நடிகர் சத்யராஜ் மீண்டும் வில்லனாக நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.
தமிழ் சினிமாவில் 80’களில் மிரட்டும் வில்லனாக வலம் வந்தவர் சத்யராஜ். ‘மூன்று முகம்’, ‘பாயும் புலி’ போன்ற பல படங்களில் வில்லனாக நடித்தவர். பின்பு கதாநாயகனாகவும் நடிக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்திற்கு மேல் வில்லன் கதாபாத்திரங்களில் இருந்து மெல்ல மெல்ல விலகினார் சத்யராஜ்.
இப்பொழுது ‘பாகுபலி’, ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘வீட்ல விசேஷம்’ என கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் இருக்கக்கூடிய படங்களில் கவனம் செலுத்தினார். இந்நிலையில், ‘என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டீங்கறயே’ என மிரட்டும் வில்லனாகத் திரையில் மீண்டும் தோன்ற ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மீண்டும் வில்லனாக நடிக்க வேண்டும் என்பதற்காக தீவிரமாகக் கதை கேட்டு வருகிறார் சத்யராஜ். பல முன்னணி இயக்குநர்களிடம் கதை கேட்டும் எதிர்மறை கதாபாத்திரம் தன்னுடைய நடிப்பு ஆர்வத்துக்கு ஈடு கொடுக்கும் வகையில் இல்லை என்கிறாராம் சத்யராஜ். ‘அமைதிப்படை’ அமாவாசையை மிஞ்சும் அளவுக்கான வில்லன் கதாபாத்திரம் அமைய வேண்டும் என்பது தான் சத்யராஜின் தற்போதைய ஆசை. விரைவில் அதை நிறைவேற்றும் கதாபாத்திரத்திற்காகக் காத்திருக்கிறார்.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘சிவாஜி’ படத்தில் வில்லன் கதாபாத்திரம் வந்த போது சத்யராஜ் அதில் நடிக்க மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதிரா