தமிழ் சினிமாவில் காமெடியனாக பார்த்து ரசிக்கப்பட்டு வந்த நடிகர் சந்தானம் நடித்திருக்கும் டார்க் காமெடி படம் தான் குலுகுலு. நெற்றியைத் தாண்டி வளர்ந்த முடி, நீண்ட தாடி, அதற்கேற்ற ஆடை, உருவகேலியற்ற, ஆர்பாட்டமில்லாத ஒரு நடிப்பைக் கொடுத்த விதத்தில் நடிகர் சந்தானத்துக்கு அவரது திரையுலக வாழ்க்கையில் இது முக்கியமான படம்.
தன் வழக்கத்திலிருந்து மொத்தமாக உருமாறி அழுத்தமான கதாபாத்திரத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் சந்தானம். படத்தில் அவர் சிரிக்கவில்லை, யாரையும் கலாய்க்கவில்லை ஆனால், பார்வையாளர்களை ரசிக்கவும், சிரிக்கவும் வைக்கும் விதத்தில் நடிப்பில் ஸ்கோர் செய்கிறார். ஜில் ஜங் ஜக், சூது கவ்வும், டாக்டர், பாணியிலான தமிழின் அரிய டார்க் காமெடி வகையறா படமாக ‘குலுகுலு’வை இயக்கியிருக்கிறார் ‘மேயாத மான்’ புகழ் ரத்னகுமார்.
நகரமயமாதலின் பெயரால் அழிக்கப்பட்ட ஒரு பழங்குடி இனத்தில் கடைசி மனிதன். யாரென்று பாராமல் உதவும் கூகுள் தேடுபொறிபோல, உதவி என்று கேட்பவர்களுக்கு, உதவுகிறார். கூகுள் என அழைக்கப்படும் சந்தானம். இதனால் பல சிக்கல்களை எதிர்கொள்கிறார். ஐந்துபேர் கொண்ட நண்பர்கள் குழுவில் ஒருவன் கடத்தப்பட, அவனை மீட்க உதவுமாறு கூகுளை நாடுகின்றனர்.
உயிரைப் பணயம் வைக்கும் இந்த ஆபரேஷனில் கூகுள் பெறுவதும், இழப்பதும் என்ன என்பது கதை. அமேசான் காடுகளில் பிறந்தவன், தன் மொழி பேசும் இன்னொரு மனிதனை வாழ்நாளில் சந்தித்துவிட மாட்டோமா என ஏங்குபவன், சாலையில் அடிபட்டு இறந்து கிடக்கும் நாயின் சடலத்தை எடுத்து அடக்கம் செய்துவிட்டு, அதன் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கும் நல்மனம் படைத்தவன் என அழுத்தமான உலக நாடோடி இளைஞன் கதாபாத்திரத்தை முதல்முறையாக ஏற்று நடித்துள்ளார் சந்தானம்.
