இந்தியத் திரையுலகில் சுமார் 23 ஆண்டுகளாக வெற்றிகரமான பின்னணிப் பாடகியாக வலம் வருபவர் ஷ்ரேயா கோஷல். இவர் 20க்கும் மேற்பட்ட மொழிகளில் சுமார் 3,000 பாடல்களைப் பாடியிருக்கிறார். அதில் தமிழில் மட்டும் சுமார் 210 பாடல்களைப் பாடியிருக்கிறார். அவற்றில் பெரும்பாலானவை சூப்பர்ஹிட் ரகம். Shreya is a beautiful music giant
அப்படிப்பட்ட ஷ்ரேயா கோஷல், இன்று 41 வயதைப் பூர்த்தி செய்திருக்கிறார். அதனைக் கொண்டாடும் வகையில், அவர் பாடிய பாடல்கள் சிலவற்றைக் கேட்டவாறே அவரது சாதனைகளை நினைவுகூர்வோம்..!
தமிழ் திரையுலகில் கிடைத்த புகழ்!

இந்தியில் ‘சரிகமப’ எனும் ஜீ தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று, அதன் வழியாகத் திரைப்படத்தில் பாடும் வாய்ப்பைப் பெற்றவர் ஷ்ரேயா கோஷல். 2000ஆவது ஆண்டில் அந்த நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டார். இரண்டாண்டுகள் கழித்து, இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியின் ‘தேவதாஸ்’ படத்தில் அவர் பின்னணிப் பாடகியாக அறிமுகமானார். அந்தப் படத்தில் அவர் 5 பாடல்களைப் பாடினார். அனைத்தும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டன.
தேவதாஸ் படம் வெளிவந்த சில மாதங்களில், தமிழில் வசந்தபாலன் இயக்கத்தில் ‘ஆல்பம்’ திரைப்படம் வெளியானது. அந்தப் படத்தில் இடம்பெற்ற ‘செல்லமே செல்லம் என்றாயடா’ பாடல் அன்றைய இளைய தலைமுறையினரை ஆட்டுவித்தது. அந்தப் பாடலைப் பாடுவதற்காக, மும்பையில் இருந்த ஷ்ரேயாவை தமிழ்நாட்டுக்கு அழைத்து வந்தவர் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா.
தன்னிசையில் பாட வைத்தது மட்டுமல்லாமல், தந்தை இளையராஜாவிடமும் ஷ்ரேயாவை அறிமுகப்படுத்தியிருக்கிறார். அதன் விளைவாக, தங்கர்பச்சானின் ‘சொல்ல மறந்த கதை’யில் இடம்பெற்ற ’குண்டு மல்லி குண்டு மல்லி’ பாடலைப் பாடினார். தொடர்ந்து ‘ஜூலி கணபதி’யில் ‘எனக்குப் பிடித்த பாடல் உனக்கும் பிடிக்குமே’ மற்றும் ‘இதயமே இதயமே என்னை மறந்தது ஏன்’ பாடல்களை அவருக்குத் தந்தார் இளையராஜா.
மேற்சொன்ன மூன்று பாடல்களுமே, இன்றும் இனிக்கும் மெலடி மெட்டுகளாக இருப்பவை.
அவற்றைத் தொடர்ந்து மணிசர்மா, யுவன்சங்கர்ராஜா, வித்யாசாகர், பரத்வாஜ், ஹாரிஸ் ஜெயராஜ், ஜி.வி.பிரகாஷ்குமார், தேவா, டி.இமான் உட்படப் பல இசையமைப்பாளர்களின் இசையில் பாடினார் ஷ்ரேயா.

’இளங்காத்து வீசுதே’, ‘நினைத்து நினைத்து பார்த்தேன்’, ‘உன்னை விட இந்த உலகத்தில் உசந்தது ஒண்ணுமில்ல’, ’அந்த நாள் ஞாபகம்’, ‘காற்றில் வரும் கீதமே’, ’சாமிகிட்ட சொல்லிப்புட்டேன்’. ‘பனித்துளி பனித்துளி’, ’முன்பே வா என் அன்பே வா’, ‘ஐய்யய்யோ என் உசுருக்குள்ள தீயை வச்சான் ஐய்யய்யோ’, ’உருகுதே மருகேதே’, ’தேன் தேன் தேன்’, ’ஒரு வெட்கம் வருதே’, ’மன்னிப்பாயா’, ‘உன் பேரைச் சொலும்போதே’, ’ஒரு கிளி ஒரு கிளி’, ‘சகாயனே சகாயனே’, ‘வெளிச்சப்பூவே’, ‘என்னைச் சாய்த்தாளே’ என்று பல பாடல்களை 2003 – 2013 காலகட்டத்தில் தந்தார். அனைத்தும் காலம் கடந்தும் கொண்டாட்டத்தை நம் மனதில் விதைப்பவை.
இந்தியில் அறிமுகமானாலும், ஷ்ரேயாவைத் தனித்து அடையாளம் காட்டியது தமிழில் பாடிய பாடல்களே. தெலுங்கு, பஞ்சாபி, உருது, மலையாளம் உட்படப் பிற மொழிகளில் அவர் தாமதமாகவே பாடினார். அவ்வளவு ஏன், அவரது தாய்மொழியான பெங்காலியில் கூட 2003ஆம் ஆண்டுதான் பின்னணிப் பாடகியாக அறிமுகமானார். ஆனால், அதற்கு ஓராண்டுக்கு முன்பாகவே தமிழ் ரசிகர்களின் மனதில் பதிந்துவிட்டது அவரது குரல். அதனால், அவரது பெரும்பாலான பேட்டிகளில் அதற்கான ‘நன்றியுணர்ச்சி’யை வெளிப்படுத்தியிருப்பார்.
இளையராஜாவைப் பற்றிய ஒரு கேள்விக்குச் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், ‘அவர் ஒரு அற்புதம்’ என்று குறிப்பிட்டிருந்தார் ஷ்ரேயா. தமிழில் வெளியான தனது பாடல்கள் பற்றி, இதர நேர்காணல்களில் அவர் பேசியிருக்கும் கருத்துகளும் கூட அப்படித்தான் இருக்கும்.
சமகால ஜாம்பவான்!

