தனக்கு பிடித்த நடிகர்களில் விஜய் சேதுபதியும் ஒருவர் என்று நடிகர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் மினிமம் கேரண்டி கதாநாயகனாக கூறப்படும் நடிகர் விஜய்சேதுபதி நாயகனாக மட்டுமல்ல கதையின் நாயகனாக, வில்லனாக பிற நடிகர்களுடன் நடிக்கத் தயங்குவதில்லை. பேட்ட படத்தில் ரஜினிகாந்த், விக்ரம் படத்தில் கமல்ஹாசன், மாஸ்டர் படத்தில் விஜய் ஆகியோருடன் வில்லன் கதாபாத்திரங்களில் அழுத்தமான நடிப்பை பதிவு செய்தவர்.
கதாநாயகனாக நடிப்பதற்கு வாங்கும் சம்பளத்தை காட்டிலும் வில்லன் வேடத்தில் நடிக்க விஜய்சேதுபதிக்கு கொடுக்கப்படும் சம்பளம் அதிகம். தெலுங்கில் சிரஞ்சீவியுடன் நடித்தவர் முதன்முறையாக இந்தியில் ஷாருக்கானுடன் ஜவான் படத்தில் நடித்திருக்கிறார்.
தமிழ் நடிகர்களில் ரஜினிகாந்த்தை பார்த்து பிரமித்திருக்கிறேன், தனக்கு பிடித்த சூப்பர் ஸ்டார் அவர் என ஷாருக்கான் கூறியிருக்கிறார். தற்போது விஜய்சேதுபதி தனக்கு பிடித்த நடிகர்களில் ஒருவர் எனவும் ஷாருக்கான் கூறியிருக்கிறார்.
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள படம் ஜவான். இதில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். விஜய் சேதுபதி, நயன்தாரா, சானியா மல்ஹோத்ரா, பிரியாமணி நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.
செப்டம்பர் 7 ஆம் தேதி ஜவான் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருட தொடக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே நடிப்பில் ஜனவரி 25 அன்று வெளியான ‘பதான்’ திரைப்படம் வணிக ரீதியாக பெரும் வெற்றிபெற்றது.
அதனால் ஜவான் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. படத்திற்கான விளம்பர வேலைகளை தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக வலைத்தளத்தில் ரசிகர்களின் கேள்விக்கு ஷாருக்கான் பதில் அளித்தார்.
அப்போது ”ஜவான் மிகப்பெரும் சவால்கள் நிறைந்த படைப்பு. இதில் வில்லனாக நடித்துள்ள விஜய் சேதுபதி மிகவும் கூலாக இருக்கிறார். எனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் ஒருவர். ஜவானில் மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்” என கூறியுள்ளார்.
இராமானுஜம்
செந்தில் பாலாஜிக்கு எப்போது சுயநினைவு திரும்பும்? : அமைச்சர் மா.சுப்பிரமணியன்
500 டாஸ்மாக் கடைகள் மூடல் : தமிழக அரசு உத்தரவு!