தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட 3வது மனுவை விசாரிக்கவும் உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.
‘லவ் ஜிகாத்’ கருத்தை மையப்படுத்தி இயக்குநர் சுதிப்தொ சென் ‘தி கேரளா ஸ்டோரி‘ படத்தை இயக்கியுள்ளார்.
தி கேரளா ஸ்டோரி என்ற படத்தில் அடா சர்மா, பிரணவ் மிஷ்ரா, யோகிதா பிஹானி, சித்தி இத்லானி , சோனியா பாலானி என பலர் நடித்துள்ளனர்.
வரும் மே 5 ஆம் தேதி தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ள இந்த படத்தின் டிரெய்லர் கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி வெளியானது.
டிரெய்லரில் இந்து, கிறிஸ்தவ மதங்களை சேர்ந்த பெண்களை மூளைச்சலவை செய்து மதம் மாற்றப்பட்டது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
மேலும் மதம் மாற்றப்பட்ட பெண்கள் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் சேர்வது போன்ற காட்சிகளும் இடம்பெற்றிருந்தன.
இதற்கு கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆகியவை கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.
இந்நிலையில், தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், வழக்கறிஞர் நிஜாம் பாஷா ஆகியோர் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.
தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள நிலையில் சம்பந்தப்பட்ட துறையை அணுகாமலும், உயர்நீதிமன்றத்திற்கு செல்லாமலும், நேரடியாக உச்சநீதிமன்றத்தை அணுகியது தவறு என்று குறிப்பிட்டு மனுக்களை விசாரிக்க மறுத்தது உச்சநீதிமன்றம்.
இதனையடுத்து, தி கேரளா ஸ்டோரி பட வெளியீட்டை தடை செய்யக் கோரி முஸ்லீம் மதகுரு அமைப்பான ஜமியத் உலமா-ஐ-ஹிந்த் தாக்கல் செய்த மற்றொரு மனு மீதான விசாரணை இன்று (மே 3) உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் மற்றும் நீதிபதி பி.எஸ். நரசிம்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, முஸ்லீம் மதகுரு அமைப்பான ஜமியத் உலமா-ஐ-ஹிந்த் சார்பில் மூத்த வழக்கறிஞர் விருந்தா குரோவர் ஆஜரானார்.
அவர் தனது வாதத்தில், “இந்தியா முழுவதும் வெளிவரத் திட்டமிடப்பட்டுள்ள இந்தத் திரைப்படம், சமூகத்தின் பல்வேறு பிரிவுகளுக்கு இடையே வெறுப்பையும் பகைமையையும் ஏற்படுத்தும்.
மேலும் படம் வெளியாவதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை கேரள உயர்நீதிமன்றம் விசாரித்து வருகிறது” என்று தெரிவித்தார்.
இதனைக் கேட்ட நீதிபதிகள், “அடிப்படை உரிமைகளை அமல்படுத்த உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் வழங்கும் பிரிவு 32, எல்லாவற்றுக்கும் தீர்வாக இருக்க முடியாது” என்று தெரிவித்தனர்.
மேலும் இந்த வழக்கு தொடர்பாக கேரள உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு மனுதாரருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
தி கேரள ஸ்டோரி படம் வெளியாவதற்குத் தடை கோரிய மனுக்கள் கேரள உயர்நீதிமன்றத்தில் மே 5 ஆம் தேதி விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டுள்ளன.
மோனிஷா
நடிகர், இயக்குநர் மனோபாலா காலமானார்!
மனோ பாலா மறைவு: ரஜினி இரங்கல்!
பல் பிடுங்கிய விவகாரம்: சிபிசிஐடி மேலும் ஒரு வழக்குப் பதிவு!