தமிழ்த் திரைப்படமான “ஷாட் பூட் த்ரீ” தென் கொரியாவில் ஐ.சி.ஏ.எஃப். எஃப். திரைப்பட விழாவின் சிறந்த திரைப்படத்திற்கான விருதை பெற்றுள்ளது.
கொரியன் படங்களுக்கு தமிழகத்தில் அதிக ரசிகர்கள் உள்ளனர் கொரியன் மொழியில் வெளியான சில படங்கள் தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளன,
தென் கொரியா, உலகின் ‘செல்லப்பிராணிகளின் தலைநகரம் ‘என்று சொன்னால் அது மிகையாகாது. ஐ.சி.ஏ.எஃப்.எஃப் (ICAFF) தென்கொரியாவில் துணை விலங்குகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட முதல் திரைப்பட திருவிழாவாகும்.
2016 ஆம் ஆண்டில் விலங்குகளை சார்ந்து அல்லது அவற்றை முக்கிய கதாபாத்திரமாக கொண்ட திரைப்படங்களுக்காக தொடங்கப்பட்ட இந்தத் திரைப்பட விழாவில், முதன் முறை ஒரு இந்தியத் (தமிழ்) திரைப்படம் விருதை வென்றுள்ளது.
ஐ.சி.ஏ.எஃப்.எஃப் விழாக் குழுவினர், இயக்குநர் அருணாச்சலம் வைத்தியநாதனுக்கு எழுதிய பாராட்டு மடலில் கீழ்க்கண்டவற்றைக் குறிப்பிட்டுள்ளனர்.
- மிக அற்புதமான மற்றும் ஆரோக்கியமான கதையுடன் கூடிய திரைப்படம்.
- குழந்தைகள் மற்றும் நாய்களைப் பற்றிய இந்தியப் படத்தைப் பார்ப்பது புத்துணர்ச்சி அளிக்கிறது.
- ஒளிப்பதிவு சிறப்பாக உள்ளது..
- படத்தின் கருப்பொருள் எங்கள் ICAFF திரைப்பட விழாவின் நோக்கம் மற்றும் குறிக்கோளை மனப்பூர்வமாக பூர்த்தி செய்தது. மேலும் இந்த பரிசை உங்களுக்கு வழங்குவது என்பது அனைத்து நடுவர்களாலும் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.
விருது வழங்கும் விழா அக்டோபர் 7-9 தேதிகளில் நடைபெறும். “ICAFF எக்ஸலன்ஸ் விருது” பரிசுத் தொகை மற்றும் ஒரு கோப்பை பரிசாக அளிக்கப்படுகிறது. இந்த விழாவிற்கு அருணாச்சலம் வைத்யநாதன் நேரில் சென்று பங்கு பெற உள்ளார்.
அருணாச்சலம் வைத்யநாதன் இது பற்றி கூறும்போது, “ICAFF திரைப்பட விழா இயக்குனர் டெபோரா பைக்கிடம் இருந்து வந்த வாழ்த்து செய்தியில் நானும், எனது குழுவும் மிக மகிழ்ச்சி அடைந்தோம். ஷாட் பூட் த்ரீ, எழுத ஆரம்பத்தில் இருந்து திரைப்படமாக எடுத்து முடிக்கும் வரை, எங்களுக்குப் பல ஆச்சரியங்களைத் தந்துள்ளது. இந்தப் படம் வெளியாவற்கு முன்பே, எங்களுக்குக் கிடைத்த இந்த அங்கீகாரம் மேலும் உற்சாகத்தை ஊட்டியுள்ளது” என்றார்.
ஷாட் பூட் த்ரீ படத்தில் சினேகா, வெங்கட் பிரபு, யோகி பாபு, ஷிவாங்கி மற்றும் நான்கு குழந்தைகளுடன் ஒரு ‘கோல்டன் ரெட்ரீவர்’ நாய் ‘மேக்ஸ்’ நடித்துள்ளனர்.
வீணை மேஸ்ட்ரோ ராஜேஷ் வைத்யா இசையமைத்திருக்கிறார்.
இராமானுஜம்