உதய் பாடகலிங்கம்
பெண்களின் விருப்பங்களுக்கான முன்னுரிமை!
சில திரைப்படங்கள் மேலோட்டமான பார்வையில் வெகுசாதாரண மசாலா படங்களாகத் தோற்றம் தரும். ஆனால், அது பேசும் விஷயம் மிகப்பெரியதாக இருக்கும். சமூக அளவில் மாற்றங்களுக்கான தூண்டுதலாக அமையும். சமீர் வித்வன்ஸ் இயக்கத்தில் கார்த்திக் ஆர்யன், கியாரா அத்வானி உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘சத்யபிரேம் கி கதா’ எனும் இந்தித் திரைப்படமும் அந்த வரிசையில் இடம்பெறுகிறது. இவ்வளவு பில்டப் தரும் அளவுக்கு படத்தில் அப்படியென்ன இருக்கிறது?

உண்மைக்காதலின் கதை!
வேலைவெட்டிக்குச் செல்லாமல் பகல்கனவுகளில் திளைத்துவரும் சத்யபிரேம் (கார்த்திக் ஆர்யன்) தன்னை நாயகனாகப் பாவிக்கும் ஒரு முதிர்ந்த இளைஞன். அவரது வயதையொத்தவர்களில் பெரும்பாலானோருக்குத் திருமணமாகிக் குழந்தைகளும் இருக்கின்றன. ஆனால் சட்டப்படிப்பை முழுமையாக முடிக்காமல் சமைப்பது, துவைப்பது, பாத்திரங்கள் துலக்குவது என்று வீட்டு வேலைகள் செய்து வருகிறார் சத்யபிரேம்.
தந்தை நாராயணனைத் (கஜராஜ் ராவ்) தவிர, அவருக்கென்று நெருங்கிய நண்பர்கள் எவரும் கிடையாது. எந்தப் பெண் உடனும் நட்போ, காதலோ கொள்ளாமல் கன்னிப்பையனாக இருந்து வருகிறார். அடுத்தடுத்து வியாபாரத்தில் ஈடுபட்டு நஷ்டமடைந்த காரணத்தால், நாராயணன் எந்த வேலைக்கும் செல்வதில்லை. சத்யபிரேம் வீட்டில் அவரது தாய் நடனம் கற்றுத் தர, தங்கையோ ஜும்பா வகுப்புகள் எடுத்து வருகிறார். அந்த வீட்டைப் பொறுத்தவரை பெண்களே வேலை செய்து சம்பாதிப்பவர்கள் எனும் நிலைமை.
நவராத்திரி பூஜை நெருங்க நெருங்க, சத்யபிரேம் மனதில் உற்சாகம் பொங்குகிறது. காரணம், அந்த ஊரின் மாபெரும் அழகியான கதாவைச் சந்திக்கும் ஆசை. கடந்த முறை இதே போன்றதொரு தருணத்தின்போது தான், கதாவை சத்யபிரேம் நேருக்குநேர் சந்தித்தார்; முதல் பார்வையிலேயே காதல் கொண்டார். ஆனால், அவரோ தனக்கு பாய்பிரெண்ட் இருப்பதாகச் சொல்லிவிட்டு சிட்டாகப் பறந்துவிட்டார். அதன்பிறகு, அவரைச் சந்திக்கும் வாய்ப்பே கிடைக்கவில்லை.
அவர் எதிர்பார்ப்பது போலவே, நவராத்திரி முதல் நாளன்று கலை நிகழ்ச்சிகளைக் காண கதாவின் குடும்பத்தினர் வருகின்றனர். ஆனால், கதா வரவில்லை. அப்போது, வீட்டில் அவர் மட்டும் தனியாக இருப்பதை அறிகிறார் சத்யபிரேம். ரகசியமாக அவரைச் சந்திக்கலாம் என்று முடிவெடுத்து அவரது வீட்டுக்குச் செல்கிறார்; சுவரேறிக் குதிக்கும் சத்யபிரேமுக்குப் பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது. அங்கே, கையை பிளேடால் அறுத்துக்கொண்டு தன்னுயிரை மாய்க்கத் தயாராகி நிற்கிறார் கதா.

