ரொமாண்டிக் காமெடியா? ரொமான்ஸ் & காமெடியா?
உதயசங்கரன் பாடகலிங்கம்
திரையுலகில் சில காம்பினேஷன் எதிர்பார்ப்பை எகிற வைக்கும். குறைந்தபட்சமாக, சம்பந்தப்பட்ட கலைஞர்களின் தீவிர ரசிகர்களாக இருப்பவர்கள் அல்லது நற்சினிமா விரும்பிகளின் ஆவலைத் தூண்டுவதாக அவை அமையும். அதற்குச் சமீபத்திய உதாரணமாக இருந்தது ‘மிஸ் யூ’ பட ட்ரெய்லர்.
‘களத்தில் சந்திப்போம்’ படத்தில் அருள்நிதியையும் ஜீவாவையும் சமமாகத் திரையில் காண்பித்து புதியதொரு ‘டபுள் ஹீரோ’ சப்ஜெக்டை தந்த இயக்குனர் என்.ராஜசேகர் உடன் ‘சித்தா’ எனும் வெற்றிகரமான, வித்தியாசமான படத்தைத் தயாரித்து நடித்த சித்தார்த் இணைகிறார் என்பதுதான் அதற்குக் காரணமாக இருந்தது.
அந்த எதிர்பார்ப்பு நியாயமானதுதான் என்பதாகவே அப்பட ட்ரெய்லரும் இருந்தது. கடந்த மாதம் தியேட்டர்களில் வெளியாகியிருக்க வேண்டிய ‘மிஸ் யூ’ மழை காரணமாகத் தள்ளிவைக்கப்பட்டு தற்போது வெளியாகியிருக்கிறது.
எப்படி இருக்கிறது ‘மிஸ் யூ’ தரும் காட்சியனுபவம்?
கதைக்குள் கதை!
’பிளாஷ்பேக்கினுள் பிளாஷ்பேக்’ எனும் உத்தியைப் பயன்படுத்தி எஸ்.ஜே.சூர்யா ஒரு திரைப்படத்தை இயக்கப் போவதாகச் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு தகவல் பத்திரிகைகளில் வந்தது. சில படங்களில் அது ஒரு பகுதியாக இடம்பெற்றிருக்கிறது.
அதையே படத்தின் மையமாக வைத்து, அதற்கான முக்கியத்துவத்தைச் சரியாகத் தரும் வகையில் ஒரு கதையை உருவாக்கி, அதற்கேற்ற காட்சிகளை வடிவமைத்திருக்கிறார் என்.ராஜசேகர்.
வாசு (சித்தார்த்) எனும் இளைஞன் சினிமாவில் இயக்குனர் ஆக முயற்சித்து வருகிறார். ஒரு காபி ரெஸ்ட்ராண்டுக்கு சென்று வருவது அவரது வழக்கம்.
அப்படியொரு நாள் அங்கு செல்பவர் காபி அருந்துகிறார். அதன்பின்னர் காரில் பயணம் மேற்கொள்கிறார். அப்போது அந்த கார் மீது ஒரு கனரக வாகனம் மோதுகிறது.
படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் வாசு, தீவிர சிகிச்சைக்குப் பின் கண் விழிக்கிறார். ஆனால், கடைசி இரண்டு ஆண்டுகளில் நடந்த சம்பவங்கள் ஏதும் அவரது நினைவில் இல்லை.
அந்த தகவல் அறிந்ததும், வாசுவின் பெற்றோர் (ஜெயபிரகாஷ், அனுபமா) அதிர்கின்றனர். அவரது நட்புவட்டத்தில் இருப்பவர்களும் (மாறன், பால சரவணன், சாஸ்திகா, அருண்குமார்) அதனைக் கேட்டு வருத்தமுறுகின்றனர். அவர்களது முகத்தில் தெரியும் பதற்றம் ஏதோ ஒரு முக்கியமான விஷயத்தை மறைக்க முயற்சிப்பதை உணர்த்துகிறது.
சில மாதங்கள் கழித்து, வழக்கம்போலத் தனது இயல்பு வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கிறார் வாசு.
ஒருநாள் தற்செயலாக பாபியை (கருணாகரன்) சந்திக்கிறார் வாசு. அவர் பெங்களூருவில் ஒரு காபி ஷாப் வைத்திருக்கிறார்.
பாபி உடன் பெங்களூரு செல்கிறார் வாசு. அவரது பிளாட்டில் தங்குகிறார். அவரது கடைக்குச் சென்று வருகிறார். அப்போது சுப்புலட்சுமி (ஆஷிகா ரங்கநாத்) எனும் பெண்ணைப் பார்க்கிறார். பார்த்தவுடன் காதல் பார்வையை வீசுகிறார்.
தொடக்கத்தில் வாசுவைப் பார்த்து துணுக்குறும் சுப்புலட்சுமி, பின்னர் அவரைத் தவிர்க்க முடியாமல் பேச, பழக ஆரம்பிக்கிறார்.
சரியாக ஒரு வார காலத்தில், சுப்புலட்சுமியிடம் காதலைச் சொல்கிறார் வாசு. அதனை அவர் ஏற்பதாக இல்லை.
என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கும் வாசு, சென்னைக்குச் செல்ல முடிவெடுக்கிறார். அவருடன் பாபியும் செல்கிறார்.
சென்னையில் தனது தாயிடத்தில் சுப்புலட்சுமியின் புகைப்படத்தைக் காட்டி, ‘இவரை நான் திருமணம் செய்ய ஆசைப்படுகிறேன்’ என்கிறார். அதைக் கேட்டதும் தாய் அதிர்கிறார். உடனே, வாசுவின் நண்பர்களை வீட்டுக்கு வரவழைக்கிறார். அவர்களும் அந்த புகைப்படத்தைப் பார்த்ததும் அதிர்ச்சியடைகின்றனர்.
அந்த அதிர்ச்சிக்குப் பின்னிருக்கும் காரணம் என்ன? சுப்புலட்சுமியை வாசுவுக்கு முன்னரே தெரியுமா? இது போன்ற கேள்விகளுக்குப் பதிலளிக்கும்விதமாகவே இப்படத்தின் இரண்டாம் பாதி இருக்குமென்பது பாமர ரசிகனுக்கும் தெரிந்த ஒரு விஷயம் தான். அதுவே இப்படத்திலும் நிகழ்கிறது.
இதுவரை சொன்னது கதை என்று வைத்துக்கொண்டால், இந்த கதைக்குள் இருக்கும் கதையைச் சொல்கிறது இரண்டாம் பாதி. அதுவே இப்படத்தின் சிறப்பம்சம்.
ஈர்க்கும் கதை முடிச்சு!
வித்தியாசமான கதை என்று சொல்ல முடியாவிட்டாலும், இதில் உள்ள திருப்பங்கள் ஈர்க்கத்தக்கதாக இருக்கின்றன. மிக முக்கியமாக, இரண்டு ஆண்டுகளாக நடந்த சம்பவங்கள் எதுவுமே நாயகனின் நினைவில் இல்லை என்பதுவே இக்கதையின் மையமாக உள்ளது.
அதனை வைத்துக்கொண்டு ‘த்ரில்’ ஊட்டும் காட்சிகளில் கவனம் செலுத்தியிருக்கலாம். போலவே, இக்கதையில் சண்டைக்காட்சிகள் தேவையே இல்லை. குறைந்தபட்சமாக, அவற்றை ‘ஹீரோயிசம்’ தூக்கலாகக் காட்டியிருக்க வேண்டாம்.
தெலுங்கு ‘டப்பிங்’கையும் மனதில் கொண்டு அவற்றைச் செருகியிருப்பார்கள் போல!
காட்சி அமைப்பிலோ, ஆக்கத்திலோ பெரிதாகக் குறைகள் இல்லை. ஆனால், சுமார் ஒன்றரை டஜன் பாத்திரங்களே கதையில் பிரதானமாக வந்து போயிருக்கின்றன. அவற்றின் பணி நாயகனையும் நாயகியையும் சேர்த்து வைப்பதுதான் என்பதாகவே திரையில் தெரிகிறது. அதுவே, மேடை நாடகம் பார்க்கிற உணர்வைத் தருகிறது. அதனைச் சரி செய்திருக்கலாம்.
