சிரிக்க வைக்கிறதா சந்தானம் படம்?
‘டிடி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படம் பார்த்து ரசித்து குதூகலிப்பதென்பது தற்போது வரை தியேட்டர்களில் தொடர்ந்து வருகிறது. அதே சூட்டோடு, ஒரு சந்தானம் படம் புதிதாக வெளியானால் எப்படியிருக்கும்?.
பிரசாந்த் ராஜ் இயக்கத்தில், அர்ஜுன் ஜன்யா இசையமைப்பில், சந்தானத்தோடு தான்யா ஹோப், தம்பி ராமையா, கோவை சரளா, பிரம்மானந்தம், செந்தில், மன்சூர் அலிகான் உட்படப் பலர் நடித்துள்ள ‘கிக்’ படம் அதற்கேற்றவாறு மாபெரும் எதிர்பார்ப்பைப் பெற்றிருக்கிறது.
முந்தையது போலவே, இதிலும் இதர பாத்திரங்களை உருவகேலிக்கு உள்ளாக்காமல், இரட்டை அர்த்த வசனங்கள் இடம்பெறாமல், காட்சியமைப்பில் ஆபாசத்திற்கு இடம் தராமல், வழக்கமான பாணியில் பாத்திரங்களை வார்க்காமல் வித்தியாசமான அனுபவத்தைத் தரும் என்ற யோசனைகள் நம் மனதில் பெருகியிருக்கும். அதற்கு ஏற்ப, வித்தியாசமான நகைச்சுவை படைப்பாக அமைந்திருக்கிறதா இந்த ‘கிக்’?
பெயருக்கான காரணம்!
இரு வேறு விளம்பர நிறுவனங்களில் நாயகன் சந்தோஷும் (சந்தானம்) நாயகி ஷிவானியும் (தான்யா ஹோப்) வேலை செய்கின்றனர். ஒருமுறை நிறுவனத்திற்குக் கிடைக்க வேண்டிய கார் விளம்பரப்பட வாய்ப்பை முறைகேடான சில முயற்சிகளின் வழியாக அபகரிக்கிறார் சந்தோஷ்.
அது போன்று, அவர் பலமுறை பலரது வாய்ப்புகளைப் பிடுங்கியிருக்கிறார். ஆனால், இம்முறை அந்த வாய்ப்பினைப் பெறுவதற்காக சந்தோஷ் என்னவெல்லாம் செய்தார் என்பதைக் கண்டறிகிறார் ஷிவானி. அது தொடர்பாக, விளம்பரக் கட்டுப்பாட்டு கவுன்சிலில் புகார் கொடுக்கிறார்.
அந்த புகார் தொடர்பான விசாரணையில், சந்தோஷ் நடத்திய முறைகேட்டுக்குக் காரணமான பெண் மாடல் ஒருவரும் பங்கேற்கிறார். அதனை அறிந்ததும், அந்த மாடலை வைத்து ‘பொய்யாக’ சில விளம்பரப் படங்களைத் தயாரிக்கிறார் சந்தோஷ். எதிர்பாராதவிதமாக, அந்த விளம்பரங்கள் ஊடகங்களில் வெளியாகிறது.
அதன் தொடர்ச்சியாக, அந்த தயாரிப்புகள் சந்தையில் கிடைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளில் இறங்குகிறார் சந்தோஷ். அதேநேரத்தில், அந்த வழக்கை ட்ரிப்யூனலுக்கு கொண்டு செல்கிறார் ஷிவானி.
வாலி (பிரம்மானந்தம்) என்ற விஞ்ஞானியைத் தேடி பாங்காக் செல்கிறார். அவரிடமும் ஒரு பொய்யைச் சொல்லி, அந்த மூலப்பொருளுக்கான பார்முலாவை வாங்கப் பார்க்கிறார். ஆனால், அவரோ தானே அந்த தயாரிப்புடன் இந்தியா வருவதாக உறுதியளிக்கிறார்.
