பான் இந்தியா எனப்படும் பன்மொழிகளில் திரைப்படம் தயாரிக்கப்பட்டு வெளியாக தொடங்கிய பின் குறிப்பிட்ட மொழிப்படங்களில் மட்டுமே தெரிந்த, பிரபலமான குணசித்திர நடிகர்கள் தங்கள் சம்பளத்தை பன்மடங்கு அதிகரித்து கேட்க தொடங்கியுள்ளனர்.
இதனால் படத்தின் தயாரிப்பு செலவுகள் அதிகரித்து வருகிறது என தயாரிப்பாளர்கள் தரப்பில் கூறப்பட்டு வருகிறது. மாநாடு படத்தின் வெற்றிக்கு பின், படம் முழுக்க வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு மூன்று முதல் எட்டு கோடி வரை எஸ்.ஜே. சூர்யா கேட்டது பெரிய விஷயமாக பேசப்பட்டது. தற்போது ஒரு நாள் மட்டும் நடிக்க ஒரு கோடி ரூபாய் சம்பளம் கேட்டு அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளார் நடிகர் சத்யராஜ்.
பல்வேறு சிக்கல்களைத் தாண்டி கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டிருக்கிறது. தற்போது திருப்பதி அருகே படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இயக்குநர் ஷங்கர் திரைக்கதையில் இன்றைய அரசியல் சூழலுக்கு ஏற்ப, சில மாற்றங்களை செய்திருக்கிறாராம். அதன்படி ஒரு புதிய கதாபாத்திரம் படத்தில் இடம்பெறவிருக்கிறதாம்.
முதல் பாகத்தில் இடம்பெற்ற நெடுமுடி வேணு கதாபாத்திரத்திற்கு மேலான காவல்துறை அதிகாரி வேடம் உருவாக்கப்பட்டிருக்கிறதாம். அந்த வேடத்தில் சத்யராஜ் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்து அவரை அணுகியிருக்கிறார்கள்.
இதுவரை கமல்ஹாசன் -சத்யராஜ் இணைந்து நடித்த காக்கிச்சட்டை, விக்ரம் உள்ளிட்ட பல படங்களில் அவர்கள் எதிரும் புதிருமாகப் பேசிக்கொண்ட வசனங்கள் பிரபலம். குறிப்பாக காக்கி சட்டையில் சத்யராஜ் பேசிய தகடு தகடு வசனம் பிரபலமோ பிரபலம். இதனால் இந்தியன் 2 திரைப்படத்திலும் அதுபோன்ற வசனங்களை சத்யராஜ் பேசினால் சூப்பராக இருக்கும் என்று அவரை நடிக்க கேட்டிருக்கிறார்கள்.
திரைக்கதையைக் கேட்டுவிட்டு உடனே ஒப்புக்கொண்டாராம் சத்யராஜ். படத்தில் நடிக்க 15 நாட்கள் வரை தேவைப்படும் என கூறியிருக்கின்றனர். ‘எத்தனை நாட்கள் என்றாலும் நடிக்கின்றேன். தினசரி சம்பளமாக ஒரு கோடி ரூபாய் வேண்டும்’ என சத்யராஜ் கூறியதை கேட்டு வெலவெலத்துப் போயிருக்கிறது இந்தியன்-2 படக்குழு.
சத்யராஜ் தவிர்த்து அந்த வேடத்தில் வேறு யாரும் நடிக்க முடியாது என்பதால் எப்படியாவது சம்பளத்தை குறைத்து அவரை சம்மதிக்க வைக்க தயாரிப்பாளர்- இயக்குநர் தரப்பில் முயற்சிகள் நடந்து வருகிறது. கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடிப்பதை கௌரவமாகவும், தங்களின் அடுத்தகட்ட திரையுலக வளர்ச்சிக்கு பயன்படும் என்று திரைக் கலைஞர்கள் மத்தியில் பேசப்படுவது உண்டு.
சத்யராஜை பொறுத்தவரை அதையெல்லாம் கடந்து வந்துவிட்டார். அவர் படத்தில் இருந்தால் பலம் என்கிற சூழல். அதனால் சத்யராஜ் வந்தவரை லாபம் என கருதாமல் எனக்கு இவ்வளவு வேண்டும் என்று கறாராகக் கேட்கிறார் என்கின்றனர் சத்யராஜ் வட்டாரத்தில்.
பேச்சுவார்த்தை நடந்துகொண்டே இருக்கும் நிலையில், சத்யராஜ் என்ன முடிவெடுக்கப் போகிறார்? படத்தில் அவர் நடிப்பாரா இல்லையா? என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும் என்கிறார்கள் படக் குழு வட்டாரங்களில்.
–இராமானுஜம்
“திமுக அரசு ஆன்மிகத்துக்கு எதிரானது அல்ல!” – முதல்வர் ஸ்டாலின்
என்றுமே ரஜினிகாந்த் கமலஹாசன் என்றுதான் வரும் நீங்கள் அதனை மாற்ற முயற்சித்து மாட்டிக் கொள்ளாதீர்கள்