’செறிவாகப் படத்தொகுப்பைக் கையாள்கிறேன் பேர்வழி’ என்று நிதானமாக நகர்கிற திரைக்கதையின் மூச்சை இறுக்கியது போன்றும் தோன்றுகிறது. ‘அதுதான் நிகழ்ந்ததா’ என்பதைப் படக்குழுவினர் தான் தெளிவுபடுத்த வேண்டும். ஏனென்றால், இரண்டரை மணி நேரம் ஓடும்விதமாக இப்படம் அமைந்திருந்தால் எவரும் குறை சொல்லியிருக்கப் போவதில்லை.
அதேநேரத்தில் முன்பாதியில் ஒன்று, பின்பாதியில் ஒன்று எனத் தேவையற்ற இடங்களில் இரு பாடல்கள் வந்து போகின்றன. ‘ரொம்பநாள் கழிச்சு ஆடுனா கால் வலிக்கத்தான் செய்யும்’ என்று சித்தார்த்தைப் பார்த்து கருணாகரன் ‘சுய கிண்டல்’ அடிப்பதற்கு அதிலொரு பாடல் உதவியிருக்கிறது. அவ்வளவே!
’இந்த விஷயங்களே ஸ்கிரிப்டில் அபாரமாக இருந்த விஷயங்கள் திரையில் கதையாக உருமாறும்போது வெகு சாதாரணமாக ஆனதோ’ என்று எண்ண வைக்கிறது.
‘களத்தில் சந்திப்போம்’ பார்த்த எதிர்பார்ப்போடு வரும் நாம் கொஞ்சம் ‘ஜெர்க்’ ஆவதற்கு அதுவே காரணம்.
காட்சியாக்கத்தைப் பொறுத்தவரை தொழில்நுட்பக் குழுவினர் அனைவருமே சிறப்பாக ஒத்துழைத்திருக்கின்றனர்.
பளிச்சென்று தெரியும் வகையில், ஒவ்வொரு பிரேமையும் அழகுற அமைத்திருக்கிறார் கே.ஜி.வெங்கடேஷ்.
ஒரு கமர்ஷியல் படத்தை திரையில் அழகுறக் காணும் வகையில் கலை வடிவமைப்பைக் கையாண்டிருக்கிறார் சிவசங்கர்.
படத்தின் நீளத்தைத் தீர்மானிப்பதில் நம்மை ஏமாற்றிய படத்தொகுப்பாளர் தினேஷ் பொன்ராஜ், திரைக்கதையின் நடுப்பகுதியில் கதையைக் குழப்பமின்றிச் சொல்ல உதவியிருக்கிறார். குறிப்பாக, பிளாஷ்பேக் காட்சிக்குள் வரும் பிளாஷ்பேக்கை பிசிறுகள் இன்றி நமக்குக் கடத்துகிறார்.
இந்தப் படத்தின் பெரிய பலம், அசோக்கின் வசனங்கள். சித்தார்த் காதலைப் பற்றிப் பேசுவதாக இருந்தாலும் சரி, அவர் இயக்குகிற படத்தைப் பற்றிச் சொல்வதாக இருந்தாலும் சரி, மிகச்சில வரிகளில் ஈர்க்கும்படியாக அவ்விஷயங்கள் கடத்தப்பட்டிருக்கின்றன.
இது போக மாறன், கருணாகரண் அடிக்கும் காமெடி ஒன்லைன்கள் சட்டென்று சிரிக்க வைக்கின்றன.
சண்டைப்பயிற்சியாளர் தினேஷ் காசி, தெலுங்கு பட ரசிகர்களை மனதில் கொண்டு இதில் சித்தார்த்துக்கு சண்டைக்காட்சிகளை வடிவமைத்திருக்கிறார். அவரிடம் இயக்குனர் முழுக்கதையையும் சொல்லவில்லையா என்று தெரியவில்லை.
பின்னணி இசை மூட்டும் கிச்சுகிச்சு..!