மருத்துவமனையில் உடனடியாகச் சேர்த்து கதாவைக் காப்பாற்றுகிறார் சத்யபிரேம். கதாவின் பெற்றோருக்கோ, வீட்டில் சத்யபிரேம் அத்துமீறி நுழைந்ததைவிட அவரது காதலே பெரிதாகத் தெரிகிறது. உடனே, இருவருக்கும் திருமணம் செய்துவைக்கலாம் என்று முடிவெடுக்கின்றனர். சத்யபிரேமுக்குத் தனது கனவு நனவான மகிழ்ச்சி. பெரும் பணக்கார சம்பந்தம் என்பதால், அவரது தந்தை மட்டுமல்லாமல் தாயும் தங்கையும் கூடப் பேச முடியாமல் திகைத்து நிற்கின்றனர். ஆனால், தனக்கு இக்கல்யாணத்தில் துளியும் சம்மதமில்லை என்கிறார் கதா. அவரது விருப்பத்தையும் மீறித் திருமணம் நடந்து முடிகிறது.
ஆனால், சத்யபிரேமுக்கும் கதாவுக்கும் தாம்பத்திய உறவென்பது சுத்தமாக இல்லை. இது சத்யபிரேமின் பெற்றோருக்கும் தெரியும். ஆனால், அவர்களாலும் மருமகளிடம் காரணம் கேட்க முடியவில்லை. இந்த விஷயம் அந்த ஏரியா முழுவதும் பரவுகிறது. திருமணமான தம்பதிகளைச் சந்திக்கவரும் சத்யபிரேமின் பெரியம்மாவுக்கு இது தெரிய வர, கதாவை அழைத்து அவர் கேள்விகள் கேட்கிறார்.
அப்போது, தனது செய்கைகளுக்கு சத்யபிரேமின் மீது எந்தத் தவறுமில்லை என்று சொல்கிறார் கதா. கூடவே, திருமணத்திற்கு முன்பே தான் ஒருவரால் பாலியல் வல்லுறவுக்கு ஆளானதாகச் சொல்கிறார். அதனைக் கேட்டதும், அந்தக் குடும்பமே நிலைகுலைகிறது. அதன்பிறகு என்னவானது என்பதே இப்படத்தினைக் குறிப்பிடத்தக்க திரைப்படமாய் மாற்றுகிறது.
சத்யபிரேம் என்பது நாயகனின் பெயர். ஆனால், அதற்கு உண்மைக் காதல் என்றும் பொருள் கொள்ளலாம். அதேபோல, கதா எனும் பெயருக்குக் கதை என்றும் அர்த்தம் உண்டு. ஒரு வகையில் ’ராமனின் சீதை’ என்று சொல்வது போல ‘சத்யபிரேம் கி கதா’ என்றும், இன்னொருபுறம் உண்மைக் காதலின் கதை என்றும் இரண்டு பொருளைத் தருகிறது டைட்டில். பெயருக்கேற்றாற் போல, தான் விரும்பியவரே மனைவியான பிறகு ஒரு ஆடவன் அப்பெண்ணின் நலம் சார்ந்து என்னென்ன முடிவுகளை எடுக்கிறார் என்று சொன்ன வகையில் தனித்துவமாய் ஜொலிக்கிறது.
டேட்டிங்கில் ரேப்பிங்..!
அமிதாப்பச்சன் நடித்த ‘பிங்க்’ திரைப்படம், ‘ஒரு பெண் நோ என்று சொன்னால் நோ என்றுதான் அர்த்தம்’ என்பதனை உரக்கப் பேசியது. இதுவே தமிழில் அஜித்குமார் நடிப்பில் ‘நேர் கொண்ட பார்வை’யாகவும் மாறியது. அந்தப் படத்தில், ஒரு பெண்ணின் செக்ஸ் சார்ந்த உரிமையைப் பேசுமிடமாக நீதிமன்றம் இருந்ததென்றால் இப்படம் அதனைக் குடும்பத்தினர், உறவினர்கள், ஊரார் என்று சமூகம் சார்ந்து வெளிப்படையாக விவாதிப்பதில் தவறேதுமில்லை என்கிறது.
ஸ்பாய்லர் என்றபோதும், இத்தகவலைச் சொல்வதே சிறந்த விமர்சனமாக இருக்கும். இந்த படத்தில் நாயகி தன் காதலரோடு டேட்டிங் செல்கிறார்; சென்ற இடத்தில், அவருக்கு விருப்பமில்லாபோதும் அந்த ஆடவனால் வல்லுறவுக்கு ஆளாகிறார். அதனால் கர்ப்பம் ஏற்படும்போது கருவைக் கலைக்கவும் செய்கிறார்.
ஆனால், காதலரைத் திருமணம் செய்ய வேண்டுமென்ற விருப்பம் அவரிடம் துளியும் கூட இல்லை. அந்த ஒரு தருணம் அவரது வாழ்வையே நசுக்கிப் போடுகிறது; ஆண்கள் அருகில் வந்து நின்றாலே அப்பெண் கூனிக் குறுகிப் போகிறார்; தந்தையிடம் கூடப் பேசத் தயங்குகிறார்.

வாழ்வில் மனைவியை மட்டுமே கட்டியணைத்து முத்தமிட வேண்டும் என்றிருக்கும் ஒரு ஆண், தன் மனைவிக்கு இப்படியொரு கொடுமை நேர்ந்ததை உணர்ந்தபிறகு என்ன செய்வான் என்பதைச் சொல்கிறது இப்படம். இந்த இடத்தில்தான், ’சத்யபிரேம் கி கதா’ வேறொரு தளத்திற்குச் செல்கிறது. என்னதான் டேட்டிங்கில் விருப்பத்தோடு ஒரு பெண் ஈடுபட்டாலும், அங்கு ‘ரேப்’ நிகழும்போது அப்பெண் பாதிக்கப்பட்டவராகிறார் என்கிறது ‘சத்யபிரேம் கி கதா’. அது குறித்து விவாதிப்பதால், அந்த பெண்ணுக்கு எவ்வகையிலும் இழுக்கு நேராது என்கிறது.
ஆனால், இந்தக் கருத்தை இருண்மை நிறைந்த திரைக்கதை கொண்டோ அல்லது சீரியல் பாணி காட்சிகளுடனோ உணர்த்தாமல் ஒரு கலர்ஃபுல்லான இந்தி மசாலா படத்திற்கான உள்ளடக்கத்தின் வழியே தந்திருக்கிறார் இயக்குனர் சமீர் வித்வன்ஸ். இப்போது ஹாட்கேக் ஆகத் திகழும் கார்த்திக் ஆர்யன், கியாரா அத்வானி ஜோடியைத் திரையில் காட்டி அக்கருத்தை உணர்த்தியிருக்கிறார். அதுவே, இப்படம் பரவலாகப் பெண்கள், பதின்பருவச் சிறுமிகளைச் சென்றடையும் வாய்ப்பை அதிகப்படுத்தியிருக்கிறது.
சாதாரண தோற்றம் எதற்கு?
ஹீரோ அறிமுகப் பாடல், வறட்டுத்தனமான நகைச்சுவை, வழக்கமான நாயகன் நாயகி காதலுக்கான அம்சங்கள் என்று முதல் முக்கால் மணி நேரம் நம் பொறுமையைச் சோதிக்கிறது. ஆனால், கியாரா – ஆர்யன் திருமணத்திற்குப் பிறகு திரைக்கதை சூடு பிடிக்கத் தொடங்குகிறது.
