செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என்ற பாடலைக் கேட்கும்போது அனைவருக்கும் ஞாபகத்திற்கு வருவது நடிகர் சரத் பாபு தான். அந்த பாடலைப் பிடித்தவர்களுக்கு சரத் பாபுவை பிடிக்காமல் இருக்க வாய்ப்பே இல்லை.
அதே போல் நடிகர் ரஜினி உடன் இணைந்து நடித்த அண்ணாமலை திரைப்படத்தில் அசோக் என்ற கதாபாத்திரத்தில் கலக்கியிருப்பார். இன்றும் கூட இவரை அசோக் என்று அழைக்கும் ரசிகர்கள் ஏராளம்.
ஆந்திராவில் பிறந்த சரத்பாபுவின் இயற்பெயர் சத்யம் பாபு. தெலுங்கு படங்களில் நடித்து வந்த சரத்பாபுவுக்கு மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்த திரைப்படம் என்றால் அது கே.பாலசந்தர் இயக்கிய பட்டின பிரவேசம் தான்.
இப்படத்தின் போது தான் பாலசந்தர் சத்யம் பாபுவுக்கு சரத்பாபு என பெயரிட்டார். அந்த பெயர் தான் அவருக்கு சினிமாவில் ஒரு அடையாளத்தை பெற்று தந்தது.
ரசிகர்களின் விருப்பத்திற்கேற்ப நடித்து அவர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த சரத்பாபு இன்று தன்னுடைய 71 வது வயதில் ஹைதராபாத்தில் உள்ள ஏஐஜி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
இந்நிலையில், அவர் கலந்து கொண்டு பேசிய பேட்டி ஒன்றில் தன்னுடயை சினிமா அனுபவங்களையும் கே.பாலசந்தர், ரஜினி, கமல் உடனான அனுபவத்தையும் பகிர்ந்திருப்பார்.
அதில் பாலசந்தர் பற்றி கூறும் போது , ஒரு நிகழ்ச்சியில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன். அந்த நிகழ்ச்சியில் கே.பாலசந்தர் என்னை பார்த்து படத்தில் நடிப்பியா என்று கேட்டார். அவர் என்னிடம் கேட்ட முதல் கேள்வி அது தான். நான் உடனே ஓகே சார் என்று சொன்னேன்.
உடனே அவர் நாளை அலுவலகத்திற்கு வா என்று சொன்னார். அலுவலகத்திற்கு சென்ற உடனே என்னுடைய அடுத்த படத்தில் நீ நடிக்கிறாய் என்று சொன்னார்.
மேலும், ”கல்லூரி காலத்தில் நான் தான் எல்லோருக்கும் ஹீரோ. எந்த நிகழ்ச்சிகள் நடந்தாலும் அதில் நான் இருப்பேன். படிப்பில் எனக்கு ஆர்வம் இல்லாமல் போனதற்கு எனது கல்லூரி பேராசிரியர்கள் தான் காரணம்.
கல்லூரியில் நடைபெறும் நாடகங்கள் அனைத்திலும் என்னைத்தான் ஹீரோவாக போடுவார்கள். நடித்து முடித்த உடன் என்னை சென்னைக்கு போகச்சொல்வார்கள். நான் படிக்க வேண்டும். எனக்கு போலீஸ் ஆபிசர் ஆக வேண்டும் என்பது தான் ஆசை என்பேன்.
உடனே அவர்கள், நீ படத்தில் நடித்தால் அப்போது போலீஸ் கதாபாத்திரங்களில் நடித்து கொள்ளலாம் என்று சொல்வார்கள். என்னை வலுக்கட்டாயமாக கல்லூரி காலங்களில் மேடை ஏறி நடிக்க சொல்வார்கள். பின்னர் நான் அதை அனுபவித்து நடிக்க ஆரம்பித்தேன்”என்று தன்னுடைய கல்லூரி கால அனுபவங்களையும் சரத்பாபு பகிர்ந்திருப்பார்.
நடிகர் சரத்பாபு – ரஜினிகாந்த் இருவரும் இணைந்து நிறைய படங்களில் பணியாற்றி உள்ளனர். இவர்கள் சேர்ந்தாலே அந்த படம் ஹிட் என சொல்லும் அளவுக்கு சக்சஸ்புல் நடிகர்களாக இருவரும் வலம் வந்தனர். ரஜினியும் சரத் பாபுவும் முதன்முதலாக இணைந்த திரைப்படம் முள்ளும் மலரும். மகேந்திரன் இயக்கத்தில் கடந்த 1978 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன இப்படம் சரத்பாபுவுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
அப்படத்தில் இடம்பெறும் செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என்கிற பாடலை அனுபவித்து பாடியபடி இவர் ஜீப் ஓட்டி வரும் காட்சிகள் இன்றளவும் ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளது.
