“சித்தா” திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி பெங்களூரில் நடைபெற்ற போது அந்த நிகழ்ச்சியின் நடுவில் கன்னட அமைப்பினர் சிலர், காவிரி நதிநீர் பிரச்சினையை முன்வைத்து சித்தார்த்தை பேசவிடாமல் நிகழ்ச்சியைப் பாதியில் நிறுத்தி அவரை வெளியேற்றினர்.
இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளான நிலையில், நடிகர் பிரகாஷ்ராஜ் “ஒரு கன்னடராக, கன்னட மக்கள் சார்பாக நடிகர் சித்தார்த்திடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று தனது X பக்கத்தில் அறிவித்தார்.
இந்நிலையில் பிரகாஷ்ராஜை தொடர்ந்து சமீபத்தில் ரஜினிகாந்த்தின் ஜெயிலர் படத்தின் மூலம் தமிழ்நாட்டில் பிரபலமான கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாரும் சித்தார்த்திடம் மன்னிப்பு கேட்பதாக கூறியிருக்கிறார்.
இது குறித்து அவர் கூறியதாவது, “நடிகர் சித்தார்த்திடம் நான் மன்னிப்பு கேட்கிறேன். கன்னட மக்கள் அனைத்து மொழி படங்களையும் விரும்பி பார்க்கக் கூடியவர்கள், அனைவரின் மீதும் அன்பு செலுத்தக் கூடியவர்கள். இப்படி ஒரு சம்பவம் நடந்தது எனக்கு மிகுந்த வருத்தமளிக்கிறது” என கூறியுள்ளார்.
சிவராஜ் குமாரின் இந்த செயலைக் கண்டு பொதுமக்களும், திரையுலக பிரபலங்களும் பாராட்டி வருகின்றனர்.
செப்டம்பர் 28ஆம் தேதி வெளியான சித்தா படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமின்றி ரிலீஸான முதல் நாளே 1 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
– கார்த்திக் ராஜா
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!