அதற்குள், சந்தோஷை பழி வாங்குவதற்காக பாங்காங் செல்கிறார் ஷிவானி. வாலியின் மகன் என்று எண்ணி, சந்தோஷ் உடன் நெருங்கிப் பழகுகிறார். அவர் மீது காதல் கொள்கிறார். தனக்கு நல்ல துணை கிடைத்த நம்பிக்கையில் இந்தியா திரும்புகிறார்.
ஒருகட்டத்தில், ஷிவானிக்கு சந்தோஷ் குறித்த உண்மை தெரிய வருகிறது. அதன்பின், அவர் தனது காதலைப் பின்தொடர்ந்தாரா அல்லது தனது வழக்கின் பின்னால் சென்றாரா என்பதைச் சில திருப்பங்களுடன் சொல்கிறது ‘கிக்’.
இந்த படத்தில், அந்த விஞ்ஞானியின் கண்டுபிடிப்பு மனிதர்களுக்கு ‘கிக்’ ஏற்றும் சமாச்சாரமாக உள்ளது என்பதே உச்சகட்ட திருப்பம். அதுதான், இப்படத்தின் டைட்டிலுக்கும் காரணமாக உள்ளது.
மேற்சொன்னவற்றில் இருந்தே, இந்த கதை எந்த அளவுக்குச் சிரிக்க வைக்கும் என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும். ஆனால், நாயகனின் செயல்பாடு நாயகிக்கு எப்படித் தெரிகிறது என்பது குறித்தோ, அவர்கள் இருவரது செயல்பாடுகள் மற்ற பாத்திரங்களுக்கு தெரிவது எப்படி என்றோ, திரைக்கதையில் விளக்க இயக்குனர் முயற்சிக்காததுதான் இந்த படத்தை ‘பப்படம்’ ஆக்கியிருக்கிறது.
சந்தானத்தை சாய்ச்சுப்புட்டாங்க!
’ஒரு கல் ஒரு கண்ணாடி’ காலத்திலேயே, இரட்டை அர்த்த வசனங்களைக் குறைத்துவிட்டார் சந்தானம். ஆனாலும், இதில் ‘சிலம்பாட்டம்’ ரேஞ்சில் ‘கவுண்டர்கள்’ தூள் பறக்கிறது. அதிலும், சந்தானம் – தம்பி ராமையா சம்பந்தப்பட்ட காட்சிகளில் காதில் பொறி பறக்கிறது.
அனைத்தையும் பொறுமையாகக் கண்டபிறகு, ‘டிடி ரிட்டர்ன்ஸ்ல கம்பீரமாக இருந்த சந்தானத்தை இப்படிச் சாய்ச்சுப்புட்டாங்களே’ என்று புலம்ப வேண்டியிருக்கிறது.
தான்யா ஹோப் இதில் நாயகியாக நடித்திருக்கிறார். அவர் அணிந்திருக்கும் ஆடைகள் பளிச்சென்று இருக்கின்றன. அதனால், பல நேரங்களில் ஜவுளிக்கடை பொம்மை என்றே அவரை நினைத்துவிடுகிறோம். அந்த தவறைத் தான்யா மன்னிக்க வேண்டும்.
கோவை சரளா, செந்தில், தம்பி ராமையா, மதன்பாப், மறைந்த மனோபாலா, மன்சூர் அலிகான் என்று மூத்த நடிகர்கள் சிலர் இதில் தலை காட்டியுள்ளனர். ஆனால், அடுத்த படத்தில் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காவண்ணம் இதில் அவர்களது பாத்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த படத்தில் தம்பி ராமையாவை மைக்கேல் ஜாக்சனின் தீவிர ரசிகராக காட்டியிருக்கிறார் இயக்குனர் பிரசாந்த் ராஜ். அதற்கான காரண காரியங்களையும் திரைக்கதையில் விளக்கியிருக்கலாம். இப்படிப் பல்வேறு விஷயங்கள் இப்படத்தில் தேமேவென்று இடம்பெற்று, நம்மை தலையைப் பிய்த்துக்கொள்ள வைத்திருக்கின்றன.
