80ஸ் பில்டப்: விமர்சனம்
அர்ச்சிக்க வைக்கும் ‘கிளைமேக்ஸ்’!
எப்போதுமே திரையுலகில் கடந்த காலத்தை நினைவுபடுத்தும் காட்சிகள், கதைகள் பெரிதாகக் கவனிப்பைப் பெறும். அதில் நேர்த்தி மிகுந்திருந்தால் கொண்டாடப்படும். ‘சுப்பிரமணியபுரம்’, ‘மதராசப்பட்டினம்’ உட்படப் பல உதாரணங்கள் அதற்கு உண்டு. அந்த வரிசையில், எண்பதுகளில் நடப்பது போலக் கதைகள், பாடல்கள், சண்டைக்காட்சிகளை வடிவமைப்பது தற்போது பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது. அதில் நாமும் இணைந்து கொள்வோம் என்ற எண்ணத்தோடு ‘80ஸ் பில்டப்’ தந்திருக்கிறார் இயக்குனர் கல்யாண்.
கதை சொல்லப் போறோம் படத்தில் அறிமுகமான இவர் குலேபகாவலி, ஜாக்பாட், கோஸ்டி உட்பட 6 படங்களை இயக்கியுள்ளார். நகைச்சுவை உணர்வு மேலோங்கியிருப்பது இவரது படங்களின் சிறப்பு.
அதனாலேயே சந்தானத்தை நாயகனாகக் கொண்டு மன்சூர் அலிகான், சுந்தரராஜன், கே.எஸ்.ரவிக்குமார், முனீஸ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், மொட்டை ராஜேந்திரன், சேச்சு, மறைந்த மயில்சாமி, மனோபாலா என்று பெரும் பட்டாளத்தையே கொண்டு இப்படத்தை உருவாக்கியது நம் கவனத்தை ஈர்த்தது.
அந்த எதிர்பார்ப்பிற்கேற்ப, சிறப்பான நகைச்சுவையை இப்படம் அளிக்கிறதா?
துக்க வீட்டில் காதல்!
ஒரு ஊரில் ஜமீன்தார் குடும்பத்து வாரிசுகள் வாழ்ந்து வருகின்றனர். தாத்தா, பாட்டி, மகன், பேரன், பேத்தி ஆகியோர் அந்தக் குடும்பத்தில் உள்ளனர். ஜமீன் பெருமை பேசும் அந்த தாத்தா (சுந்தர்ராஜன்) ஒரு ரஜினி ரசிகர். அவரது மகனோ (ஆடுகளம் நரேன்) எந்நேரமும் குடி, பெண் சகவாசம் என்று இருப்பவர். பேரனும் (சந்தானம்) பேத்தியும் (சங்கீதா) எந்நேரமும் எலியும் பூனையுமாகச் சண்டையிட்டுக் கொண்டே இருப்பவர்கள். இருபதைத் தாண்டிய பிறகும் அந்த சண்டை நின்றபாடில்லை. இவர்களைச் சமாதானப்படுத்துவதுதான் அந்த பாட்டியின் (கலைராணி) பணி.
ஒருநாள் அந்த பேரன் கண்ணைப் பறிக்கும் உடையுடன், தாத்தா பாட்டியிடம் பணத்தை வாங்கிக் கொண்டு நண்பர்களுடன் தியேட்டருக்கு செல்கிறார். அன்றைய தினம் ‘சகலகலா வல்லவன்’ படம் ரிலீஸ் ஆகியிருக்கிறது. அவரது தங்கையோ, ’அந்த படத்தை அவன் பார்க்க மாட்டான்’ என்று சவால் விடுகிறார். கடைசியில் அதுவே நிகழ்கிறது.
ஜமீன் வீட்டில் இருக்கும் ஒரு கத்தியைத் திருடுவதற்காக ஒரு கும்பல் நுழைகிறது. அதனுள் ஜமீன் பரம்பரை மறைத்து வைத்த பொக்கிஷங்கள் எங்கிருக்கின்றன என்ற தகவல் இருக்கிறது. பெரியவரிடம் சில வைரங்களைக் கொடுத்துவிட்டு, அதற்கு ஈடாகக் கத்தியை வாங்குவதாகத் திட்டம். ஆனால், அவரோ சட்டென்று ‘கல்கண்டை கொடுத்து ஏமாத்தப் பார்க்குறீங்களா’ என்று அந்த வைரங்களை விழுங்குகிறார். அப்புறம் வியர்க்க விறுவிறுக்க மின்விசிறியைப் போடச் சென்றால், அது ஷாக் அடித்து தொலைக்கிறது.
அப்புறமென்ன? அடுத்த நிமிடமே அவரது கண்களுக்கு எமதர்மனும் சித்திரகுப்தனும் தெரிகின்றனர். விசித்திரகுப்தன் கொஞ்சம் தாமதமாக வந்து சேர்கிறார்.
தாத்தா இறந்துபோன தகவல் வந்து சேர்ந்தாலும், பேரன் தியேட்டரை விட்டு நகரத் தயாராக இல்லை. ஆனாலும், உடன் இருப்பவர்கள் அவரை வீட்டுக்கு விடாப்பிடியாக அழைத்து வருகின்றனர். துக்க வீட்டில் ஒரு பெண்ணைப் பார்க்கிறார் அந்தப் பேரன். அந்தப் பெண் (ராதிகா ப்ரீத்தி), அவருக்கு சகோதரி மகள் முறை. அப்பெண்ணின் அழகில் மயங்குபவர், ‘இவரே என் காதலி’ என்கிறார்.
சகோதரியோ, ‘மெட்ராஸில் இருந்து வந்திருக்கும் அந்தப் பெண் உன்னைக் காதலிக்க மாட்டாள்’ என்கிறார். பதிலுக்கு, ‘ஒரே நாளில் அவளாக வந்து ‘ஐ லவ் யூ’ என்று சொல்ல வைக்கிறேன்’ எனச் சவால் விடுகிறார் அந்தச் சகோதரன்.
அதற்காக, அந்தப் பெண்ணின் கவனத்தை ஈர்க்கப் பல முயற்சிகளைச் செய்கிறார். அதனைக் கலைக்க, அவரது சகோதரியும் தோழிகளும் பகீரதப் பிரயத்தனம் செய்கின்றனர். இடையே வைரத்தை தாத்தாவின் உடலில் இருந்து அறுத்தெடுக்க அலைகிறது அதனைப் பறி கொடுத்த கும்பல். இத்தனை அக்கப்போரையும் மீறி, அந்தப் பெண்ணிடம் நம் நாயகன் காதலைச் சொன்னாரா இல்லையா என்று சொல்கிறது ‘80ஸ் பில்டப்’பின் மீதி.
துக்க வீட்டில் காதல் நிகழ்வதாகக் காட்சிகளை அமைப்பது தமிழ் சினிமாவுக்குப் புதிதல்ல. ஏற்கனவே நெத்தியடி, எம்டன் மகன், பண்ணையாரும் பத்மினியும் உட்படப் பல படங்களில் அதனை நாம் பார்த்திருக்கிறோம். சந்தானம் நடித்த ‘ஏ1’ என்ற படம் கூட அப்படியொரு பின்னணியைக் கொண்டதுதான். ஆனால், அதனை மறந்துவிட்டு ‘80ஸ் பில்டப்’பில் நடித்திருக்கிறார். அதுதான் நம்மை ‘ஐயோ பாவம்..’ ஆக்கியிருக்கிறது.
ஆங்காங்கே சிரிப்பு!
நகைச்சுவை நாயகன் என்ற அந்தஸ்தை துறந்து, சாதாரணமான ஒரு ஹீரோவாக தன்னை வெளிப்படுத்த முயற்சித்து வந்தார் சந்தானம். இதில், அது ‘வொர்க் அவுட்’ ஆகியிருக்கிறது.
அதேநேரத்தில், அவரைச் சுற்றியிருக்கும் கலைஞர்கள் பலநேரங்களில் நம்மைச் சிரிக்க வைக்காமல் சோதிக்கின்றனர். அதனால், ‘இது நகைச்சுவை படம் தானா’ என்ற சந்தேகம் நமக்கு அவ்வப்போது எழுகிறது.
நாயகியாக வரும் ராதிகா ப்ரீத்தி, ஒவ்வொரு ஷாட்டிலும் அழகாகத் தென்பட வேண்டுமென்பதில் அக்கறை காட்டியிருக்கிறார். இன்ஸ்டா ரீல்ஸில் இவர் பதிவிட்ட வீடியோக்கள், அதில் நிறைந்திருந்த க்யூட்னெஸுக்காகவே ரசிக்கப்பட்டன. இந்த சீரியல் நாயகியை ரசிகர்கள் கொண்டாடவும் காரணமாக அமைந்தன. ஆனால், இப்படத்தில் அந்த ‘க்யூட்னெஸ்’ வெளிப்படுவதற்கு இயக்குனர் வாய்ப்பே தரவில்லை.
படத்தில் ஆடுகளம் நரேன், ஆனந்தராஜ் இருவரும் நம்மைச் சிரிக்க வைக்கின்றனர். ஆனால், இவர்களுக்கு நடுவேயான நகைச்சுவையில் ‘விரசம்’ அதிகம்.
மயில்சாமி, சேச்சு சம்பந்தப்பட்ட காட்சிகளோ, அதைவிட ஒருபடி மேலேறி நம்மை எரிச்சலில் ஆழ்த்துகின்றன. முனீஸ்காந்த், ரெடின் கிங்ஸ்லி லேசாகப் புன்முறுவல் பூக்க வைக்கின்றனர். கே.எஸ்.ரவிக்குமார், சுந்தர்ராஜனின் அலட்டல் நடிப்பு நியாயமாகச் சிரிப்பூட்டியிருக்க வேண்டும். அது நிகழவில்லை.
சந்தானத்தின் தங்கையாக நடித்த சங்கீதா, மேடை நாடகங்களில் வருபவர்கள் போல வசனம் பேசியிருக்கிறார். அவரது உடன் வருபவர்களோ, புராணப் படங்களில் வரும் சேடிப்பெண்கள் போலிருக்கின்றனர்.
தங்கதுரை உள்ளிட்டவர்கள் சில ‘ஒன்லைனர்களை’ அடித்துவிட்டு காணாமல் போகின்றனர். மன்சூர் அலிகான், மொட்ட ராஜேந்திரன், மனோபாலா கூட்டணியோ ‘போனோம்.. வந்தோம்..’ பாணியில் திரையில் தோன்றியிருக்கின்றனர்.
மிகக்குறைந்த நாட்களில் அனைத்து காட்சிகளையும் படமாக்கி இருக்கிறார் இயக்குனர் கல்யாண். படத்திற்கான விளம்பர நிகழ்ச்சிகளில் அனேகம் பேர் சொன்ன தகவல் இது. ஆனால், அந்த அவசர கதி திரையில் தென்படாதது ஆச்சர்யம்.
அதேநேரத்தில், இந்த படத்தின் கிளைமேக்ஸை திட்டமிட்டபடி அவரால் எடுக்க முடியவில்லை என்பதும் வெளிப்படையாகத் தெரிகிறது. அதுவே, படம் முடிந்து வரும்போது ரசிகர்கள் அவரை ‘அர்ச்சிக்கவும்’ காரணமாகிறது.
எழுபதுகளில், எண்பதுகளில் ’காமெடி படம்’ என்ற பெயரில் ‘லாஜிக் கிலோ என்ன விலை’ என்று கேட்கும் வகையில் சில படைப்புகள் வெளிவந்திருக்கின்றன. அந்த பாணியில் இந்த படத்தையும் உருவாக்கி இருக்கிறார் கல்யாண்.
ஒளிப்பதிவாளர் ஜேக்கப் ரத்தினராஜ் அதற்குப் பிரதான துணையாகச் செயல்பட்டிருக்கிறார். தேவையான அளவில் கோணங்கள், ஒளியமைப்பு ஆகியவற்றை வடிவமைத்து, மொத்தக் காட்சிகளையும் வேகமாகப் படம்பிடிப்பது நிச்சயம் சாதாரண விஷயமல்ல.
கலை இயக்குனர் ஏ.ஆர்.மோகன், திரையில் சினிமாத்தனமான பொருட்களின் செறிவு தென்படத் துணை நின்றிருக்கிறார்.
படத்தொகுப்பாளர் எம்.எஸ்.பாரதி, நகைச்சுவைக்கான ‘டைமிங்கை’ மதித்து ஷாட்களை கோர்த்திருக்கிறார். ஆனாலும், சில காட்சிகள் ‘வறட்சியாக’ நகர்கின்றன.
சண்டைக்காட்சிகள், பாடல்களுக்குப் பெரிதாக மெனக்கெடாதது போன்ற தோற்றம் காணக் கிடைக்கிறது. அதனைக் கொஞ்சம் கவனித்திருக்கலாம்.
