’கிக்’ படத்திற்காக நடிகர் சந்தானம் முதன்முதலாக பாடிய பாடல் இன்று (அக்டோபர் 10) வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.
தமிழ் திரையுலகில் காமெடி நடிகராக அறிமுகமாகி ஹீரோவானவர்களில் நடிகர் சந்தானமும் ஒருவர். அவர், நடிப்பில் கடந்த வருடம் (2021) ‘பாரிஸ் ஜெயராஜ்’, ’டிக்கிலோனா’, ’சபாபதி’ ஆகிய படங்கள் வெளியாகின. சமீபத்தில் ‘குலு குலு’ திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
அதனைத் தொடர்ந்து சந்தானம் அடுத்து நாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கு ‘கிக்’ என பெயரிடப்பட்டுள்ளது. இது, அவருடைய 15வது படம்.
இப்படத்தை, ஃபார்டியூன் பிலிம்ஸ் சார்பில் நவீன்ராஜ் தயாரிக்கிறார்.
கன்னடத்தில், ‘விசில்’, ‘ஆரஞ்ச்’ போன்ற படங்களை இயக்கிய பிரபல கன்னடப் பட இயக்குநர் பிரசாந்த் ராஜ் இப்படத்தை இயக்குகிறார்.
இதன்மூலம் அவர் தமிழில் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்துக்கு அர்ஜுன் ஜன்யா இசையமைக்கிறார். ’தாராள பிரபு’ படத்தில் கதாநாயகியாக நடித்த தான்யா ஹோப் இப்படத்தில் சந்தானத்தின் ஜோடியாக நடிக்கிறார்.
மேலும், பாக்யராஜ், செந்தில், கோவை சரளா, மன்சூர் அலிகான், மனோபாலா, மொட்டை ராஜேந்திரன், வையாபுரி ஆகியோர் இப்படத்தில் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் பெங்களூருவில் நடைபெற்றது. மேலும் சென்னை, பாங்காங், லண்டன் எனப் பல இடங்களில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.
இருவேறு விளம்பர நிறுவனத்தில் வேலை செய்யும் நாயகன், நாயகி இருவரும் தொழில்முறை போட்டி காரணமாக எலியும், பூனையுமாக மோதிக்கொள்வதை கதையாக கொண்ட இப்படம், முழு நீள நகைச்சுவை படமாக உருவாக உள்ளது என்று படக்குழு குறிப்பிட்டுள்ளது.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இதைத் தொடர்ந்து, ‘கிக்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘சாட்டர்டே இஸ் கம்மிங்’ வரும் அக்டோபர் 10ஆம் தேதி மாலை 6.03 மணிக்கு வெளியாகும் எனப் படக்குழு கடந்த அக்டோபர் 7ம் தேதி அறிவித்திருந்தது.
அதன்படி, சந்தானம் பாடிய முதல் பாடல் இன்று (அக்டோபர் 10) வெளியானது. இதன்மூலம், ’கிக்’ படத்தில் சந்தானம் முதன்முதலாக பாடகராக அறிமுகமாகியுள்ளார்.
‘சாட்டர்டே இஸ் கம்மிங்’ என்ற பாடலை பாடலாசிரியர் விவேகா எழுத சந்தானம் பாடியுள்ளார். இதன்மூலம், சந்தானம் அடுத்த அவதாரம் எடுத்துள்ளார். இந்தப் பாடல் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஜெ.பிரகாஷ்
சிரஞ்சீவியை காப்பாற்றிய காட்ஃபாதர்
போலி ட்விட்டர் கணக்கு: கவிஞர் தாமரைக்கு வந்த சோதனை!