தமிழில் ‘வாயை மூடி பேசவும்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஷான் ரோல்டன். தொடர்ந்து ‘முண்டாசுப்பட்டி’, ‘ப.பாண்டி’, ‘மெஹந்தி சர்க்கஸ்’ உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமானார்.
கடைசியாக சூர்யா நடிப்பில் ஞானவேல் இயக்கி ஓடிடியில் வெளியாகி பெரும்வெற்றி பெற்ற ‘ஜெய் பீம்‘ படத்திற்கு இசையமைத்திருந்தார்.
இந்நிலையில் ஷான் ரோல்டன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில்,
“என் நண்பர் இயக்குநர் ஒருவர் கம்யூனிச சித்தாந்தத்தை தன் உயிர்மூச்சாய் கொண்டவர்.
எங்கள் பிணைப்பையும், கலை சார்ந்த கெமிஸ்ட்ரியையும் இந்த திரையுலகம் நன்கு அறியும்.
ஆனால், அவரும் இன்று வியாபார கோட்பாட்டுக்கு விலை போனது வருத்தத்தை அளிக்கிறது.
சித்தாந்தங்களை இங்கு வாய் கிழிய பேசுவார்கள். ஆனால், நடைமுறையில் இவையெல்லாம் நம் தமிழ்நாட்டில் போணியாவதில்லை என்பதே நிதர்சனம்.
இனி, சித்தாந்தம் என்ற பெயரில் வாய் சவடால் விடுபவர்களை புறக்கணியுங்கள். மார்க்கெட் தான் நம் கடவுள்” என குறிப்பிட்டுள்ளார்.
இவரது பதிவு தற்போது கோலிவுட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் சமீப ஆண்டுகளாக கம்யூனிச சித்தாந்தங்களை முன்மொழிந்து பேசுபவர்களில் ராஜுமுருகன், ஞானவேல் ஆகியோர் முக்கியமானவர்கள்.
இருவரது படங்களுக்கும் ஷான் ரோல்டன் பணியாற்றியுள்ளார்.
தற்போது ராஜு முருகன், ஞானவேல் இருவரும் முன்னணி கதாநாயகர்கள் நடிக்கும் பிரம்மாண்டமான பட்ஜெட் படங்களை இயக்க உள்ளனர்.
சித்தாந்தங்களை பேசிய படங்களுக்கு இசையமைக்க வாய்ப்பு கொடுத்து, தற்போது அவர்கள் இயக்கும் வணிக ரீதியான மசாலா படங்களுக்கு இசையமைக்க அழைக்காததையே மறைமுகமாக ஷான் ரோல்டன் சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளதாக தமிழ் சினிமா இயக்குநர்கள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இராமானுஜம்