புதியவர்களை பாலியல் தேவைகளுக்கு வற்புறுத்தப்படுவது, படப்பிடிப்பு தளத்தில் பெண்களுக்கு கழிப்பறைகள் மற்றும் உடை மாற்றும் அறைகள் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாதது என மலையாள திரையுலகில் நிலவும் பாலியல் சீண்டல்கள் குறித்து 233 பக்கங்கள் கொண்ட ஹேமா கமிஷன் அறிக்கை வெளியாகி பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன.
கடந்த 2017ம் ஆண்டு ஒரு பிரபல மலையாள முன்னணி நடிகை திருச்சூரிலிருந்து கொச்சிக்கு காரில் செல்லும் வழியில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக பிரபல மலையாள முன்னணி நடிகர் திலீப், அந்த நடிகையின் முன்னாள் டிரைவரான சுனில்குமார் ஆகியோர் என 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து, மலையாள சினிமாவில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்கள் பாலியல் துன்புறுத்தல் உள்பட பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாவது குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற கேரள உயர்நீதிமன்ற நீதிபதி கே.ஹேமா தலைமையில் ஒரு விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டது.
இந்தக் கமிஷன் பாதிக்கப்பட்ட பல நடிகைகள் உள்பட பெண் கலைஞர்களிடம் நேரில் விசாரணை நடத்தியது. இதன்பின் கடந்த 2019ம் ஆண்டு கேரள முதல்வரிடம் விசாரணை கமிஷன் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள எந்த தகவலும் வெளியாகவில்லை. இதைத் தொடர்ந்து ஹேமா கமிஷன் அறிக்கையை வெளியிட அரசுக்கு உத்தரவிடக் கோரி தகவல் உரிமை சட்டத்தில் இந்த மாத தொடக்கத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த தகவல் உரிமை ஆணையம், ஹேமா கமிஷன் அறிக்கையை உடனடியாக வெளியிட உத்தரவிட்டது.
இந்த நிலையில் மலையாள திரையுலகில் தொடர்ந்து வரும் பாலியல் சீண்டல்கள் குறித்து 233 பக்கங்கள் கொண்ட ஹேமா கமிஷன் அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதில், ”மலையாளத் திரையுலகில் காஸ்டிங் கவுச் ஒரு பெரிய பிரச்சினையாகவே மாறி உள்ளது. இது பெண்கள் மீதான சுரண்டலுக்கு வழிவகுக்கிறது. வேலை வேண்டும் என்றால், அதற்கு ஈடாக பாலியல் ரீதியிலான பிரச்சனைகளை சந்திப்பதாகவும், இது ஆபத்தான ஒரு விஷயமாக மாறி வருவதாகவும் பெண்கள் தெரிவித்துள்ளனர்.
காஸ்டிங் கவுச் பிரச்சினை திரையுலகில் பெருமளவில் உள்ளது. பல நடிகைகள் திரைப்பட வாய்ப்புக்காக சமரசம் செய்து கொள்ளுமாறு கேட்கப்படுவதாகவும், மலையாள சினிமாவில் இது சகஜமாக நடந்து வருவதாகவும், சினிமா கனவோடு வரும் பெண் நடிகர்களை கட்டாயப்படுத்துவது இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் தான் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.
மலையாள திரையுலகில் இதுபோன்ற பாலியல் சீண்டல் அதிக அளவில் காணப்படுகிறது. இதனால், சினிமாவில் இருக்கும் பெண்கள் தனியாக வேலைக்குச் செல்வதை பாதுகாப்பற்றதாக உணர்கிறார்கள்.
சினிமா என்பது மற்ற தொழில்களில் இருந்து வேறுபட்டதாக உள்ளது. கல்லூரி, மருத்துவம், பொறியியல் போன்ற துறைகளில் பெண் இதுபோன்ற சங்கடத்தை குறைவாகவே சந்திக்கின்றனர். இந்த துறைகளை சேர்ந்தவர்களுக்கு வேலையை பெற, திறமை, மதிப்பெண், நேர்காணலில் தேர்ச்சி பெறுவது போதுமானதாக உள்ளது.
மலையாள திரையுலகில் நுழையும் புதிய நடிகைகள் அட்ஜெஸ்ட்மெண்ட் மற்றும் காம்ப்ரமைஸ் என பாதிக்கப்படுவது விசாரணையின் அடிப்படையில் உறுதி செய்யப்படுகிறது.
திரையுலகில் பல பெண்கள் அனுபவித்த பாலியல் துன்புறுத்தல்கள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன, மேலும் அவர்கள் அந்த விவரங்களை நெருங்கிய குடும்ப உறுப்பினர்களிடம் கூட தெரிவிக்க பயப்படுகின்றனர்.
உண்மையில், குழுவின் முன் ஆய்வுக்கு முன்வந்த பலரும் சினிமாவில் தாங்கள் அனுபவித்த பல பாலியல் துன்புறுத்தலகளை எங்களிடம் வெளிப்படுத்த பயப்படுகின்றனர். குறிப்பாக அதனால் பாதகமான விளைவுகள் ஏதேனும் ஏற்படுமோ என பயப்படுகிறார்கள்.
சமரசம் செய்து கொண்டு சிலர் படவாய்ப்பை பெற்று விடுகின்றனர். இதற்கு உடன்படாத போது அவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகுகின்றனர்.
தொழில்துறையில் உள்ள நன்கு அறியப்பட்டவர்களிடமிருந்தும் பெண்கள் துன்புறுத்தலை எதிர்கொள்கின்றனர் என்பதற்கான ஆதாரங்கள் (வீடியோ கிளிப்புகள், ஆடியோ செய்திகள், வாட்ஸ்அப் செய்திகள் போன்றவை உட்பட) முழுமையாக பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது.
