அமெரிக்காவில் இருந்து வெளிவரும் டைம் பத்திரிகை 100 ஆண்டுகளை கடந்து வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்த பத்திரிகையில் செய்தி வருவது கௌரவம் மிக்கதாக கருதப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச அரசியல், சினிமா, சமூகம் என செல்வாக்கு, சக்திமிக்க மனிதர்கள் பட்டியலை ‘டைம்’ பத்திரிகை வெளியிட்டு வருகிறது.
2023-ஆம் ஆண்டின் உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நபர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் ‘ஐகான்ஸ்’ பட்டியலில் இந்தி நடிகர் ஷாரூக்கானும், ‘பயோனிர்ஸ்’ பட்டியலில் இயக்குநர் ராஜமவுலியும் இடம் பெற்றுள்ளனர்.
ராஜமவுலி பற்றி ‘ஆர்ஆர்ஆர்‘ படத்தில் நடித்த நடிகை ஆலியாபட் கூறியதை டைம் வெளியிட்டுள்ளது.
“பாகுபலி -2′ படத்தின் சிறப்பு காட்சியில்தான் இயக்குநர் ராஜமவுலியை நான் முதன் முறையாகச் சந்தித்தேன்.
படத்தைப் பார்த்து நாங்கள் அனைவரும் வியந்து போனோம். படத்தைப் பார்க்கும் போது எனக்கு ‘ஓ மை காட்’ இந்த இயக்குனருடன் பணியாற்றுவது எவ்வளவு கனவாக இருக்கும் எனத் தோன்றியது.
அந்தக் கனவு நனவும் ஆனது.’ஆர்ஆர்ஆர்’ படத்தில் அவருடைய இயக்கத்தில் நடித்தது மீண்டும் பள்ளிக்குச் சென்ற உணர்வை ஏற்படுத்தியது.
அவருக்கான ரசிகர்களுக்கு எப்படி படம் எடுக்க வேண்டும் என்பதை அவர் தெரிந்து வைத்திருந்தார்.
திரைப்படம் வெற்றிபெற என்ன செய்ய வேண்டும், எதை எடுக்க வேண்டும் என்பது அவருக்குத் தெரிந்திருக்கிறது.
நான் அவரை ‘கதை சொல்வதில் மாஸ்டர்’ என்று அழைப்பேன். கதைகளைத் திறமையாகக் கையாள்வதிலும், தேவையற்றதைக் கைவிடுவதிலும் நேர்மையாக இருக்கிறார்.
அவர் நம்மை ஒன்று சேர்க்கிறார். இந்தியா பல்வேறு மக்கள், கலாச்சாரம், ரசனை கொண்ட நாடு. ஆனால், திரைப்படங்கள் மூலம் நம்மை ஒன்று சேர்த்து விடுகிறார்.
நான் ஒரு முறை அவரிடம் நடிப்பு பற்றி ஆலோசனை கேட்டேன். “நீங்கள் எதைத் தேர்வு செய்தாலும் அதை அன்புடன் செய்யுங்கள். படம் வெற்றி பெறவில்லை என்றாலும், உங்கள் கண்களில் உள்ள அந்த அன்பை, ரசிகர்கள் உங்களிடம் பார்ப்பார்கள்,” என்றார்,” என ஆலியா குறிப்பிட்டுள்ளார்.
ஷாரூக்கான் பற்றி தீபிகா படுகோனே கூறியிருப்பதும் இடம்பெற்றுள்ளது
“ஷாரூக்கானை முதன் முதலில் சந்தித்ததை என்னால் மறக்க முடியாது. கனவுகளுடனும், ஒரு சூட்கேஸுடனும் பெங்களூரிலிருந்து மும்பைக்கு வந்ததேன். அடுத்து எனக்குத் தெரிந்தது அவரது வீட்டில் நான் அமர்ந்திருந்தது, ஒரு படத்தில் அவருக்கு ஜோடியாக நான் நடிக்க பரிசீலிக்கப்பட்டேன்.
16 ஆண்டுகள் ஆகிவிட்டது. எங்களுக்கு இடையிலான உறவில் என்ன சிறப்பு என்று கேட்டால் அன்பு, நம்பிக்கை, ஒருவர் மீது மற்றவர் வைத்துள்ள மரியாதை.
எல்லா காலத்திலும் சிறந்த நடிகர்களில் ஒருவராக ஷாரூக்கான் அறியப்படுவார். ஆனால், உண்மையில் அவரை வேறுபடுத்துவது அவரது மனம், அவரது வீரம், அவரது தாராள மனப்பான்மை என பட்டியல் நீளும்.
அவருடன் நெருங்கிப் பழகி, அவரைப் பற்றிய ஆழ்ந்த அக்கறை கொண்ட ஒருவருக்கு 150 வார்த்தைகளில் அவரது பெருமையைசொல்லிவிட முடியாது,” எனத் தெரிவித்துள்ளார்.
ராமானுஜம்
சிஆர்பிஎஃப் தேர்வு: போராட்டத்தை அறிவித்த திமுக!
ஜனநாயக விரோத பேச்சு: அமித் ஷாவுக்கு எதிராக திரண்ட டி.எம்.சி!
கிச்சன் கீர்த்தனா: லெமன், ஜிஞ்சர் ஸ்குவாஷ்