சுதாகர் ராஜின் ஒளிப்பதிவு, மோகன் கெரேவின் கலை இயக்கம், நாகூர் ராமச்சந்திரனின் படத்தொகுப்பு அனைத்தும் இணைந்து, ரொம்பவே ‘கமர்ஷியலான’ ஒரு திரைப்படத்தைத் தர முனைந்திருக்கின்றன. அது போன்ற தொழில்நுட்பப் பணிகளில் தனது இசையமைப்பின் பங்கு அதிகம் இருக்க வேண்டும் என்று முயற்சித்திருக்கிறார் இசையமைப்பாளர் அர்ஜுன் ஜன்யா.
பின்னணி இசையில் பெரிய உத்வேகத்தை ஊட்டாவிட்டாலும், பாடல்கள் அனைத்தும் துள்ளல் ரகமாக உள்ளன. என்ன, பொருத்தமான பாடல் வரிகளைத்தான் அவற்றோடு இணைக்கத் தவறியிருக்கிறார்.
இப்படிப் பலரது உழைப்பை ஒருங்கிணைத்து ‘கிக்’ தந்திருக்கும் இயக்குனர் பிரசாந்த் ராஜ், இதில் ஒரு காட்சியில் கௌரவமாகத் தலைகாட்டியிருக்கிறார். அதனைத் திட்டமிட்டுச் செயல்படுத்தியவர், படத்தின் ஒவ்வொரு காட்சியும் இன்றைய ட்ரெண்டுக்கு இருக்கிறதா என்பதையும் கொஞ்சம் யோசித்திருக்கலாம்.
ரொம்ப பழைய ‘படம்’!
இரட்டை அர்த்த வசனம், ஆபாசமான நடனம், இவற்றுக்கு நடுவே இருபதாண்டுகளுக்கு முந்தைய திரைப்பட இலக்கணத்தோடு வார்க்கப்பட்ட ஒரு திரைக்கதையும் ‘கிக்’கில் உண்டு. அதாவது, சந்தானம் நகைச்சுவை நடிகர் ஆவதற்கு முன்னதாக நேரடியாக ஒரு படத்தில் நாயகன் ஆனால் எப்படியிருக்கும் என்று யோசித்திருக்கிறார் இயக்குனர். அதனைத் திரையில் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்.
ஆனால், நமக்குத்தான் தொடக்கம் முதல் முடிவு வரை சிரிப்பு வரவே மாட்டேன் என்கிறது. அரிதாக, சில இடங்களில் நம் கவனத்தை ஈர்க்கும் வகையிலான வசனங்கள் இருக்கின்றன. அதற்காக, பிரசாந்த் ராஜைக் கொஞ்சமாகப் பாராட்டலாம்.
‘சம்திங் சம்திங்’, ‘சிலம்பாட்டம்’ காலத்தில் வெளியான படங்களில் சந்தானத்தின் நகைச்சுவை நடிப்பைப் பார்த்துச் சிரித்திருப்போம். அந்தக் காட்சிகள் இப்போதும் சிரிப்பை வரவழைக்கின்றன என்றால், ‘கிக்’கிலும் அது போன்ற ‘மொமண்ட்’கள் உண்டு. ஆனால், இடைப்பட்ட காலத்தில் சந்தானமும் வளர்ந்துவிட்டார்; நாமும் பெரிதாகிவிட்டோம் என்ற உண்மையை மறந்துவிட்டுத்தான் அக்காட்சிகளைப் பார்க்க வேண்டும்.
அது முடியும் என்றால், தாராளமாக ‘கிக்’ படத்தைப் பார்க்கலாம். இதிலிருந்தே, இப்படம் எத்தனை வித்தியாசமான நகைச்சுவைப் படம் என்பது புரிந்திருக்கும்.
உதய் பாடகலிங்கம்
அரசு வேலைகளுக்கு தயாராவோர் கவனத்திற்கு… டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு!
ஆதித்யா எல் – 1 விண்ணில் பாய்ந்தது!