இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் பெயரிடப்படாத ‘தளபதி 69’ திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், மமிதா பைஜு, பிரியாமணி, நரேன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் பூஜை சில நாட்களுக்கு முன்பு நடந்தேறியது. இந்த நிலையில், இந்தப் படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமாருக்கு நடிக்க அழைப்பு வந்ததாக சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்.
அந்தப் பேட்டியில் பேசிய அவர், ‘விஜய் படத்தில் நல்ல கதாபாத்திரம் ஒன்றுக்கு என்னை நடிக்க அழைத்தார்கள். எனது அடுத்தடுத்த கால்ஷீட் பொறுத்து நான் அப்படத்தில் இருக்கிறேனா என்பது தெரியும். இந்தப் படத்தை தனது கடைசி படம் என விஜய் அறிவித்துள்ளார். தனிப்பட்ட முறையில் அவருடைய கடைசி படம் என சொல்லக் கூடாது. அவர் ஒரு அற்புதமான நடிகர், நல்ல மனிதர். திரைத்துறை மற்றும் அரசியல் என இரண்டிலுமே சிறந்து விளங்குகிறார். அரசியலில் அவருடைய பார்வை மிக அருமையாக இருக்கிறது. அதற்காக அவரை மதிக்கிறேன்’ எனப் பேசியுள்ளார்.
மேலும், நடிகர் சிவராஜ்குமாருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அதற்கான மருத்துவ சிகிச்சையில் ஈடுபடவுள்ளார். அதனால், இரண்டு மாதங்களுக்கு மேல் ஓய்வெடுக்கப் போவதாக சமீபத்தில் அவர் அறிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் ‘தளபதி 69’ படத்திற்கு சத்யா ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் பரபரப்பாக நடந்து வரும் நிலையில், அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
– ஷா