ஜல்லிக்கட்டு வாழ்வியல்: “காரி” திரைப்பட விமர்சனம்

சினிமா

பீட்டா என்று அழைக்கப்படும் விலங்குகள் நலவாரியம் ஜல்லிகட்டுக்கு எதிராக நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு காரணமாக ஜல்லிக்கட்டு சர்வதேச அளவில் பிரபலமானது.

அதன் பாரம்பரியம், முக்கியத்துவம் பற்றி தமிழரல்லாதவர்களும் கேட்கவும், அது சம்பந்தமான தகவல்களை தேடிப் படிக்கவும் தொடங்கினார்கள். அப்படிப்பட்ட ஜல்லிக்கட்டு பற்றிய படம் தான் இன்று (நவம்பர் 25) வெளியாகியுள்ள “காரி” திரைப்படம்

ஜல்லிக்கட்டு என்பது அது நடக்கும் ஒரு நாள் பொழுதுபோக்கு. காளைகளின் வலிமையை நிரூபிக்கும் அல்லது சோதித்து பார்க்கும் நிகழ்வு மட்டுமல்ல.

அது உழைக்கும் மக்களின் ஊனோடும் உயிரோடும் கலந்து, அவர்களின் அன்றாட வாழ்வோடு பின்னிப்பிணைந்தது என்பதை ரத்தமும் சதையுமாக பதிவு செய்திருக்கும் படம் காரி.

இந்தப் படத்தை கார்த்திக் நடிப்பில் சமீபத்தில் வெளியான சர்தார் படத்தை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லக்க்ஷ்மண் தயாரித்திருக்கிறார்

sasikumar kaari movie review

ஜல்லிக்கட்டு, எருது கட்டுகள் தென் தமிழகத்தில் உள்ள மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் தான் அதிகமாக நடைபெறுகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இரண்டு கிராமங்களுக்கு சொந்தமான பொது கோயிலை எந்தக் கிராமத்தார் நிர்வகிப்பது என்பதில் பிரச்சினை ஏற்படுகிறது. அதனை தீர்மானிக்க தங்கள் மண்சார்ந்த, மரபு சார்ந்த ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தி அதில் எந்த ஊர் வெல்கிறதோ? அந்த ஊரை சேர்ந்தவர்களிடம் கோவில் நிர்வாகத்தை ஒப்படைப்பது என்று முடிவாகிறது.

அதுமட்டுமின்றி, வறட்சியின் பிடியில் இருக்கும் அந்த கிராமத்தை ராமநாதபுரம் மாவட்டத்தின் குப்பை கிடங்காக மாற்ற முயலும் அரசாங்கம், அடங்காத காளைகளை அடிமாடாக்கி சுகம் காணும் மாட்டிறைச்சி நிறுவனத்தினரின் ஆணவ வெறி ஆகியனவும் அந்தக் கிராமத்தை மிரட்டுகிறது.

sasikumar kaari movie review

இவற்றை அந்தக் கிராம மக்கள் எப்படி எதிர்கொண்டு முறியடிக்கிறார்கள் என்பதை சினிமாத்தனம், ஹீரோயிசம் இல்லாமல் இயல்பாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் ஹேமந்த்

குதிரை பந்தயத்தில் பணிபுரியும் ஜாக்கியாக அறிமுகமாகிறார் சசிகுமார். பின்னால் காளைகளோடு உறவாடுவதற்கான முன்னோட்டமாக அது அமைந்திருக்கிறது.

சசிகுமாரின் அப்பாவாக வரும் ஆடுகளம் நரேனும் சசிகுமாரின் இணையாக வரும் பார்வதி அருணும் கதையை காவியமாக்குகிறார்கள். “உன்னை நம்பியிருந்த உயிருக்குத் துரோகம் பண்ணிட்டியேடா?” என்று ஆடுகளம் நரேன் பதறுவதும், “நான் வருவேன்னு கறுப்பன் நம்பிக்கிட்டிருப்பானே?” என்று பார்வதி அருண் கதறும் காட்சியும் படம் பார்ப்பவர்களை பதற வைப்பதுடன் விலங்குகள் மீது பரிவு கொள்ள வைக்கும்

தொழிலதிபராக நடித்திருக்கும் ஜேடி சக்ரவர்த்தி, அவர் மனைவியாக வரும் சம்யுக்தா, குதிரைகளின் உரிமையாளராக நடித்திருக்கும் ராம்குமார், அவருடன் வரும் அம்மு அபிராமி, நாயகியின் அப்பா பாலாஜி சக்திவேல், கிராமத்து தலைவர் நாகிநீடு உள்ளிட்ட நடிகர்கள் தங்களின் நடிப்பால் படத்தின் தரத்தை உயர்த்தப் பாடுபட்டிருக்கிறார்கள்

sasikumar kaari movie review

நகைச்சுவை வேண்டும் என்பதற்காக ரெடின்கிங்ஸ்லி படத்தில் வலிந்து சேர்க்கப்பட்டிருக்கிறார்

இமானின் சிறப்பான இசையில் சாஞ்சிக்கவா பாடல் சுகம். எங்கும் ஒளி பிறக்குமே பாடல் சிலிர்ப்பு ரகங்களாகும். கணேஷ் சந்திராவின் ஒளிப்பதிவில் கிண்டி குதிரைப்பந்தயமும், கிராமத்து ஜல்லிக்கட்டு கிராமத்து வாழ்வியலும் உள்ளது உள்ளபடி பதிவாகியிருக்கிறது. காரி காளையைப் பார்க்கும்போதே, அச்சமும், பெருமிதமும் கொள்ள வைக்கிறது.

காளைகளை பற்றி அறிந்தவர்களுக்கு திரைக்கதை, வசனம், எழுதி இயக்கியிருக்கும் யார் இந்த ஹேமந்த்? என எல்லோரையும் கேட்கவைத்திருக்கிறார். கிராம மக்களின் வாழ்வியலில், ஜல்லிகட்டு நிகழ்வில் பல நுட்பமான காட்சிகள் மற்றும் வசனங்கள் மூலம் தமிழ் மக்களின் பண்பாடு, பாரம்பரிய பெருமைகளைப் படத்தில் பதிவு செய்திருக்கிறார்.

சாமானிய கிராமத்து மனிதர்களும் அவர்களுடைய சொல்லாடல், உடல்மொழி, தோற்றங்கள் ஆகியனவற்றோடு சிறுதெய்வ வழிபாடு அதன் மீதான கிராமத்து மக்களின் அதீத நம்பிக்கைகள் ஆகியனவை திரைக்கதைக்கு பலம் சேர்க்கப் பயன்படுத்தியிருக்கிறார்.

காரி தமிழர்களின் பண்பாட்டுப் பதிவு

ராமானுஜம்

மின்கட்டணம் செலுத்த ஆதார் இணைப்பு: திரும்ப பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்!

சுங்கச்சாவடி கட்டணம் 40% வரை குறையும்: அமைச்சர் எ.வ.வேலு

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0