லியோ பாடல் வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டது பற்றி முறைப்படி போலீஸுக்கு அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் கடிதம் மூலமாக தெரிவித்திருக்கிறது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் ‘லியோ’ திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாக உள்ளது.
இதற்காக முதல் பார்வை போஸ்டர்கள், பாடல்கள், கிளிம்ஸ் வீடியோ வெளியிடுவது என புரோமோஷன் வேலைகளை படக்குழு செய்து வருகிறது. அந்த வகையில் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் செப்டம்பர் 30 ஆம் தேதி பாடல் வெளியீட்டு விழா நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகி இருந்தன.
இதற்கான மேடை அமைக்கும் பணிகளும் நேரு உள்விளையாட்டு அரங்கில் தீவிரமாக நடைபெற்று வந்தது. ஆனால் இசை வெளியீட்டு விழா நடைபெறாது என்று நேற்று முன்தினம் தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது.
இது குறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “பாதுகாப்பு காரணங்கள் மற்றும் விழாவிற்கு பாஸ் கேட்டு கோரிக்கைகள் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு ஆடியோ லாஞ்சை நடத்த வேண்டாம் என முடிவெடுத்துள்ளோம்.
எனினும் ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அடிக்கடி அப்டேட் கொடுக்கப்படும். இதில் வேறு அரசியல் அழுத்தங்கள் எதுவும் இல்லை” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் அரசியல் அழுத்தம் காரணமாக தான் ஆடியோ லாஞ்ச் ரத்து செய்யப்பட்டது என்று விமர்சிக்கப்பட்டது.
இது குறித்து நேற்று (செப்டம்பர் 27) “லியோ ஆடியோ விழா: விஜய்யை தடுத்தது யார்?” என்ற தலைப்பில் மின்னம்பலத்தில் விரிவாக செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்நிலையில் தான் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் நேரு உள் விளையாட்டு அரங்கம் அமைந்துள்ள பகுதியை உள்ளடக்கிய சென்னை பெரியமேடு காவல் நிலையத்துக்கு நேற்று கடிதம் எழுதப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தில், “செப்டம்பர் 30 ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் லியோ ஆடியோ லாஞ்ச் நடத்த போலீஸ் பாதுகாப்பு கேட்டு இருந்தோம்.
தற்போது அந்த நிகழ்ச்சி ரத்தாகி உள்ளது. நீங்கள் இதுவரை எங்களுக்கு அளித்த ஒத்துழைப்புக்கு எங்கள் நல்லெண்ணத்தைத் தெரிவிக்கிறோம். சிரமத்திற்கு மன்னிக்கவும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோனிஷா
Comments are closed.