சீனு ராமசாமி இயக்கத்தில் ஏகன், யோகிபாபு நடிக்கும் ‘கோழிப்பண்ணை செல்லதுரை ‘ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (செப்டம்பர் 12) நடைபெற்றது.
இந்த நிகழ்வில் இப்படத்தில் நடித்த யோகி பாபு, ஏகன், பிரிகிடா, பவா செல்லதுரை, சத்ய தேவி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நடிகர் விஜய் சேதுபதி, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி , நடிகர் ரியோ ராஜ் , இயக்குநர் ஹரிஹரன் ஆனந்த் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பேசுகையில் “சகோதரன் ஏகனுக்கு முதலில் வாழ்த்துக்கள். இதுபோன்ற ஒரு விழாவில் 11 ஆண்டுகளுக்கு முன்பு நான் நின்ற போது எனக்கு இவ்வளவு தைரியம் இல்லை. நான் மிகவும் நடுக்கத்துடன் தான் இருந்தேன். ஆனால் உங்கள் முகத்தில் நல்லதோர் நம்பிக்கை தெரிகிறது. பாடல்களிலும் , காட்சிகளிலும் சிறப்பாக நடித்துள்ளீர்கள்.
சீனு ராமசாமியிடம் எனக்கு மிகவும் பிடித்தது, எத்தனை முறை அவர் இந்தத் தேனியில் படம் எடுத்தாலும், ஒவ்வொரு முறையும் இந்த தேனியை அவர் வித்தியாசமாக தான் காட்டுவார். கதை சொல்லும் போதும் அதை படமாக்கும் போதும் எந்த தருணத்திலும் அவர் சிறிது யோசித்தோ அல்லது தடுமாறியோ நான் பார்த்ததே இல்லை.
தன்னை நம்பி ஒரு தயாரிப்பாளர் பணத்தை முதலீடு செய்தால் அதனை எவ்வளவு சிக்கனமாக செலவு செய்து படத்தின் தரத்தை குறைக்காமல் ரசிகர்களுக்கு தெளிவாக புரியும் வகையில் படத்தை நிறைவு செய்ய முடியுமோ, அதனை நேர்த்தியாக செய்யக்கூடியவர் சீனு ராமசாமி.
அந்த வகையில் நான் பார்த்து வியந்த இயக்குநர் சீனு ராமசாமி. இதுவரை அவரது இயக்கத்தில் நான் நான்கு படங்களில் நடித்திருக்கிறேன்.
‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்திலிருந்து ‘மாமனிதன்’ வரை அவருடன் இணைந்து பணியாற்றும் போது எங்களுக்கான பட்ஜெட் அதிகமாக கிடைத்தாலும் படத்திற்கு என்ன தேவையோ அதை பொறுப்புணர்ந்து செயல்படுபவர் சீனு ராமசாமி.
அதனால் சீனு ராமசாமி போன்ற ஒரு இயக்குநர் மூலம் ஏகன் அறிமுகமாவதற்கு ஏகன் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும்” எனப் பேசினார்.
இந்நிகழ்வில் இயக்குநர் சீனு ராமசாமி பேசுகையில், ”சினிமாவின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான தேவை என்ன என்பது குறித்து நான் எப்போதும் சிந்தித்துக் கொண்டே இருப்பேன். ஒரு திரைப்படம் தயாராகிறது, திரையரங்கத்தில் திரையிடப்படுகிறது, வசூல் செய்கிறது. அதன் பிறகு அந்த திரைப்படத்தை மக்கள் மறந்து விடுகிறார்கள்.
அப்படி என்றால் இது வணிகம் மட்டும் தானா? இது சந்தை மதிப்புள்ள பொருள் மட்டும் தானா? இந்தக் கேள்விகள்.. எனக்குள் நீண்ட நாட்களாக இருக்கிறது. இதற்கு மாற்றாக என்ன செய்யலாம், என்ன மாதிரியான விஷயங்களை முன்னிலைப்படுத்தலாம் என நான் சிந்திக்கும்போது எனக்கு இருப்பது நிலம், அது என் நிலம், என் ஊர், என் மண், நான் வாழ்ந்த வாழ்க்கை.
நான் வாழ விரும்பும் ஒரு வாழ்க்கை. கதை என்றால் அது என் நிலம் தான். என் மண்ணுடன் தொடர்புடையது.சினிமா உண்மையிலேயே ஒரு மாற்றத்தை சந்திக்க வேண்டும் என்றால் இடைவேளை என்ற ஒரு விஷயத்தை நீக்கிவிட வேண்டும்.
இது மிக முக்கியமான கருத்து. உடனடியாக திரையரங்குகளில் பாப்கார்ன் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்பவர்கள் என் மீது கோபம் கொள்ளக்கூடாது. ஏனெனில் பாப்கார்ன் சாப்பிடுபவர்கள் எப்போது வேண்டுமானாலும் அதனை சாப்பிடுவார்கள்.
அந்தக் காலத்தில் நாடகத் துறையில் இருந்து சினிமா வந்தது. சம்பூர்ண ராமாயணம் – மூன்றரை மணி நேரம் திரைப்படமாக வந்தது. அதனை ஒரே தருணத்தில் தொடர்ச்சியாக திரையிட முடியாது என்பதற்காக இரண்டு முறை இடைவேளைகள் அளிக்கப்பட்டன. இது நாளடைவில் ஒரு இடைவேளையாக மாற்றம் பெற்றிருக்கிறது.
இணையத் தொடர்கள் அறிமுகமாகி இருக்கிறது. ஆனால் அதற்கு தமிழில் பெரிய அளவில் வரவேற்பு இல்லை. ஆனால் மேற்கத்திய நாடுகளில் இணைய தொடர்களுக்கு பெரும் வரவேற்பு இருக்கிறது. ஏனெனில் அவர்கள் முழு நீள திரைப்படத்தை பார்த்து பழக்கப்பட்டவர்கள்.
அவர்கள் பாகம் பாகமாக படைப்பை பார்ப்பதை விரும்புகிறார்கள். ஆனால் நாம் இரண்டு பாகமாகத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம். முதல் பாதி – இரண்டாம் பாதி என இரண்டு பாகமாகத்தான் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதனால் தான் கூடுதலாக மூன்று அல்லது நான்கு பாகங்கள் இணைத்தால் நமக்கு பிடிப்பதில்லை.
சினிமா என்பது முழு உடல். அதனை அரை மணி நேரம் பார்த்துவிட்டு அப்படியே நிறுத்திவிட்டு, இதற்கு முன் எப்படி இருக்கும் எனக் கேட்பது தவறு. முழு உடல், முழு தரிசனம். அப்படி ஒரு முழு தரிசனம் இந்த ‘கோழிப்பண்ணை செல்லதுரை’யில் கிடைக்கும் ” எனப் பேசினார்.
இதற்கடுத்து, இசையமைப்பாளர் என்.ஆர்.ரகுநந்தன் அமைத்த பாடல்களை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பெற்றுக்கொண்டார்.
–ஷா
“இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும்… ஆனால் : மீண்டும் பேசுபொருளான துரைமுருகனின் பேச்சு!