செங்களம் : புதிர்கள் நிறைந்த அரசியல் கதை!

சினிமா

உதய் பாடகலிங்கம்

வெளுப்பான உடைகள், வண்ணக் கொடிகள், உற்சாகமூட்டும் முழக்கங்கள், பதவிசாக வலம்வரும் நிர்வாகிகள், தேர்தல் நேரத்தில் மட்டும் திரளும் அடிமட்டத் தொண்டர்கள் என்று திரைப்படங்களில் அரசியல் களத்தின் மிகச்சில பகுதிகளே காட்டப்பட்டிருக்கின்றன.

‘அச்சமில்லை அச்சமில்லை’ போன்ற படங்கள் அரசியல்வாதிகளை வில்லன்களாக சித்தரித்தன. அவற்றில் இருந்து விலகி, யதார்த்தமான அரசியல் களத்தை முன்னிலைப்படுத்தும் திரைக்கதைகள் மிகக்குறைவு. காரணம், அவற்றில் சாதாரண மக்களுக்கான சுவாரஸ்யங்கள் குறைவு என்பதுதான்; அது மட்டுமல்லாமல் அவர்களது எண்ணக் கணிப்புகளில் இருந்து மாறுபட்டதாகவும் அதன் நிகழ்வுகள் அமையும்.

அந்த தயக்கத்தை உடைத்தெறிந்து, அரசியலைச் சார்ந்திருக்கிற ஒரு குடும்பத்தினரின், அவர்களுக்கு நெருக்கமான உறவுகள், நட்புகளின் வாழ்வைச் சொல்ல முனைந்திருக்கிறது ‘செங்களம்’.

ஜீ5 தளத்தில் வெளியாகியிருக்கும் இந்த வெப்சீரிஸை இயக்கியிருப்பவர் எஸ்.ஆர்.பிரபாகரன்.

வாணி போஜன், கலையரசன், ஷாலி நிவேகாஸ், சரத் லோகித்சவா, வேல.ராமமூர்த்தி, பக்ஸ், முத்துகுமார், அர்ஜெய், விஜி சந்திரசேகர், மானஸா ராதாகிருஷ்ணன், பவன், பிரேம்குமார், பூஜா வைத்தியநாதன், கமலேஷ் உட்பட பலர் இதில் நடித்துள்ளனர்.

நகராட்சி அரசியல்!

விருதுநகர் நகராட்சித் தலைவராக இருக்கும் ராஜமாணிக்கம் (பவன்), தன் தந்தை சிவஞானத்திற்குப் (சரத் லோகித்சவா) பிறகு அப்பதவியை வகித்து வருகிறார். அதற்கு முன்னர், அவரது தாத்தா தலைவராக இருந்தார்.

பெரும் கட்சிகளின் செல்வாக்கு கூட, அக்குடும்பத்தின் முன்னே செல்லுபடியாவதில்லை. அந்தளவுக்கு ஊர் மக்களிடமும், நகர்மன்ற உறுப்பினர்களிடமும் சிவஞானத்தின் குடும்பம் ஆதிக்கம் செலுத்துகிறது. ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் அதனைக் குலைக்கச் சமயம் பார்த்துக் காத்திருக்கின்றன.

மனைவி இறப்புக்குப் பிறகு அரசியலில் மட்டுமே கவனம் செலுத்திவரும் ராஜமாணிக்கம், நீண்ட இடைவெளிக்குப் பிறகு சூர்யகலா (வாணி போஜன்) என்ற பெண்ணை இரண்டாவதாகத் திருமணம் செய்துகொள்கிறார்.

அரசியல்வாதிக்கு மனைவியாகி இருக்கிறோம் என்ற எண்ணத்துடன், ராஜமாணிக்கத்தின் செயல்பாடுகளை முகச்சுழிப்பின்றி ஏற்றுக்கொள்கிறார் சூர்யா. காரணம், அவரது நெருங்கிய தோழியான நாச்சியாரின் (ஷாலி நிவேகாஸ்) அரசியல் குறித்த பேச்சுகளைப் பள்ளி, கல்லூரிக் காலத்தில் கேட்ட அனுபவம் தான்.