கூகுள் மட்டுமின்றி, படத்தில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் ஒரு விசித்திரத் தன்மை இருக்கிறது. அதனால் நிகழும் பல காட்சிகள் அர்த்தச் செறிவுடன் ஈர்த்துச் சிரிப்பால் வயிற்றை புண்ணாக்குகின்றன . அழிந்துவரும் மொழிகள், தாய்மொழியின் முக்கியத்துவம், பெண்களின் வாழ்க்கைத் தெரிவு பற்றிய உரையாடலில் ஒரு இனத்தை அழிக்கவேண்டும் என்றால் முதலில் மொழியை அழிக்கவேண்டும் என்று சந்தானத்தின் மூலம் இயக்குநர் பேசும் அரசியல் சமகால மொழிப் பிரச்சினையை, அதன் முக்கியத்துவத்தை பார்வையாளனுக்கு எளிதில் புரியவைக்கிறது
தந்தையின் அன்பை பரிசோதிக்கக் கடத்தல் நாடகமாடும் விண்வெளி விஞ்ஞானியின் மகன், முதியவர்களைப் பார்த்தாலே அருவருப்பு, அச்சம் கொள்ளும் உளச்சிக்கல் கொண்ட அவனது காதலி, நன்கு தமிழ் பேசத் தெரிந்த பிரெஞ்சுப் பெண், பப்ஜி விளையாட்டில் ஆர்வம் காட்டும் வில்லனின் தம்பி, எல்லாத்தையும் மூடிட்டு இருந்தாதான் எனக்கு பத்தினி பட்டம் கிடைக்கும்னா எனக்கு அந்தப் பட்டமே வேண்டாம், பசியும் வலியும் புரிஞ்சிக்க எதுக்குடா மொழி ஆகிய வசனங்கள்…
மனிதன் ஆகச்சிறந்த சுயநலவாதி என்பதையும், வயதாகிவிட்ட ஒரே காரணத்துக்காக ஒரு பெண் தன் விருப்பங்களை மறைத்து வாழ வேண்டுமென்ற அவசியமில்லை என்பதையும் இன்றைய சமூகம் எதிர்கொள்ளும் அசாதாரண வாழ்க்கை சூழலை படத்தில் இடம்பெற்றுள்ள துணை கதாபாத்திரங்கள் மூலம் வெளிப்படுத்தியிருப்பதும் பார்வையாளனை சிந்திக்க தூண்டும் ரகம்.
அதுல்யா சந்திரா, நமீதா கிருஷ்ணமூர்த்தி இருவரும் படத்திற்குத் தேவையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். ஜார்ஜ் மர்யான் மற்றும் அவருடன் வரும் இருவரின் நடிப்பு திரையரங்கையே சிரிப்பில் குலுங்க வைக்கிறது. தமிழ் சினிமாவின் அரிதான முகம் ‘டார்க் காமெடி’. கொஞ்சம் பிசகினாலும் அதற்கான பாதையை விட்டு விலகிவிடும்.அப்படி விலகிவிடாமல் நேர்கோட்டில் திரைக்கதையை கையாண்டிருக்கிறார் இயக்குநர் ரத்னகுமார்.
பெரிய ஆழமான, அழுத்தமான கதையெல்லாம் இல்லாமல், போகிற போக்கில் நடக்கும் சம்பவங்களைக் கோர்த்து அதன் வழி சில விஷயங்களை காமெடியாக கூறுவதில் அரசியல் பகடி செய்திருப்பது படத்தைக் கவனிக்க வைக்கிறது. மொத்தத்தில் எந்தவித எதிர்பார்ப்புமில்லாமல் ஜாலியாக திரையரங்குக்குச் சென்று சிரித்து மகிழவும், குறிப்பாக ‘டார்க் காமெடி’ ரசிகர்களுக்கு ஏற்ற படமாகவும் வெளிவந்துள்ளது ‘குலுகுலு
மக்கள் வரவேற்பு, வசூல் எப்படி?
சர்க்கிள் பாக்ஸ் தயாரிப்பில் ரெட் ஜெயண்ட் மூவீஸ் தமிழகத்தில் வெளியாகி இருக்கும் குலுகுலு திரைப்படம் தொலைக்காட்சி, வெளிநாட்டு உரிமை, டிஜிட்டல் உரிமை விற்பனை மூலம் படத்தின் பட்ஜெட்டை கடந்து லாபம் பார்த்துள்ளது. தமிழ்நாட்டில் திரையரங்குகள் மூலம் வசூலாகும் தொகை கூடுதல் வருவாயாகும். நகர்ப்புறங்களில் மட்டுமே குலுகுலு படத்திற்கான வரவேற்பு உள்ளது. புறநகர், கிராமம் சார்ந்த பகுதிகளில் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. கடந்த மூன்று நாட்களில் 4.50 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது குலுகுலு.
இராமானுஜம்