பாலியல் வன்கொடுமை வழக்கில் கேரள திரையுலகின் முன்னணி நடிகர் நிவின் பாலி உள்பட ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள திரையுலகில் நடிகைகள் சந்தித்த பாலியல் கொடுமைகள் குறித்து வெளியான ஹேமா கமிட்டி அறிக்கை, புயலை கிளப்பியுள்ளது. பல முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகைகள் பலரும் புகார் தெரிவித்துள்ளனர்.
இதனால் மலையாளர் நடிகர் சங்கமான அம்மாவின் தலைவர் பதவியில் இருந்து மோகன்லால் உள்பட அனைத்து முக்கிய நிர்வாகிகளும் கூண்டோடு தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.
இந்தநிலையில், கடந்த 2023-ஆம் ஆண்டு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி தன்னை துபாய்க்கு நிவின் பாலி அழைத்து சென்றதாகவும், அங்கு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் எர்ணாகுளத்தில் உள்ள உன்னுக்கள் காவல் நிலையத்தில் நடிகை ஒருவர் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் நிவின் பாலி உள்ளிட்ட ஐந்து பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
— Nivin Pauly (@NivinOfficial) September 3, 2024
தன் மீதான புகார் குறித்து விளக்கமளித்துள்ள நிவின் பாலி, “ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக தவறான ஒரு செய்தியை பார்த்தேன். என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.
இந்தக் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை என்பதை நிரூபிக்க எந்த எல்லைக்கும் செல்ல நான் உறுதியாக இருக்கிறேன். இந்த வழக்கை நான் சட்டப்படி எதிர்கொள்வேன். உங்கள் அக்கறைக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…