இடைவேளைக்குப் பிறகான காட்சிகள் ஒவ்வொன்றும் ‘ஆஹா’ என்றிருக்கிறது. அதேநேரத்தில், முதல் முக்கால் மணி நேரம் தான் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் படம் பார்க்க வருபவர்களை இருக்கையோடு ஒட்டியிருக்கச் செய்யும் எனும் வாதத்தையும் ஏற்கத்தான் வேண்டும். அதனாலேயே, ’ஒரு வழக்கமான காதல், குடும்பச் சித்திரம் போன்ற தோற்றம் எதற்கு’ என்ற கேள்வியும் அர்த்தமற்றுப் போகிறது.
கடந்த பத்தாண்டுகளில் அறிமுகமான இளம் நாயகர்களில் ஷாரூக், அமீர்கான் போன்று பெண்களுக்குப் பிடித்த நாயகனாகத் திகழ்பவர் கார்த்திக் ஆர்யன். சமீபகாலமாக அவர் படங்கள் வசூலிலும் முன்னேறி வருகின்றன. அதனைத் தக்கவைக்கும் விதமாக மசாலா படங்களில் மட்டுமே நடிப்பது என்றிராமல், இது போன்றதொரு கதையில் நடிக்கத் தைரியமும் திறமையும் வேண்டும். அது அவரிடம் இருக்கிறது.
போலவே, வெறுமனே அழகுப்பதுமையாக மட்டுமல்லாமல் தனக்கு நடிக்கவும் தெரியும் என்று நிரூபிக்கிறார் கியாரா அத்வானி. நடனக் காட்சிகளில் நீளமான ஷாட்களை அவர் கையாண்டிருக்கும் விதம் ‘வாவ்’ சொல்ல வைக்கிறது. ‘பதாய் ஹோ’ படத்தில் நம்மைப் பிரமிக்க வைத்த கஜராஜ் ராவ், இதில் கார்த்திக்கின் தந்தையாக வருகிறார். தாயாக வரும் சுப்ரியா பதக், தனது மருமகளுக்கு நேர்ந்த கொடுமையை உணர்ந்து பதைபதைக்கும் இடத்தில் அசத்தியிருக்கிறார்.
அயனங்கா போஸின் ஒளிப்பதிவு, படம் முழுக்க வண்ணமயமாகத் தோற்றமளிக்க உதவியிருக்கிறது. சாரு ஸ்ரீ ராயின் படத்தொகுப்பு தெளிவாகக் கதை சொல்ல துணை நின்றிருக்கிறது. பாடல்கள் வழக்கம்போல துள்ளல் ஆட்டத்திற்கானவை; அதேநேரத்தில் காட்சிகளின் தன்மைக்கேற்ற பின்னணி இசை அமைத்து நம் மனதை உணர்வெழுச்சிக்கு ஆட்பட வைத்திருக்கிறார் ஹிதேஷ் சோனிக்.

பார்க்கலாமா?
ஆடல், பாடல், கொண்டாட்டம் என்று ‘குச் குச் ஹோதா ஹை’ காலத்து இந்திப் படங்களை நினைவூட்டினாலும், ‘சத்யபிரேம் கி கதா’ திரைக்கதை இன்றைய பெண்களின் பிரச்சனையொன்றைப் பேசுகிறது. ஒரு ஆணுடன் ஒரு பெண் சேர்ந்து சுற்றினாலே எல்லாவற்றுக்கும் சம்மதம் என்றுதானே அர்த்தம் எனும் வாதத்தைத் தூள் தூளாக்குகிறது.
தமிழில் ‘எதற்கும் துணிந்தவன்’ படம் கூட, குடும்ப அமைப்பின் மீதான பயத்தில் தங்களுக்கு நேர்ந்த பாலியல் பாதிப்புகளைப் பொதுவெளியில் பகிரப் பெண்கள் தயங்கக் கூடாது என்பதனைப் பதிவு செய்திருந்தது. கிட்டத்தட்ட அதைப் போன்ற இன்னொரு பிரச்சனையைப் பேசுகிறது இப்படம். விரைவில் தென்னிந்திய மொழிகளில் ‘டப்’ செய்யப்பட்டு, இப்படம் ஓடிடியில் வெளியாகலாம். அப்போது, இதன் மையக்கருவுக்காகவே இப்படம் கொண்டாடப்படும்.