பாலியல் சுரண்டலுக்கு பயந்து பெற்றோர்கள் அல்லது உறவினர்களுடன் நடிகைகள் படப்பிடிப்புகளுக்கு செல்கின்றனர்.
வெளியூர் படப்பிடிப்புகளின் போது, அதுமட்டுமில்லாமல், சினிமாவைச் சேர்ந்த பல ஆண்கள் குடி போதையில் அடிக்கடி பெண் கலைஞர்கள் தங்கியிருக்கும் ஹோட்டல் கதவுகளை தட்டுவது, அவர்களின் அறைகளுக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து ஆபாசமாக பேசி தங்களது இச்சைகளுக்கு பணியவைக்க பார்க்கின்றனர்.
நேர்காணல் செய்த பல பெண்களும் தங்களுக்கு வெளிப்புற படப்பிடிப்பு இடங்களில் கழிப்பறைகள் மற்றும் உடை மாற்றும் அறைகள் போன்ற அடிப்படை வசதிகள் கூட மறுக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
கேரவன்கள் முன்னணி ஆண் மற்றும் பெண் நடிகர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றன. ஆனால் மற்ற துணை நடிகைகள் அவற்றைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவதில்லை என்று அறிக்கை கூறுகிறது. அவர்கள் அருகிலுள்ள மரம் அல்லது புதர்களுக்குப் பின்னால் செல்லும்படி தள்ளப்படுகின்றனர்.
இதனால் பல பெண்கள் வெளிப்புற படப்பிடிப்பில் தண்ணீர் குடிப்பதையே தவிர்க்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதன் விளைவாக அவர்களுக்கு தொற்று மற்றும் அசௌகரியம் ஏற்படுகிறது.
முன்னணியில் இருக்கும் 10-15 நபர்களைக் கொண்ட ஒரு ஆண்கள் அதிகார குழு மலையாள திரையுலகை கட்டுப்படுத்துகிறது. இதில் நடிகர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் இயக்குநர்கள் என பட்டியல் நீள்கிறது.
இந்த ‘அதிகாரக் குழுவை’ யாராவது புண்படுத்தினால், அவர்கள் தொழில்துறையில் பணியாற்றுவதை தடுக்கும் வகையில் வாய்மொழியாக உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது” என அறிக்கையில் பல்வேறு அதிர்ச்சிகர தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலியல் துன்புறுத்தலை தடுக்க குழுவின் பரிந்துரைகள்!
மேலும் ஓய்வுபெற்ற நீதிபதி நீதிபதி கே. ஹேமா, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி கே.பி. வல்சலா குமாரி மற்றும் நடிகை டி. சாரதா ஆகியோர் அடங்கிய குழு மலையாள திரையுலகில் பெண்களின் பணிச்சூழலை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளை வழங்கியுள்ளனர்.
அதன்படி, பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு, பொருத்தமான சட்டங்கள் மற்றும் ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி கொண்ட தீர்ப்பாயம் அமைப்பதன் மூலம் மட்டுமே தீர்வு காண முடியும்.
தீர்ப்பாயத்தின் அனைத்து விசாரணைகளும் ‘கேமராவில்’ பதிவுசெய்யப்பட வேண்டும் என்றும், விசாரணையை எதிர்கொள்ளும் ஒருவர் வேறு எந்த மன்றத்திற்கும் தீர்வு காண செல்ல தடை இல்லை.
குற்றவியல் விசாரணை நடத்தும் அதிகாரம் இல்லாமல், தீர்ப்பாயத்தை சிவில் நீதிமன்றமாகவே கருத வேண்டும்.
புகார்தாரரின் நலனுக்குக் கேடு விளைவிக்கும் செயலில் குற்றச்சாட்டப்பட்டவர் ஈடுப்பட்டால், அந்த நபருக்கு எதிராக அபராதம் விதிக்கலாம்.
பெண்களை துன்புறுத்துவது, அடிப்படை வசதிகளை மறுப்பது, ஆபாசமான கருத்துக்களை கூறுவது, படப்பிடிப்பின் போது போதைப்பொருள் அல்லது மது அருந்துவது, அல்லது தொழிலில் இருந்து பெண்களுக்கு தடை விதிப்பது போன்றவற்றை கண்டறிந்தால் அபராதம் விதிக்க அல்லது தடை விதிக்க தீர்ப்பாயத்திற்கு அதிகாரம் உள்ளது.
துணை நடிகர்கள் உட்பட அனைவருக்கும் ஒரு பணி ஒப்பந்தம் விதிமுறையாக இருக்க வேண்டும்.
அத்தகைய ஒப்பந்தத்தில் வேலை நாட்கள் மற்றும் மணிநேரம், கட்டணம் செலுத்துதல் மற்றும் நிலுவைத் தொகையை வழங்குவதற்கு நிர்ணயிக்கப்பட்ட நேரம் ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும்” என ஹேமா கமிஷன் குழு தனது பரிந்துரைகளை அளித்துள்ளது.
அறிக்கையில் கூறப்பட்டுள்ள தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஹேமா கமிஷன் அறிக்கையை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கூறி பிரபல மலையாள சினிமா தயாரிப்பாளர் சஜிமோன் மற்றும் நடிகர் ரஞ்சினி ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
‘கர்ணன்’, ‘மாமன்னன்’ மொக்கை படமா? – ரஞ்சித் ஆவேசம்!
போர் நிறுத்தத்துக்கு இதுவே கடைசி வாய்ப்பு – இஸ்ரேலை எச்சரித்துள்ள அமெரிக்கா!