ஷாருக்கான்- அட்லியின் ‘ஜவான்’ திரைப்படத்தை பல கோடி ரூபாய்க்கு முன்னணி ஓடிடி நிறுவனம் ஒன்று விலைக்கு வாங்கியுள்ளது.
தமிழில் ‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான அட்லி பின்பு ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என கமர்ஷியல் ரீதியாக பல வெற்றி படங்களை கொடுத்தார். இப்போது அவர் பாலிவுட்டில் ஷாருக்கானுடன் இணையும் ‘ஜவான்’ படம் மூலமாக அங்கும் இயக்குநராக அறிமுகமாகிறார்.
2023 ஜூன் 2ம் தேதி இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாக இருக்கிறது ஜவான் என படக்குழு அறிவித்தது.
இந்த படத்துக்கு இசை அனிருத். திருமண கொண்டாட்டத்திற்கு பிறகு நயன்தாராவும் இதன் படப்பிடிப்பில் தற்போது கலந்து கொண்டுள்ளார். நயன்தாரா தவிர தமிழ்த்திரையுலகில் இருந்து நடிகை ப்ரியாமணி, யோகிபாபு உள்ளிட்ட பலரும் இருக்கின்றனர் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடத்திலும் நடிக்கிறார். சமீபத்தில் டைட்டில் பற்றிய அறிவிப்பு டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது இந்த படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் கிட்டத்தட்ட 120 கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளது.
2018-ல் ஷாருக்கான் நடிப்பில் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் வெளியான ‘ஜீரோ’ படம் தோல்வியை தழுவியது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஷாருக்கானின் ‘ஜவான்’ வெளியாக இருக்கிறது என்பதால் ரசிகர்கள் பெரும் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.
‘ஜவான்’ தவிர்த்து ‘பதான்’ மற்றும் தலைப்பிடப்படாத இன்னும் ஒரு படம் ஷாருக்கான் நடிப்பில் வெளியாக உள்ளது.
ஆதிரா