நடிகர் தனுஷ் 2002 ஆம் ஆண்டு வெளியான ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அறிமுகமான முதல் படமே வசூலில் சூப்பர் ஹிட் அடித்தது.
அதனைத் தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ‘காதல் கொண்டேன்’ படம் தனுஷ், செல்வராகவன் இருவருக்கும் தனித்த அடையாளத்தை தமிழ் சினிமாவில் பெற்று தந்தது.
கடந்த 22 ஆண்டுகளாக தமிழ், இந்தி, ஆங்கிலம் என வெரைட்டியான படங்களில் நடித்து வரும் தனுஷ் ராஜ்கிரண், ரேவதி நடித்த ‘ப.பாண்டி’ படத்தின் மூலம் இயக்குநராகவும் ஆனார்.
நடிப்பு, இயக்கம் என இரு தளங்களிலும் வெற்றி பெற்ற தனுஷ் தற்போது தான் நடிக்கும் 50-வது படத்தை அவரே நடித்து, இயக்குகிறார். இது இந்திய சினிமாவில் எந்த நடிகரும் செய்யாதது.
இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். தனுஷுடன், காளிதாஸ் மற்றும் சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் இணைந்து நடிக்கும் இத்திரைப்படம் இந்த ஆண்டே வெளியாகும் என பட நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், ‘ராயன்’ படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவை தொடர்ந்து, இயக்குநர் செல்வராகவனும் இணைந்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள பதிவில், செல்வராகவனின் போஸ்டருடன், “ராயன் உலகத்தில் செல்வராகவனை அறிமுகம் செய்கிறோம்”, என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் தனது திரையுலக வாழ்க்கைக்கு அஸ்திவாரம் போட்ட சகோதரரும், இயக்குநருமான செல்வராகவன் நடிக்கவிருப்பதை பற்றி, ”உங்களை இயக்குவேன் என நினைத்துக்கூட பார்க்கவில்லை”, என நடிகர் தனுஷ் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.
Thanks for the opportunity director sir ! It's gonna be an epic and I'm so proud of you ! 👏👏@sunpictures https://t.co/EBAuAlYzEG
— selvaraghavan (@selvaraghavan) February 22, 2024
பதிலுக்கு, “வாய்ப்பிற்கு நன்றி இயக்குநர் சார். உங்களை நினைத்து பெருமை கொள்கிறேன்”, என இயக்குநர் செல்வராகவன் அதற்கு பதிலளித்துள்ளார்.
தனுஷ் இயக்கி, நடிக்கும் அவரின் 50-வது படத்திற்கு ‘ராயன்’ என பெயரிட்டுள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
–ராமானுஜம்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மீண்டும் விலை குறைந்த தங்கம்… இன்றைய விலை இதுதான்!
போராட்டத்தில் விவசாயி உயிரிழப்பு: ரூ.1 கோடி நிவாரணம் அறிவித்த பகவந்த் மான்