பாதிப்பை நாயகனால் சகிக்க முடியாது எனும் அம்சம் கூட ‘பில்ட் அப்’ உடன் திரையில் சொல்லப்படவில்லை. இவையெல்லாம் ஒன்று சேர்ந்து, ‘சித்தா’வை சிறப்பானதாக்குகிறது.
ஒருகாலத்தில் ‘பூச்சாண்டி வந்திருவான்’ என்று சொல்லிக் குழந்தைகளைப் பயமுறுத்தும் வழக்கம் பரவலாக இருந்தது. குழந்தைகளைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கு அது உதவினாலும், நிஜத்தில் அவர்களை நிரந்தரப் பயத்தில் வைப்பதாகவே இருந்தது. இன்று, அந்த இடத்தை மொபைல் போன்கள் பிடித்துள்ளன. அதனைப் பயன்படுத்தி பல பூச்சாண்டிகள் சமூகத்தில் உலாவுகின்றனர் என்பதை பொட்டிலடித்தாற் போலச் சொல்லி நமது இன்றைய வாழ்க்கைமுறையைக் கேள்விக்குட்படுத்துகிறது ‘சித்தா’. அந்த வகையில், இது பெற்றோர்களுக்கான படமாக ஆகிறது.
உதய் பாடகலிங்கம்
ஜாப்ரா எலைட் இயர்போன்: சிறப்பம்சங்கள் என்ன?