அரசியலே கதி என்று ராஜமாணிக்கம் இருப்பது, அவரது குடும்பத்தினரை யோசிக்க வைக்கிறது. அதனை அறியும் சிவஞானம், நல்ல இல்லற வாழ்வை மகன் பெற வேண்டுமென்று விரும்புகிறார்.

அதற்காக, தம்பதியரைக் கொடைக்கானலுக்கு அனுப்பி வைக்கிறார். வழியில் அவர்களது கார் விபத்துக்குள்ளாக, ராஜமாணிக்கம் மரணமடைகிறார்; படுகாயங்களுடன் சூர்யகலா தப்பிக்கிறார்.

கணவரின் மரணத்திற்குப் பிறகு பெற்றோருடன் செல்ல விரும்பாமல், மாமனார் வீட்டிலேயே தங்குகிறார் சூர்யகலா. காரணம், அவரது அரசியல் ஆசை. அதற்கேற்ப, சூர்யகலாவை அடுத்த நகராட்சித் தலைவர் ஆக்கலாமா என்று யோசிக்கிறார் சிவஞானம். ஆனால், சிவஞானத்தின் மகன் நடேசனும் (பிரேம்) மகள் மரகதமும் (பூஜா) அதனை ஏற்பதாக இல்லை.

sengalam political web series

தடுமாற்றத்தில் மாமனார் இருப்பதை அறியும் சூர்யகலா, அரசியலில் தனக்கு வழி காட்டுவதற்காகத் தோழி நாச்சியாரைத் தேடிச் செல்கிறார்; தன்னுடன் வருமாறு அழைக்கிறார். நாச்சியார் உடன் அவரது மூத்த சகோதரர் ராயரும் (கலையரசன்) சூர்யகலா வீட்டுக்கு வருகிறார். அரசியலில் பெரும்பழமாகத் திகழும் சிவஞானத்திற்கே, நாச்சியாரின் வருகை அதிர்ச்சியைத் தருகிறது.

இந்த சூழலில் எதிர்பாராத சம்பவமொன்று நிகழ்கிறது. அதன் தொடர்ச்சியாக, ராயரும் அவரது சகோதரர்களும் சில நபர்களைக் கொலை செய்கின்றனர். அவர்களனைவரும் அரசியல் தொடர்புள்ளவர்கள்.

சூர்யகலா மற்றும் நாச்சியாரின் வாழ்க்கை என்னவானது? நகராட்சி அரசியலில் சிவஞானத்தின் குடும்பம் செல்வாக்கை நிலை நிறுத்திக்கொண்டதா? பெரும்பலம் கொண்ட கட்சிகள் இச்சூழலைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனவா? இக்கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது ‘செங்களம்’.

sengalam political web series

யார் இந்த நாச்சியார்?

இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் தனது முதல் படமான சுந்தரபாண்டியனை சுவாரஸ்யமான திரைக்கதையால் உயிர்ப்பித்தவர். கதாபாத்திர வடிவமைப்பு மற்றும் காட்சிகளைக் காணும்போது, அக்கதை உள் அடுக்குகள் கொண்டது புரியவரும். திரையில் சொல்லாமல் விட்ட சில விஷயங்கள் பார்வையாளர்கள் தாமாகப் புரிந்துகொள்ளும் வகையில் இருக்கும்.

அவர் இயக்கிய ‘இது கதிர்வேலன் காதல்’, ‘சத்திரியன்’, ‘கொம்பு வச்ச சிங்கம்டா’ படங்களில் அத்தகைய திரைக்கதை வார்ப்பு அமையவில்லை. அக்குறையைத் தீர்த்திருக்கிறது ‘செங்களம்’.

சதுரங்க ஆட்டத்திற்குச் செங்களம் என்று பெயர்; ரத்தம் படிந்த போர்க்களம் என்றொரு அர்த்தமும் இதற்குண்டு. பெயரே பாதிக் கதையைச் சொல்லிவிடும் என்ற வகையில், நல்லதொரு அரசியல் த்ரில்லரை தந்திருக்கிறார் இயக்குனர்.

அதற்கேற்ப, ராயரும் அவரது சகோதரர்களும் மூன்று கொலைகளைச் செய்துவிட்டு தலைமறைவாகத் திரிவதில் திரைக்கதை தொடங்குகிறது.

ராஜமாணிக்கத்தைக் கொன்றது யார் என்ற கேள்விக்கான பதிலை இறுதிவரை சொல்லாமல் தவிர்த்திருக்கிறார் இயக்குனர். அதேபோல ராயருக்கும் சூர்யகலாவுக்குமான உறவும் கூட கதையில் தெளிவுறச் சொல்லப்படவில்லை.

sengalam political web series

இக்குறைகளை மீறி ‘செங்களம்’ நம்மை ஈர்ப்பதற்கான காரணம், சிவஞானம் குடும்பத்தினர் தக்க வைத்திருக்கும் செல்வாக்கு மெல்லச் சரிவதை சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கும் விதமே.

கலையரசன் ஒரு கமர்ஷியல் பட கதாநாயகன் போலவே இதில் வலம் வருகிறார். அதேநேரத்தில் வேல.ராமமூர்த்தி, பக்ஸ், முத்துகுமார், அர்ஜெய், பவன், பிரேம்குமார், கஜராஜ், விஜி சந்திரசேகர் என்று பிரபலமான பல கலைஞர்கள் இதில் மிகச்சாதாரண மனிதர்கள் போலவே வந்து போயிருக்கின்றனர்.

டிவி நடிகரான கமலேஷ் முதல் டேனியல் போப், லகுபரன், கான்ஸ்டபிளாக வரும் சூப்பர்குட் சுப்பிரமணி என்று முகம் தெரிந்த கலைஞர்கள் பலரும் இதில் சிறு வேடங்களில் தோன்றி நம் கவனத்தைக் கவர்கின்றனர்.

’பாண்டியநாடு’ படத்திலேயே தன் திறமையை நிரூபித்த சரத் லோகித்சவாவுக்கு, இதில் அதே சாயலில் இன்னொரு பாத்திரம். அவரது மகளாக வரும் பூஜா வைத்தியநாதனுக்குக் காட்சிகள் குறைவென்றாலும் திரைக்கதையில் முக்கியத்துவம் அதிகம்.

பிரதான பாத்திரமாக வரும் வாணி போஜனுக்கு காட்சிகள் அதிகம்; திரையில் துருத்திக்கொண்டு தெரியாத அளவுக்கு ‘அண்டர்பிளே’ செய்து அசத்தும் வாய்ப்பு; அதனைச் சரிவரப் பயன்படுத்தியிருக்கிறார்.

செங்களத்தைப் பொறுத்தவரை, தொடக்கத்தில் மானசா ராதாகிருஷ்ணன் சம்பந்தப்பட்ட காட்சிகள் இளையோரை எளிதாகச் சுண்டியிழுக்கும். ஆனால், அதற்கேற்றவாறு அதிகக் காட்சிகள் அவருக்குக் கொடுக்கப்படவில்லை.

தேநேரத்தில், ’யார் இந்த நாச்சியார்’ என்று பார்வையாளர்கள் கேட்கும் அளவுக்கு மிரள வைத்திருக்கிறார் ஷாலி நிவேகாஸ். மிகத்தாமதமாகத் தலைகாட்டினாலும் அனைவரையும் தன்வசப்படுத்துகிற வாய்ப்பை மிகச்சிறப்பாகப் பயன்படுத்தியிருக்கிறார்.

அவரது கண்ணசைவுகளில் தென்படும் உறுதியே, பாதி வெற்றியைத் தந்துவிடுகிறது; ‘செங்களம்’ நிச்சயம் ஓடிடி ரசிகர்களிடம் அவரைப் பிரபலமாக்கும்.  

டிவி சீரியல் பாணியில் அமைந்த வெற்றிவேல் மகேந்திரனின் ஒளிப்பதிவு காட்சிகளின் நம்பகத்தன்மையை அதிகரிக்க உதவியிருக்கிறது. முத்துவின் கலை வடிவமைப்பும் தரண்குமாரின் பின்னணி இசையும் காட்சிகளின் தாக்கத்தைச் செறிவுமிக்கதாக மாற்ற உதவியிருக்கின்றன.

பிஜு டான்பாஸ்கோவின் படத்தொகுப்பு கதாபாத்திரங்களின் உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் தந்திருக்கிறது. அதனால், ஒவ்வொரு அசைவுக்கும் இடம்விடப்படுவதால் ’சீரியல் பார்க்கிறோமோ’ என்ற உணர்வு அதிகமாகிறது.

9 எபிசோடுகளாக பிரித்து ‘செங்களம்’ திரைக்கதையை வடிவமைத்து இயக்கியுள்ளார் எஸ்.ஆர்.பிரபாகரன். முதல் எபிசோடில் விஜி சந்திரசேகர் வரும் காட்சிகள் சீரியல்தனமாக இருந்தாலும், மெதுமெதுவாக திரைக்கதை சூடு பிடிக்கிறது.

நிகழ்காலத்தையும் கடந்தகாலத்தையும் காட்ட இன்று, அன்று ஒருநாள் என்று பிரித்துக் காட்டுகிறார் இயக்குனர். அதனால் ஆண்டையோ மாதத்தையோ தேதியையோ நினைவில் வைக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போயிருக்கிறது.

இதையெல்லாம் யோசித்த இயக்குனர், மையக்கதையை விட்டு விலகி ஆங்காங்கே இளைப்பாறி நின்றதைத் தவிர்த்திருக்கலாம்.

sengalam political web series

யோசிக்க வைத்த இயக்குனர்!

ஒரு நகராட்சியை மையப்படுத்திய கதையாக ‘செங்களம்’ அமைந்தாலும், திரையில் சொல்லப்பட்ட சில சம்பவங்கள் அவ்வாறானதாக இல்லை. மாநில, தேசிய அரசியல் தொடர்பான செய்திகளை, கட்டுரைத் தகவல்களை, அதிகாரப்பூர்வமற்று வெளியான விஷயங்களைத் தொட்டுச் செல்கின்றன சில காட்சிகள்.

செங்களம் கதையில் சூர்யகலா, நாச்சியார் இருவரையும் தோழிகளாகக் காட்டியிருக்கிறார் இயக்குனர். கூடவே, ஒருவரது நடை, உடை, பாவனை, அரசியல் வட்டாரத்தில் அதிகாரத்தை வெளிப்படுத்தும் விதத்தில் இன்னொருவர் ஆலோசனைகள் சொல்வதாகவும் காட்டியிருக்கிறார். சினிமா, அரசியல் இரண்டிலும் ஆர்வம் கொண்டவர்களுக்கு, இது போன்ற சித்தரிப்பு சில பிரபலங்களை, அவர்களைச் சார்ந்தவர்களை நினைவூட்டுவது நிச்சயம்.

அரசியல் களம் குறித்த சில வசனங்கள், இப்படைப்பை எதிர்மறையாக விமர்சிக்கும் சூழலை உருவாக்கலாம். அது போன்ற விளைவுகளை எதிர்பார்த்தே ‘செங்களம்’ தந்திருக்கிறாரோ என்று யோசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் பிரபாகரன்.

முழுமையாக ‘செங்களம்’ பார்த்தபிறகு சலிப்பு தட்டலாம், ஏமாற்றமடைய நேரலாம், அறமற்ற பார்வையை முன்வைக்கிறதே என்ற எண்ணம் மண்டையைக் குடையலாம். ஆனால், அப்போது நம் மனதில் எழும் சில அடிப்படைக் கேள்விகள், அடுத்த சீரிஸுக்கான திரைக்கதையை உருவாக்கும் வல்லமை கொண்டவை. அந்தளவுக்கு கதாபாத்திரச் சித்தரிப்பு, உணர்வுகளின் மோதல், வார்த்தை விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் தருகிறது இப்படைப்பு. மொத்தத்தில், ‘அரசியல் ஒரு புதிர்’ என்ற வாதத்தை வலுப்படுத்த உதவுவதால் இளைய தலைமுறையைக் கவர வாய்ப்புகள் அதிகம்!

ராகுல் தகுதி நீக்கத்துக்கு வானதி எதிர்ப்பா? சட்டமன்றத்தில் ’கருப்பு’ சலசலப்பு!

ஈகோ பிரச்சனை சாதாரணமானது: ஷிகர் தவான்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *