நடிகர் விஜய் ‘தளபதி’ என்று ஏன் அழைக்கப்படுகிறார் என்பதற்கான காரணத்துடன் நடிகர் ஷாருக்கான் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
உலகளவில் தென்னிந்திய திரைப்படங்கள் வசூலில் சாதனை படைத்துக் கொண்டிருக்கின்றன. அதேவேளையில் பாலிவுட் படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் கடும் பின்னடைவை சந்தித்து வருகின்றன.
இதற்கு ஒரு முடிவு கட்டும் விதமாக வரும் ’பாலிவுட் பாட்ஷா’ என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் ’பதான்’ படம் குடியரசு தினத்தை முன்னிட்டு வரும் 25-ந் தேதி வெளியாக உள்ளது.
சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ள இந்த படத்தில் ஷாருக்கானுடன் தீபிகா படுகோனே, ஜான் ஆபிரகாம், அஷ்டோஸ் ராணா முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் சல்மான் கானும் சிறப்பு தோற்றத்தில் படத்தில் இடம்பெற்றுள்ளார்.
இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகும் பதான் திரைப்படத்தினை காண ஷாருக்கானின் கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துள்ளனர்.
விஷால் சேகர் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ஹிட் அடித்துள்ளது. அதே சமயம் படத்தில் உள்ள பாடல் காட்சியில் நாயகி தீபிகா படுகோனே அணிந்திருந்த உடை சர்ச்சையை ஏற்படுத்தியது.

எனினும் படத்திற்கான விளம்பரத்தினையும், எதிர்பார்ப்பையும் இன்னும் அதிகபடுத்தியுள்ளது என்பதே உண்மை. இந்நிலையில் படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி தமிழ் தெலுங்கு இந்தி கன்னடம் மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளிலும் பதான் படத்தின் டிரெய்லர் வெளியானது.
பொதுவாக தன்னுடைய படத்தின் பாடல், டீசர், டிரெய்லர் தொடர்பானவற்றை மட்டுமே நடிகர் விஜய் வெளியிடுவார். இந்நிலையில் தான் விஜய் தனது ட்விட்டர் பதிவில் மற்றொரு நடிகரின் பட டிரெய்லரை முதல் முறையாக பதிவிட்டுள்ளார். யாரும் எதிர்பார்க்காத வகையில் ஷாருக்கானின் ’பதான்’ திரைப்படத்தின் தமிழ் டிரெய்லரை இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விஜய் வெளியிட்டார்.
விஜயின் வாரிசு படம் நாளை வெளியாக உள்ள நிலையில், விஜய் ஷாருக்கான் படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் வைரலானது.
இதனையடுத்து தனது படத்தின் டிரெய்லரை வெளியிட்ட நடிகர் விஜய்க்கு நன்றி சொல்லும் விதமாக ஷாருக்கான் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு தற்போது இந்திய திரையுலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த பதிவில், ”எனது நண்பர் விஜய்க்கு நன்றி. இந்த தாழ்மையான குணத்தின் காரணமாகத்தான் நீங்கள் தளபதி. விரைவில் ஒரு சுவையான விருந்தில் சந்திப்போம் லவ் யூ” என்று பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவினை விஜய் ரசிகர்கள் தங்களது சமூகவலைதள பக்கங்களில் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.
தொடர் தோல்விக்கு பிறகு நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளிவரும் ‘பதான்‘ திரைப்படம் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக உருவாகி உள்ளது அதன் டிரைலரிலேயே தெரிகிறது. மேலும் இந்த படத்தின் ட்ரைலர் வெளியான சில மணி நேரங்களிலேயே அதிக பார்வைகளை பெற்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
எனினும் சமீபகாலமாக பாலிவுட்டில் நிகழ்ந்து வரும் #Boycott கலாச்சாரத்தை முறியடித்து ’பதான்’ வெற்றி பெறுமா என்பது படம் வெளியான பிறகே தெரியும்.
கிறிஸ்டோபர் ஜெமா