இந்த படத்தில் ரஜினியுடன் நடித்தது பற்றி சரத் பாபு கூறுகையில், ”பட்டின பிரவேசம் படத்தில் நடித்து கொண்டிருந்த போது முள்ளும் மலரும் திரைப்படத்திற்கு என்னை இயக்குநர் மகேந்திரன் தேர்ந்தெடுத்தார். ரஜினியும் நீங்களும் இணைந்து தான் இந்த படத்தில் நடிக்கிறீர்கள் என்று சொன்னார். இதில் அவர் ஒரு ஹீரோ நீங்கள் ஒரு ஹீரோ என்று சொன்னதும் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.
முள்ளும் மலரும் படத்தில் அவர் நடித்த ஒரு காட்சியை என்னால் எப்போதும் மறக்க முடியாது. அந்த படத்தில் நான் அவரை (காளி என்ற கதாபாத்திரம்) வேலையில் இருந்து நீக்க வேண்டிய காட்சி ஒன்று வரும்…அதில் ரஜினியின் கண்களில் இருந்து கண்ணீர் வரும் கட்சியை என்னால் மறக்க முடியாது. 100 சதவீதம் அவருடைய கதாபாத்திரத்தில் கவனம் செலுத்துவார்” என்று கூறியுள்ளார்.
இதையடுத்து ரஜினியுடன் நெற்றிக்கண், வேலைக்காரன் போன்ற படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்த சரத்பாபு, கடந்த 1992-ம் ஆண்டு வெளியான அண்ணாமலை படத்தில் ரஜினிக்கு நெருங்கிய நண்பனாக நடித்து, பின்னர் வில்லனாக மாறி மிரட்டி இருப்பார்.
சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய அண்ணாமலை படத்தில் ரஜினி – சரத்பாபு இடையே நடக்கும் வார்த்தை மோதலை செம்ம மாஸாக காட்சிப் படுத்தி இருப்பார்கள். அந்த காட்சியை இன்று பார்த்தால் கூட புல்லரிக்கும். அந்தளவுக்கு இருவரும் போட்டிபோட்டு நடித்திருப்பார்கள். அண்ணாமலை படம் வெற்றியடைந்ததற்கு ரஜினி – சரத்பாபு காம்போவின் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனதும் ஒரு காரணம் என்று கூறுபவர்களும் உண்டு.
அண்ணாமலை படத்தில் அசோக் என்ற கதாபாத்திரத்தில் நடித்தது பற்றி பேட்டி ஒன்றில் கூறிய சரத்பாபு,”இத்தனை வருடங்களுக்கு பிறகும் அசோக் என்று பெயரை ஞாபகம் வைத்திருக்கிறார்கள் என்றால் அந்த படத்தில் அமைந்த ஸ்கிரிப்ட் தான் காரணம். அந்த ஸ்கிரிப்ட் மிகவும் அழகானது. அதில் நடிகர்களுக்காக எந்த காட்சிகளும் மாற்றப்படவில்லை. ஸ்கிரிப்ட் அப்படியே காட்சிப்படுத்தப்பட்டது. அந்த படத்திற்கான தேர்வுகள் அனைத்தும் கே.பாலசந்தர் தான். படப்பிடிப்பின் போது ஸ்கிரிப் பற்றி மட்டும் தான் அதிகம் பேசுவோம்” என்று கூறியுள்ளார்.
ரஜினிகாந்த் மட்டுமின்றி கமலுடனும் சிப்பிக்குள் முத்து, சலங்கை ஒலி, ஆளவந்தான் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். இரு பெரும் ஹீரோக்களுடனும் நடித்து நல்ல நட்பை அவர்களுடன் வளர்த்திருந்தாலும் தன்னுடைய வாய்ப்புக்காக அவர்களை தொந்தரவு செய்யாதவர், ஈகோ பார்க்காதவர் என நல்ல பெயரையும் சரத்பாபு பெற்றிருக்கிறார். அதுமட்டுமின்றி ரொம்பவே சிம்பிளானவர் என்றும் பலரால் புகழப்படுபவர்.
ஒரே நேரத்தில் ரஜினி கமல் என்ற இரு பெரும் நட்சத்திரங்களுடன் நடித்தது பற்றி அவர் அளித்த பேட்டியில், “ரஜினி மற்றும் கமலுடன் நடித்த போது அவர்களுக்கு இடையேயான வித்தியாசம் என்ன என்பதை பற்றி பகிர்ந்து கொண்டுள்ளார். “ரஜினி நெகட்டிவ் கதாபாத்திரத்தில் இருந்து பாசிட்டிவ் கதாபாத்திரத்தில் நடிப்பார்.