கிப்ரான் உழைப்பில் பின்னணி இசை பரவாயில்லை ரகத்தில் உள்ளது. பாடல்கள் காந்தமாக நம்மை ஈர்க்கவில்லை.
எதற்கு இந்த டைட்டில்?
சுந்தர்ராஜன், அவரது மனைவியாக வரும் கலைராணிக்கு இடையே இதில் பெரிதாகக் காட்சிகள் இல்லை. சந்தானம் மற்றும் அவரது சகோதரியாக வரும் சங்கீதாவுக்கும் இடையிலான காட்சிகளும் பெரியளவில் ஈர்ப்பை ஏற்படுத்துவதாக இல்லை. உறவுகளுக்குள் இருக்கும் அந்த முரண்களை முதன்மைப்படுத்திக் காட்சிகளை அமைத்துவிட்டு, சுந்தர்ராஜன் பாத்திரம் மரணமடைவதாகக் காட்டியிருந்தால் ஈர்ப்பு கூடியிருக்கும்.
ஒரு முதியவரின் மரணத்தை நாயகனும் மற்றவர்களும் ‘அப்புறமென்ன’ என்பது போலக் கடந்துபோவதாகக் காட்டியிருப்பது கதையுடன் ஒட்டவிடாமல் தடுக்கிறது.
இதற்கு முன் வெளியான ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ படத்தில், உடல் தோற்றத்தை வைத்து கிண்டலடிப்பதைத் தவிர்த்திருந்தார் சந்தானம். ஆனால், இதில் அது மட்டுமே நிறைந்திருக்கிறது.
சில இடங்களில் இரட்டை அர்த்தத்தையும் தாண்டி நேரடியாக ‘ஆபாசத்துக்கு’ தாவுகிறது வசனம். அது நம்மை ரொம்பவே எரிச்சலூட்டுகிறது.
ஆன்ட்டி – கிளைமேக்ஸ் வைத்தால் கொஞ்சம் ‘மாடர்னாக’ இருக்குமென்று நினைத்திருக்கிறார் இயக்குனர். ஆனால், நமக்கோ ‘கடுப்பேத்துனது போதும்’ என்றே சொல்லத் தோன்றுகிறது.
யாருக்கு முக்கியத்துவம் கொடுப்பது என்று தெரியாமல் எல்லா பாத்திரங்களையும் ஒரே அளவில் காட்ட முயற்சித்திருக்கிறது திரைக்கதை. அதனால் எந்தப் பலனும் கிடைக்கவில்லை. நாயகன் – நாயகியின் காதல் காட்சிகளும் சரி; அவர்களுக்கு இடையேயான நகைச்சுவை காட்சிகளும் சரி; மீண்டும் மீண்டும் ரசிக்கத் தூண்டும் வகையில் இல்லை.
வெறுமனே ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக மட்டுமே, எண்பதுகளில் வெளியான திரைப்படங்களை நினைவூட்டும்விதமாக காஸ்ட்யூம் டிசைன், ஸ்டைலிங், கலை வடிவமைப்பு, ஒளிப்பதிவு ஆகியன இப்படத்தில் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால், இந்தக் கதையை நாற்பதாண்டுகளுக்கு முன் நடப்பதாக ஏன் காட்ட வேண்டும் என்ற ரசிகனின் கேள்விக்கு இயக்குனர் பதிலே சொல்லவில்லை.
அனைத்துக்கும் மேலாக, துணுக்குத் தோரணங்களாக இருக்கும் நகைச்சுவைக் காட்சிகளை இணைக்கும் வகையில் சில காட்சிகளைச் சேர்க்கவில்லை. அதனைச் செய்திருந்தால், குறைந்தபட்சமாக ஒரு நீரோடை போன்ற நகர்வையாவது திரைக்கதை எட்டியிருக்கும். அது நிகழாததால், ’இந்த படத்துக்கு எதுக்கு 80ஸ் பில்டப்னு டைட்டில் வச்சாங்க’ என்ற கேள்வியோடே வெளியே வருகிறோம். பருத்தி மூட்டை ஏன் இவ்ளோ நாளா குடோன்ல இருந்ததுன்னு இப்போ புரியுது!
உதய் பாடகலிங்கம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
செந்தில் பாலாஜி மருத்துவ அறிக்கை சொல்வது என்ன?
Bigg Boss 7 Day 53: வீட்டின் கேப்டனான நிக்சன்…பூர்ணிமா மோட்டிவேஷன் டாக்!