இன்றைய தேதியில் ஒவ்வொரு மொழியிலும் பல இசையமைப்பாளர்கள், பாடகர்கள், பாடகிகள் புகழ் பெற்றுத் திகழ்கின்றனர். அவர்களில் முதன்மையானவராக, சமகால ஜாம்பவனாகத் திகழ்பவர் ஷ்ரேயா கோஷல் என்று தாராளமாகச் சொல்லலாம். அந்த அளவுக்குத் தொடர்ந்து தனது பங்களிப்பைத் திரையிசையில் அவர் தந்து கொண்டிருக்கிறார்.
’வாய்ப்பு கிடைப்பதே குதிரைக்கொம்பு’ என்றான நிலையில், அதற்காகப் பல ‘அரசியல்கள்’ செய்ய வேண்டிய சூழலில், ‘தானுண்டு தன் வேலையுண்டு’ என்று ஒவ்வொரு பெருநகரத்திற்கும் பயணித்து, ஆண்டு முழுவதும் இசைப்பதிவுகளிலும், கச்சேரி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார் ஷ்ரேயா. ‘இவர் பாடினால் நன்றாக இருக்கும்’ என்று மெனக்கெட்டு அழைக்கப்படுகிற வாய்ப்புகளை மட்டுமே ஷ்ரேயா ஏற்றுக்கொள்கிறார்.
ஒருகட்டத்தில் எல்லா கலைஞர்களும் எதிர்கொள்கிற விஷயம் அது. தான் அதுவரை செய்யாத ஒன்றைச் செய்ய முற்படுகிற அல்லது அதற்கிணையான ஒன்றை வேறு வகையில் வெளிப்படுத்துகிற பணியில் கவனம் செலுத்துவது.
அந்த வகையில் மெலடி பாடல்களைப் பாடி நம் மனம் கவர்ந்த ஷ்ரேயா, தற்போது வெவ்வேறு உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிற பாடல்களையும் பாடுகிறார். ரசிகர்கள் பெறுகிற உத்வேகத்தின், குதூகலத்தின் தளம் வேறுபட்டு இருப்பதற்கு ஏற்ப, தனது பங்களிப்பையும் மாற்ற முயற்சிக்கிறார். அதனைச் சிறப்பாகச் செயல்படுத்தி வெற்றி கண்டு வருகிறார்.
பாரம்பரிய இசையைக் கற்றுக்கொண்டு, பல மொழிகளில் பாடுகிற ஆற்றலை வளர்த்துக்கொண்டு, எப்படிப்பட்ட தன்மையில் அமைந்த பாடல்களையும் பாடுகிற மனநிலையை ஏற்படுத்திக் கொண்டு, ரசிகர்களையும் ஊடகங்களையும் அமைதியாக அரவணைத்துச் செல்கிற இயல்பைப் பெருக்கிக்கொண்டு இருப்பதெல்லாம் சாதாரண விஷயமல்ல.
தேசிய விருதுகள் முதல் பல்வேறு விருதுகள், உலகின் பல இடங்களில் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பெற்ற பாராட்டுகள், தான் கண்டு வியந்த சாதனையாளர்களே தன்னைப் போற்றுவதைப் பணிவுடன் ஏற்றுக்கொள்கிற பாங்கு என்று பல விஷயங்கள் அவரைத் தனித்துவமாகத் தெரிய வைக்கின்றன. இத்தனைக்கும் பிறகு எளிமையான மனிதராக அவர் வாழ்வதும் ரசிகர்களால் கவனிக்கப்படுகிறது, கொண்டாடப்படுகிறது; ’ஜென் ஸீ’ தலைமுறையினரும் அவரை ரசிக்கும்படி செய்திருக்கிறது.

தோற்றத்தைப் பொறுத்தவரை, ஷ்ரேயா சிறந்த அழகி. தான் பாடிய பாடல்கள் வழியே நம் மனதில் உருவாக்கும் தாக்கத்தைப் பொறுத்தவரை, அவர் ஒரு ராட்சசி. அப்படிப்பட்டவரை ’அழகான ராட்சசியே’ பாடலைப் பாட வைத்துக் கேட்டால் என்னவென்று தோன்றியிருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் மனது வைத்தால் அது நிகழக்கூடும்.
’என்றும் இனிக்கும் இளமை’க்குரலோடு திரையுலகில் வலம் வந்த, வருகிற சாதனையாளர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அவர்களில் ஒருவராக இடம்பெறுகிற ஷ்ரேயா தன்னிசையால் ரசிகர்களை எந்நாளும் இது போன்று மகிழ்விக்க வேண்டும்..! Shreya is a beautiful music giant