நாயகன் சித்தார்த், நாயகி ஆஷிகா ரங்கநாத் இருவரும் முதன்முறையாகப் பேருந்தில் சந்திப்பதாக ஒரு காட்சி இதிலுண்டு. அக்காட்சியில் பின்னணி இசை வழியே நம்மைக் கிச்சுகிச்சு மூட்டியிருக்கிறார் இசையமைப்பாளர் ஜிப்ரான். இதர காட்சிகளின் தன்மையை மேலொங்கச் செய்வதிலும் அவரது பங்களிப்பு அருமை.
அக்கரு பக்கரு, சொன்னாரு நைனா பாடல்களை ‘டெலிடட் வீடியோ’ பாணியில் தனியாக நம் பார்வைக்கு வைத்திருக்கலாம்.
மற்றபடி ‘நீ என்ன பாத்தியே’, ’தம தம’ பாடல்கள் சட்டென்று ஈர்க்கின்றன. இன்னும் இரண்டு பாடல்கள் தியேட்டரில் பார்க்கையில் ரசிக்க வைக்கின்றன.
கண்களைக் கவரும் இவர்கள் போக ஆடை வடிவமைப்பு, காதுக்கு இதமான ஒலி வடிவமைப்பு, காட்சியாக்கத்தில் அழகைக் கூட்டும் டிஐ, விஎஃப்எக்ஸ் என்று பலரது உழைப்பு திரையில் தெரிகிறது.
சித்தார்த்தின் நடிப்பு காட்சிகளுக்குத் தகுந்தவாறு இருந்தாலும் சண்டைக்காட்சிகள், பாடல்களில் மட்டும் குறைவான ஈடுபாடு தெரிகிறது.
ஆஷிகா ரங்கநாத் பிளாஷ்பேக் காட்சிகளில் ஈர்க்கிறார். இருவரையும் அடுத்து, படத்தில் கருணாகரன் இருப்பு நம்மைக் கவரும் விதத்தில் உள்ளது.
மாறன், பால சரவணன், சாஸ்திகா, ஜெயபிரகாஷ், அனுபமா, பொன்வண்ணன், ரமா, சரத் லோகித்சவா உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். மேலும் சில காட்சிகளில் இடம்பெறச் செய்திருக்கலாம் என்பதாகவே அவர்களது பங்களிப்பு அமைந்துள்ளது.
’மிஸ் யூ’வை பார்க்கும் எவருக்கும் படத்தில் ஏதோ ஒன்று ‘மிஸ்’ ஆகியிருப்பதாகத் தோன்றுவதே இயல்பு. அது என்னவென்பது அவரவர் ரசனைக்குத் தக்கபடி மாறுபடும்.
அவற்றையெல்லாம் தாண்டி ரொமான்ஸுக்கு முக்கியத்துவம் கொடுத்து ‘காமெடி’யை ஊறுகாயாக பயன்படுத்திய வகையில் கொஞ்சம் தடுமாறியிருக்கிறது இப்படம்.
அதனால் ‘ரொமாண்டிக் காமெடி’ வகைமையில் அமையாமல் தனித்தனியே திரைக்கதையில் காட்சிகள் அமைந்திருக்கின்றன. அதுவே இப்படத்தின் பலவீனம்.
அதேநேரத்தில், சித்தார்த் பாத்திரம் திரைக்கதையில் அடையும் ஆச்சர்யங்கள் நம்மையும் தொற்றுவது இப்படத்தின் பெரும் பலம்.
இரண்டையும் பெரிதாகப் பொருட்படுத்தாமல், ‘டீசண்டா ஒரு படம் பார்ப்போமே’ என்று மட்டும் எண்ணுபவர்களுக்கு ‘மிஸ் யூ’ நல்லதொரு அனுபவத்தைத் தரும்..!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வேலைவாய்ப்பு : டிஎன்பிஎல் நிறுவனத்தில் பணி!
ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டிய தருணம் இது: ஸ்டாலின் கடிதம்!
மற்றவர்கள் நினைப்பது பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்!
டாப் 10 செய்திகள் : தலைமை செயலாளர்களின் தேசிய மாநாடு முதல் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வரை!