தென்மேற்குப் பருவ காற்று, தர்மதுரை கண்ணே கலைமானே மாமனிதன் போன்ற படங்களை இயக்கியவர் இயக்குனர் சீனு ராமசாமி. யதார்த்தமான காட்சிகள் மூலம் தான் சொல்ல வரும் கதையை திரையில் அழகாக காட்ட கூடியவர் இயக்குனர் சீனு ராமசாமி.
இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான மாமனிதன் படம் வசூல் ரீதியாக வெற்றி அடையவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக பலரின் பாராட்டுக்களையும், விருதுகளையும் பெற்றது.
சமீபத்தில் இயக்குனர் சீனு ராமசாமி குறித்து ஒரு வீடியோவில் பேசிய சினிமா பத்திரிகையாளர் பிஸ்மி, “இயக்குனர் சீனு ராமசாமியின் படங்கள் சிறந்த படங்கள் என்று ஒப்புக்கொள்வதில் சிலருக்கு உடன்பாடு இல்லை. சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான கண்ணே கலைமானே, மாமனிதன் போன்ற படங்களுக்கு நல்ல விமர்சனங்கள் மற்றும் பாராட்டுகள் கிடைத்தாலும், வசூல் ரீதியாக வெற்றி கிடைக்காது.
ஆனால் சீனு ராமசாமி படத்தின் ரிசல்ட் தெரிந்தாலும் அந்த படம் சில விருதுகள் வாங்கியதாக பத்திரிக்கைகளுக்கு செய்தி அனுப்பிக் கொண்டே இருப்பார். மேலும் அவரது சமூக வலைதள பக்கத்திலும் விருதுகள் வென்றது குறித்து பதிவு செய்து கொண்டே இருப்பார். சீனு ராமசாமி போல தான் இயக்குனர் பார்த்திபன் அவர்களும். அவரது படங்களும் வசூல் ரீதியாக வெற்றி பெறாது. ஆனால் தனது படத்தை விருதுகளுக்கு அனுப்புவார்.
இது குறித்து என்னுடைய நண்பர் ஒருவர் கூறியபோது, சீனு ராமசாமி மற்றும் பார்த்திபன் இவர்கள் இருவரும் செத்த பிணத்திற்கு மேக்கப் போட்டுகிட்டு இருக்கிறார்கள் என்று என்னிடம் சொன்னது, தற்போது என் ஞாபகத்திற்கு வருகிறது” என்று பிஸ்மி அந்த வீடியோவில் பேசியிருந்தார்.
பிஸ்மியின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இயக்குனர் சீனு ராமசாமி தனது எக்ஸ் பக்கத்தில், “தியேட்டரில் வசூல் குறைவு தான் பிஸ்மி. ஆனால் மாமனிதன் ஆகா ஓடிடியில் வெற்றி. செத்த பொணத்தை எதுக்குப்பா மாஸ்க்கோ 45 வது திரைப்பட விழாவில் உலக நாடுகள்ல திரையிடுறாங்க. நா பதிவிடுவது உனக்கோ உசிரு இல்லைன்னு சொன்ன ஆளுக்கோ இல்லடா.
நீ செத்த பிறகு வரும் என் இளைய தலைமுறைக்கு. அதுசரி ஒரு கோடி வருமானம் காட்டி income tax கட்டிட்டேயேபா கெட்டிக்காரன் தான்” என்று பதிவிட்டிருக்கிறார்.
இயக்குனர் சீனு ராமசாமியின் இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
விருப்ப ஓய்வு கேட்கும் எஸ்.பி: காரணம் என்ன?
மசோதாக்களை ஆளுநர்கள் இழுத்தடிப்பது ஏன்? – உச்சநீதிமன்றம் கேள்வி!