கமல் என்னா பேசினாலும் சினிமாவை பற்றி தான் பேசுவார். ரஜினி படப்பிடிப்பின் போது படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்னதாகவே அங்கு வந்து விடுவார். அதில் அவர் அர்ப்பணிப்பு உணர்வோடு இருப்பார்.
ரஜினியிடம் உங்களுக்கு பிடித்த படம் எது என்று கேட்டால் முள்ளும் மலரும் என்று சொல்வார்..கமலிடம் கேட்டால் சலங்கை ஒலி என்பார்.
ரஜினி சினிமாவை பற்றி பேசமாட்டார் ஆனால் அவருடைய கதாபாத்திரத்தை சிறப்பாக செய்வார். அதேநேரம் கமலுடைய அனைத்து சிந்தனைகளும் சினிமாவில் தான் இருக்கும். அவர் பாடல்கள் எழுதுவார், பாடுவார், இயக்குவார் இப்படி அனைத்திலும் அவரின் கவனம் இருக்கும்” என்று கூறியிருப்பார்.
அழகில் எப்படியோ அதே போன்று தான் சரத்பாபுவின் குரலுக்கும் மயங்காதவர்களே இல்லை என்றே சொல்லலாம். சரத்பாபுவின் குரலில் ஏதோ ஒரு ஈர்ப்பு இருக்கிறது…என்று கே.பாலசந்தர் கூறியிருப்பார்.
தன்னை அறிமுகப் படுத்திய கே.பாலசந்தர் பற்றியும் தன்னுடைய குரல் பற்றியும் சரத்பாபு ஒரு காணொளியில் தன்னுடை அழகான நினைவுகளை பகிர்ந்திருப்பார் அதில், “கே.பி.சார் எனக்கு மிகச்சிறந்த பள்ளி. அவர் என்னிடம் சொல்வார்…உனது குரல் மிகவும் தனித்துவமானது. அதனால் நீ உன்னுடைய சொந்த குரலில் தான் பேச வேண்டும் .
ஒரு படப்பிடிப்பின் போது சீனியர் நடிகர் ஒருவர் இந்த குரலைத்தான் பயன்படுத்துவீர்களா இல்லை மாற்றுவீர்களா என்ற கேள்வியை எழுப்ப…இந்த குரலைத்தான் பயன்படுத்துவேன் என்று சொன்னார். நான் பிரபலமான பிறகு பலர் என்னிடம் நாங்கள் உங்களுடையை படங்களை பார்ப்பதற்கு உங்களுடைய குரல் தான் முதன்மை காரணம் என்று சொன்னார்கள்.
கோலங்கள் என்ற படத்தில் நான் நடித்து கொண்டிருந்த போது எனக்காக காத்திருந்த ஒருவர்…உங்களிடம் பேசலாமா என்று கேட்டார் நான் அதற்கு சரி பேசலாம் என்றேன்..உடனே அவர் நாங்கள் தமிழில் பேசுவதை விட நீங்கள் பேசும் தமிழை கேட்கும் போது எவ்வளவு இனிமையாக இருக்கிறது தெரியுமா என்று சொன்னார்” அது எனக்கு சந்தோசத்தை கொடுத்தது என்று கூறியிருப்பார் சரத்பாபு.
இந்நிலையில் தான் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். பெங்களூருவில் சிகிச்சை எடுத்துக்கொண்ட அவர் உயர் சிகிச்சைக்காக ஹைதராபாத்துக்கு சென்றார். அங்கு உள்ள ஏஐஜி மருத்துவமனையில் கடந்த சில வாரங்களாக தீவிர சிகிச்சை எடுத்து வந்தார். விரைவில் உடல்நலம் தேறிவிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஆந்திராவில் பிறந்திருந்தாலும் தமிழ் மீது அன்பு கொண்டவர். தன்னுடைய யோசனைகள் அனைத்தும் தமிழில் தான் இருக்கும் என்று சொன்னவர். தன் வாழ்நாளில் மது, புகை என்று எந்த கெட்ட பழக்கத்திற்கும் ஆளாகாத அற்புத குரலுக்கு சொந்தக் காரரான சரத்பாபுவின் இழப்பு ரசிகர்கள் மட்டுமின்றி திரைத்துறையினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
Super write up . Lots of informations . Rip sir 😢😢😢. 🙏🏿🙏🏿🙏🏿♥️♥️♥️