நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசிய ஆபாச பேச்சுக்கு நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், த்ரிஷா, லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ், ரோஜா போன்ற திரை பிரபலங்களும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
‘ரேப் (Rape)’ என்கிற சொல்லை எந்த இடத்திலும் நகைச்சுவையாகச் சொல்லிவிட முடியாது. அப்படி சொல்ல முனைவது அதை மக்கள் மத்தியில் சாதாரணப்படுத்தும் முறையாகும் என சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை விசித்ரா, தனக்கு நேர்ந்த பாலியல் சீண்டல் குறித்து வெளிப்படையாகப் பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் ஒரு ‘டாப் ஹீரோ’ தன்னை படுக்கைக்கு அழைத்தார் என்று கூறியது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்த, ’அந்த’ ஹீரோ யாராக இருக்கும் என்கிற கேள்வியும் ஆதங்கமும் பலர் இடத்தில் எழுந்தது.
இந்நிலையில், பல ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கு சினிமாவின் சண்டை பயிற்சி இயக்குநர் விஜய் மீது விசித்ரா அளித்திருந்த புகார் குறித்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதன்படி விசித்ராவை படுக்கைக்கு அழைத்தது தெலுங்கு சினிமாவின் மாஸ் ஹீரோ பாலகிருஷ்ணா தான்.
அவரது ’பலேவடிவி பசு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் தான் விசித்ராவிற்கு இச்சம்பவம் நிகழ்ந்தேறியுள்ளது. தங்கியிருந்த ஹோட்டலில் விசித்ராவை அந்தப் படத்தின் ஹீரோவான பாலகிருஷ்ணா தான் படுக்கைக்கு அழைத்துள்ளார் என்றும், அதற்கு விசித்ரா ஒத்துழைக்காத காரணத்தால் தான் அவருக்கு படப்பிடிப்பெங்கும் தொல்லைகள் தரப்பட்டுள்ளது என விசித்ரா குற்றம்சாட்டியுள்ளது வைரலாகும் அந்த செய்தியின் மூலம் தெரிகிறது.
இதற்கு பின்னரே சினிமா துறையை விட்டு விலகியுள்ளார் விசித்ரா. தனக்கு தொந்தரவு தரப்பட்ட அதே ஹோட்டலில் தனக்கு துணை நின்ற மேனேஜரை திருமணம் செய்துள்ளார். பாலகிருஷ்ணாவின் மிகுந்த செல்வாக்கின் காரணத்தால் திரைத்துறையினரும், காவல்துறையும் இதைக் கண்டுகொள்ளாமல் விட்டது நியாயமற்ற செயல் என மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இருப்பினும், இந்த விவகாரம் குறித்து சண்டைப் பயிற்சி இயக்குநர் விஜய்யிடம் இருந்தோ அல்லது தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவிடம் இருந்தோ எந்த வித மறுப்பும், விளக்கமும் வெளிவரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– ஷா