சித்தார்த் நடிக்கும் ‘மிஸ் யூ’ : ரிலீஸ் தேதி அறிவிப்பு

சினிமா

செவென் மைல்ஸ் பெர் செகண்ட் தயாரிப்பு நிறுவனத்தின் பேனரில் தயாரிப்பாளர் சாமுவேல் மேத்யூ தயாரிக்கும் ‘மிஸ் யூ’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.  இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில் சித்தார்த் நடிக்கும் இந்தப் படத்தில் ஆஷிகா ரங்கநாத், பொன்வண்ணன், நரேன், அனுபமா, ரமா, ஜேபி, கருணாகரன், பாலசரவணன், ’லொல்லு சபா’ மாறன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் இயக்குநர் ராஜசேகர் இதற்கு முன்பு விமல் நடித்து வெளியான ‘மாப்ள சிங்கம்’, ஜீவா – அருள் நிதி நடித்து வெளியான ‘களத்தில் சந்திப்போம்’ ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் ஆவார். ராம்காம் ஜானரில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தின் திரைக்கதையை இயக்குநர் ராஜசேகருடன் இணைந்து அசோக் எழுதியுள்ளார். செவென் மைல்ஸ் பெர் செகண்ட் தயாரிப்பு நிறுவனத்தின் சாமுவேல் மேத்யூ தயாரிக்கும் இந்தப் படத்திற்கு கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். தினேஷ் பொன்ராஜ் படத்தொகுப்பு வேலைகளை மேற்கொண்டுள்ளார்.

இந்தப் படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில் ஏற்கனவே மூன்று பாடல்கள் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த நிலையில், இந்தத் திரைப்படம் வருகிற நவ.29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

மேலும், இந்தப் படத்தின் உருவாக்கம், ரிலீஸ் தேதி , குறிப்பாக ‘மிஸ் யூ’ என்கிற டைட்டிலுக்கு பின்னால் நடந்த சுவாரஸ்ய கதையை தயாரிப்பாளர் சாமுவேல் மேத்யூ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். அந்தக் குறிப்பில், ‘ அன்பு நண்பர்களே, உங்களிடம்  ஒரு முக்கியமான செய்தியை இன்றிரவு பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். நமது 7 மைல்ஸ் பெர் செகண்ட் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ‘மிஸ் யூ’ திரைப்படம் வருகிற நவ.29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. பல்வேறு கலந்துரையாடல்களுக்குப் பிறகு இந்த ரிலீஸ் தேதியை நாங்கள் முடிவு செய்தோம்.

இது அவ்வளவு எளிதான முடிவாக எடுக்கப்படவில்லை. எங்களின் ரிலீஸ் தேதிக்கான உரையாடலில் நவ.14, 22, 29 , ஜன.26, பிப்.14, இவ்வளவு ஏன் மே1 போன்ற தேதிகள் கூட இருந்தது. ஆனால், இந்த நவ.29ஆம் தேதியில் ஏதோ சிறப்பம்சம் உள்ளதாகவே உணர்கிறேன். ஹீரோ சித்தார்த், ரெட் ஜெயண்ட் மூவிஸ்(தமிழ்நாடு வெளியீடு), அமேசான் பிரைம் (ஓடிடி உரிமம்), ஐங்கரன் இண்டர்நேஷனல் ( ஓவர்சீஸ் ரைட்ஸ்), தீ சீரிஸ்( ஆடியோ  ரைட்ஸ்) ஆகிய அனைத்து தரப்புகளும் அந்தத் தேதிக்கே ஒப்புக்கொண்டனர்.

தற்போது இந்தப் படத்தின் டைட்டில் உருவானதற்குப் பின்னே இருக்கும் கதையை சொல்கிறேன். நான் முதலில் இந்தப் படத்திற்கு யோசித்து வைத்திருந்த தலைப்பு ‘ஆசை முகம்’. நான் எப்போதும் பார்க்க ஆசைப்படும் முகமான என் அம்மாவிற்கு சமர்ப்பிக்கும் விதமாக அந்தத் தலைப்பை யோசித்து வைத்திருந்தேன்.

ஆனால், இயக்குநர் –  ஹீரோ உடனான கலந்துரையாடலில் அவர்கள் ஒரு மாடர்ன் தலைப்பை எதிர்பார்ப்பது தெரிந்தது. உடனே மீண்டும் யோசிக்கத் தொடங்கி முகம் என்கிற தலைப்பில் இருந்து ‘MU’ என்கிற இரு எழுத்தைக் கூறினேன். ஏன் இந்த எழுத்துக்கள் என உடனே இயக்குநர் கேட்டதும், ‘மிஸ் யூ’ என பதிலளித்தேன். அந்தத் தலைப்பு இயக்குநருக்கும் ஹீரோவுக்கும் பிடித்துப் போக அதுவே எங்களின் படத்தின் தலைப்பானது.

இந்தத் தலைப்பை எங்களை பயன்படுத்திக் கொள்ள அனுமதித்ததற்கு தயாரிப்பாளர் பி.எல் தேனப்பன் அவர்களின் பண்பே. எங்களின் தலைப்பு ‘இச்சிகோ இச்சியே’ எனத் தொடங்கி ‘என் நெஞ்சில் குடி இருக்கும்’ என மாறி, அதன் பின்னர் ‘ஆசை முகம்’ என மாறி கடைசியாக ‘மிஸ் யூ’ ஆக உருவெடுத்துள்ளது. இந்தக் கதையை கேட்டே அந்தத் தலைப்பை விட்டுக்கொடுத்தார் பி.எல்.தேனப்பன்.

இப்படியான ஒரு சிறப்பான டைட்டிலை நான் தேர்ந்தெடுக்க காரணமாக இருந்த இயக்குநர் நலன் குமாரசாமிக்கு நன்றி. மேலும், இந்த ரிலீஸ் தேதியான நவ.29 , எனது அம்மா மறைந்து மூன்றாம் ஆண்டு நிறைவடையும் நாள். இது தற்செயலாக நடந்த ஒன்றா, அல்லது எனது தாயின் ஆசிர்வாதமா, அல்லது பிரபஞ்சம் எனை அதிர்ஷ்டசாலியாக உணரவைக்கிறதா எனத் தெரியவில்லை. இந்தப் பயணத்தில் உங்கள் அனைவரின் துணையுடனும் நான் இருந்ததை நினைத்து பெருமிதம் கொள்கிறேன். என்னுடைய பாதையின் ஒவ்வொரு அடியிலும் என் தாயின் ஆசிர்வாதத்தையே உணர்கிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

தயாரிப்பாளர் சாமுவேல் மேத்யூ
தயாரிப்பாளர் சாமுவேல் மேத்யூ

 

 

மேலும், நடிகர் சித்தார்த் அடுத்தடுத்து இயக்குநர் சஷிகாந்த் இயக்கத்தில் நயன்தாரா, மாதவன் நடிக்கும்  ‘டெஸ்ட்’ திரைப்படம், ‘8 தோட்டக்கள்’ புகழ் ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் உருவாகும் ஒரு திரைப்படம் என நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

– ஷா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

’கமல் ஹாசன் தமிழ் சினிமாவின் அடையாளம்!’ – நடிகர் சூர்யா வாழ்த்து

‘கங்குவா’ படத்துக்கு வந்த சிக்கல்… கடனை அடைப்பதாக ஸ்டுடியோ கிரீன் உறுதி!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *