நட்பு குறித்து இயக்குனர் செல்வராகவன் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு வைரலாகி வருகிறது.
நண்பர்களே தனக்கு இல்லை என்று செல்வராகவன் போட்ட பதிவுக்கு பலரும் நாங்கள் இருக்கிறோம், இன்று முதல் நாம் நண்பர்களாக ஆகிடலாம் என்று கூறிவருகின்றனர்.
காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன என தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கியவர் செல்வராகவன். இவர் பீஸ்ட் திரைப்படத்தின் மூலம் நடிகராக களமிறங்கினார்.
சமீபத்தில் மோகன் ஜி இயக்கிய பகாசூரன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் இவரது நடிப்புக்கு பாராட்டுகளும் கிடைத்து வருகின்றன.
இப்படி நடிகராக கலக்கிக் கொண்டிருக்கும் செல்வராகவன், கைவசம் நிறைய படங்களையும் வைத்திருக்கிறார்.
இந்நிலையில், செல்வராகவன் இன்று (மார்ச் 1 ) வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதில் “அனுபவத்தில் சொல்கிறேன். நல்ல நண்பர்களை மட்டும் இழந்து விடாதீர்கள். எனக்கு நண்பர்களே கிடையாது. 23 வருடங்களாய் வேலையை தவிர எதையும் யோசித்ததில்லை.
இன்று நண்பர்களுடன் ஆனந்தமாய் இருப்பவர்களை பார்த்தால் பொறாமையாய் உள்ளது.. எங்கு போய் நட்பை தேடுவேன்” என குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள், உங்களுக்கு நாங்க இருக்கோம் என நட்புக்கரம் நீட்டி வருகின்றனர்.
செல்வராகவனின் இந்த பதிவு பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. ட்விட்டரில் செல்வராகவன் கருத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். சிலர் மாற்றுக்கருத்தையும் தெரிவித்துள்ளனர்.
அவருக்கு பதில் அளித்துள்ள திருமூர்த்தி என்ற நெட்டிசன் ஒருவர், ‘நீங்கள் சொல்வது சரிதான்.. ஆனால் இந்த காலத்து நண்பர்கள் எப்போது வேண்டுமானாலும் முதுகில் குத்துவார்கள்…நண்பர்களால் ஏமாந்தவர்களே இங்கு அதிகம் அண்ணா. தனிமைதான் நிரந்தரம்’ என்று கூறியுள்ளார்.
மேலும், சங்கர் கணேஷ் என்பவர், ‘நல்ல நட்பு என்பது தேட வேண்டியது இல்லை… அது கடலில் இருக்கும் அலை போல…கடலில் இருந்து அலைகள் கரைக்கு வந்தாலும் அது மீண்டும் கடலுக்கு திரும்ப செல்லும் அதுபோல நல்ல நட்பு என்பது உங்களை தேடி திரும்ப வரும்…வருத்தம் வேண்டாம் என் குருவே’ என்று பதிவிட்டுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
3வது டெஸ்ட்: கே.எல். ராகுல் வெளியே… சுப்மன் கில் உள்ளே!