இந்திய சினிமாவின் முகங்களாக இந்தி திரைப்படங்கள் ஆதிக்கம் செலுத்தி வந்ததை பாகுபலி என்கிற தெலுங்குப் படம் மாற்றியமைத்தது.
இந்திக்கு இணையாக இந்தியாவில் பிறமொழி படங்களும் உள்ளது என்பதை தொழில்நுட்ப ரீதியாகவும், வசூல் அடிப்படையிலும் உலகிற்கு உணர்த்திய ராஜமவுலியின் பாகுபலி படத்தை தொடர்ந்து அந்த பயணத்தில் கன்னட கேஜிஎஃப் தன்னை இணைத்து கொண்டது.
தெலுங்கில் வெளியான புஷ்பா இந்தி மொழி பேசும் மாநிலங்களில் வசூல் சாதனை புரிந்தது. இந்திய சினிமா வர்த்தகத்தில் தென்னிந்திய மொழி சினிமா அதிகபட்ச வருவாயை தன் வசம் கொண்டு வந்தது.
அதே நேரம் இந்தி சினிமா தனது ஆதிக்கத்தை இழந்து வந்ததுடன் கொரோனா பொது முடக்கத்துக்கு பின் வெளியான இந்திப்படங்கள் வசூல் அடிப்படையில் சராசரி வெற்றியை தக்கவைக்க முடியாமல் துவண்டது.
இஸ்லாமிய நடிகர்கள் கதாநாயகர்களாக ஆதிக்கம் செலுத்தும் இந்தி சினிமாவில் அவர்கள் நடித்த படங்கள் வெளியாகும் படங்களுக்கு எதிரான பிரச்சாரங்களை மத அமைப்புக்கள் தூண்டிவிட்டன.

கடந்த காலங்களில் அந்த நடிகர்கள் உணர்ச்சிவசப்பட்டு, அல்லது கவனக்குறைவாக பேசப்பட்ட விஷயங்கள் தூசி தட்டப்பட்டு சமூக வலைதளங்களில் முன்னிலைப்படுத்தப்பட்டன.
“பாய் காட்” என்கிற வடிவத்தை டிவிட்டரில் ட்ரெண்ட் செய்தனர். இதனால் அமீர் கான் நடிப்பில் வெளியான லால் சிங் சத்தா படம் தோல்வியை தழுவ நேர்ந்தது. குறைந்தபட்ச வெற்றிப் படத்திற்காக இந்தி திரையுலகம் ஏங்கியது என்றே கூறலாம்.
இந்தி சினிமாவின் வீழ்ச்சியை ஒட்டுமொத்த திரையுலகிற்கான பாதிப்பாக கருதாமல் தங்கள் திறமைக்கான வெற்றியாகவே கொண்டாடியது பிராந்தியமொழி சினிமா துறை.
இந்த நிலையில்தான் இந்தியாவின் மிகப் பெரும் திரைப்பட தயாரிப்பு நிறுவனமாக கூறப்படும் யாஷ்ராஜ் பிலிம்ஸ்ன் 50வது தயாரிப்பாக,சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் – தீபிகா படுகோன் நடிப்பில் இந்தியில் தயாரான பதான் படத்தின் டீசர் டிசம்பர் மாதம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், படத்தின் முதல் பாடலாக வெளியான ‘பேஷரம் ரங்‘ பாடலில் தீபிகா படுகோனே கவர்ச்சியாக காவி நிற உடை அணிந்து நடனமாடியிருக்கிறார் என்ற விமர்சனத்தால் பெரும் சர்ச்சை எழுந்தது.
பாஜகவை சேர்ந்த மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, அயோத்தியைச் சேர்ந்த சாமியார் பிரமான்ஸ் ஆச்சாரியா, பாஜக எம்.பி பிரக்யா சிங் தாக்கூர் உள்ளிட்ட பலரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்திருந்தனர்.
இவற்றுக்கு தயாரிப்பு நிறுவனம், அல்லது ஷாருக்கான் தரப்பில் இருந்து எந்தவிதமான கருத்து அல்லது தன் நிலை விளக்கத்தை தெரிவிக்கவில்லை என்பதுடன் கொல்கத்தாவில் நடைபெற்ற திரைப்பட விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஷாருக்கான், இது சம்பந்தமாக பேசுகிற போது படத்தில் என்ன கூறப்பட்டிருக்கிறது என்பது தெரியாமல் பேசுகிறார்கள் என கூறியிருந்தார்.

ஜனவரி 25 பதான் வெளியீடு என அறிவிக்கப்பட்ட நிலையில் படத்திற்கு எதிரான பேச்சுக்கள் அதிகரித்த நிலையில் டெல்லியில் நடந்த பாஜக தேசியக்குழு கூட்டத்தில் இனி திரைப்படங்கள் குறித்து பாஜகவினர் யாரும் கருத்து கூற வேண்டாம் என பாரத பிரதமர் நரேந்திர மோடி கட்சியினருக்கு அறிவுறுத்தியதாக செய்தி வெளியானது.
இதனால் சர்வதேச சமூகத்தில் பதான் திரைப்படம் தவிர்க்க முடியாத, தவிர்க்க கூடாத படமாக மாறிப்போனது. அதனால்தான் என்னவோ படத்திற்கான முன்பதிவிலும், டிக்கெட் விற்பனையிலும் பல்வேறு முதல் சாதனைகளை பதான் அரங்கேற்றியது
பதான் படத்திற்கு உருவான எதிர்பார்ப்பு இதுவரை இந்தியதிரையுலகம் கண்டிராதது. படத்தின் டீசர், “பேஷரம் ரங்” மற்றும் “ஜூமே ஜோ பதான்” என்கிற இரண்டு பாடல்கள் மற்றும் டிரைலர் என இந்தப்படம் தொடர்பாக யாஷ் ராஜ் பிலிம்ஸ் வெளியிட்ட அனைத்துமே இணையதளத்தை அதிர வைத்தது
100-க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியாகும் முதல் இந்தியத் திரைப்படம்.
புக் மை ஷோவில் முன்பதிவில் 10 லட்சத்துக்கும் அதிகமான டிக்கெட்டு விற்பனையான முதல் இந்திப்படம்
இந்திக்கு அடுத்தபடியாக பதானின் தெலுங்கு பதிப்பில் அதிக முன்பதிவு டிக்கெட் விற்பனை
பதான் படத்திற்கான டிக்கெட் முன்பதிவு விற்பனையில் 30 சதவீதம் தென்னிந்தியாவில் நடைபெற்றது.
காலை 6 மணி காட்சிகள் கொண்ட முதல் ஷாருக்கான் படம்
ஐசிஇ (Immersive Cinema Experience) ஃபார்மெட்டில் வெளியாகும் முதல் இந்தியத் திரைப்படம்.
ஐசிஇ என்பது சிறந்த திரையனுபவத்தைக் கொடுக்கும் தொழில்நுட்ப வடிவம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெர்மனியில் 8500 டிக்கெட்டுகளுக்கு மேல் விற்பனையாகி 1.5 லட்சம் யூரோக்கள் வரை வசூலித்து, கேஜிஎஃப் 2 பட மொத்த வசூலை முன்பதிவின் மூலம் முறியடித்துள்ளது.
இந்தியாவில் உள்ள நாக்பூர் நகரில் பதான் திரையிடப்பட இருந்த ஒரு திரையரங்கில் மொத்த டிக்கெட்டுகளையும் சில வினாடிகளில் ஷாருக்கான் ரசிகர் மன்றத்தினர் புக் செய்தனர்.

இந்தியாவில் 5500 திரைகளிலும், வெளிநாடுகளில் 2500 திரைகளில் வெளியான முதல் இந்தி திரைப்படமானது பதான்
இத்தனை பெருமைகளையும் கொண்ட பதான் திரைப்படம் உலகம் முழுவதும் நேற்று வெளியானது. இந்தியாவில் குறிப்பிட்ட சில நகரங்களில் இந்துத்துவா அமைப்பினர் பதான் படத்தின் போஸ்டர்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய பிரதேச மாநிலம் பர்வானியில் உள்ள திரையரங்கின் முன் குவிந்த விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அதுமட்டுமின்றி தியேட்டருக்கு வெளியே இருந்த படத்தின் போஸ்டர்களை கிழித்து தீ வைத்து எரித்தனர்.
அதேபோல் இந்தூரில் உள்ள திரையரங்குகளிலும் இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தினர். குவாலியரில் உள்ள டிடி மாலில் பதான் படம் திரையிடப்படும் முன்பே அங்கு வந்த பஜ்ரங் தள் அமைப்பினர் ஜெய் ஸ்ரீ ராம் என்ற முழக்கங்களுடன் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
கர்நாடக மாநிலம் கலபுர்கியிலும் பதான் படத்தை திரையிட எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்தது. அங்குள்ள ஷெட்டி தியேட்டருக்கு வெளியே பதான் படத்திற்கு எதிராகவும், ஷாருக்கானுக்கு எதிராகவும் போராட்டக்காரர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
இவற்றை எல்லாம் கடந்து தேசபக்தியை வலியுறுத்தும் பதான் திரைப்படத்திற்கான ஆதரவும், வரவேற்பும் அதிகரித்து வருகிறது. படம் பார்ப்பதற்கான டிக்கெட் தேவை அதிகரித்திருப்பதால் இந்தியா முழுவதும் பதான் திரையிடப்பட்டுள்ள 5500 திரைகளிலும், சூழலுக்கு ஏற்ப நள்ளிரவு 12.30 சிறப்பு காட்சியையும் திரையிட திரையரங்குகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது தயாரிப்பு நிறுவனமான யாஷ்ராஜ் பிலிம்ஸ்.
பதான் படத்தின் முதல் நாள் மொத்த வசூல் எவ்வளவு என்பதை தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் முன்பதிவு அடிப்படையில் இந்தியாவில் சுமார் 60 கோடி ரூபாய் மொத்த வசூல் என்கிறது திரையரங்க வட்டாரங்கள்.
இராமானுஜம்
குடியரசு நாள்: இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்போம்!
தேசிய கொடி ஏற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி