விமர்சனம் : சங்கராந்திக்கு வஸ்துன்னாம்!

Published On:

| By Kavi

பாலகிருஷ்ணாவை முந்துகிறாரா வெங்கடேஷ்?!

வேற்று மொழிப் படங்கள் என்றாலும், குறிப்பிட்ட சில திரைப்படங்கள் நம் மனதுக்கு நெருக்கமானதாக மாறிவிடும். அதன்பிறகு, அதன் இயக்குனர், அதில் நடித்தவர்கள், இதர தொழில்நுட்பக் கலைஞர்கள் பணியாற்றிய வேறு திரைப்படங்களைத் தேடித் தேடி ரசிப்போம். சமீபகாலமாகத் தமிழ் ரசிகர்களை அப்படி ஈர்த்தவர்களில் ஒருவர் தெலுங்கு இயக்குனர் அனில் ரவிப்புடி. ’பகவந்த் கேசரி’, ‘பன் அண்ட் ப்ரஸ்ட்ரேஷன்’ படத்தின் இரு பாகங்கள் என்று அவர் இயக்கிய படங்களின் தமிழ் பதிப்புகளைப் பார்த்து வயிறு வலிக்கச் சிரித்தவர்கள் ‘யார்றா இந்த பையன்’ என்று தேடித் திரிந்தார்கள்.

இதோ, இப்போது, இந்த பொங்கல் பண்டிகையையொட்டி ‘சங்கராந்திக்கு வஸ்துன்னாம்’ தந்திருக்கிறார் அனில். வெங்கடேஷ் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், மீனாட்சி சவுத்ரி என்று இரு நாயகிகள் உள்ளனர். விடிவி கணேஷ், நரேஷ், சாய்குமார், உபேந்திர லிமாயே, ஸ்ரீனிவாஸ் அவச்ரலா, முரளிதர் கவுட், பப்லு பிருத்விராஜ் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.

’அனிமல்’ படப் புகழ் உபேந்திர லிமாயேவும் இதிலுண்டு. பீக்ஸ் சிசிரோலியோ இதற்கு இசையமைத்திருக்கிறார்.

சரி, ‘சங்கராந்திக்கு வஸ்துன்னாம்’ நம்மைச் சிரிக்க வைக்கிறதா? நல்லதொரு பொழுதுபோக்கு படமாக அமைந்திருக்கிறதா?

ச.வ. கதை!

அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபர் சத்யா அகெல்லா (ஸ்ரீனிவாஸ் அவசரலா) தெலங்கானா முதலமைச்சர் கேசவாவின் (நரேஷ்) அழைப்பை ஏற்று ஹைதராபாத் வருகிறார். மத்திய அரசின் எதிர்ப்பை மீறி, அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை நடத்துகிறார் கேசவா.

வந்த இடத்தில், ஆளும் கட்சித் தலைவரின் (விடிவி கணேஷ்) அழைப்பை ஏற்று அவரது பண்ணைவீட்டுக்குச் செல்கிறார் சத்யா அகெல்லா. ஆனால், காவல் துறையினரின் பாதுகாப்பை மீறி, அந்த இடத்தில் இருந்து ஒரு ரவுடிக் கும்பல் அவரைக் கடத்திச் செல்கிறது.

சம்பவம் நடந்த இடத்தில் பாதுகாப்பு பணியில் இருந்தவர் உதவி கமிஷனர் மீனாட்சி (மீனாட்சி சவுத்ரி). அதனால், அவர் ‘சஸ்பெண்ட்’ ஆகும் நிலைக்கு ஆளாகிறார். சத்யா அகெல்லாவைக் கடத்திய ரவுடி கும்பல், சிறையில் இருக்கும் தங்களது தலைவர் பாபுஜி பாண்டேவை விடுவிக்க வேண்டுமென்று மிரட்டுகிறது. வெளிநாட்டுத் தொழிலதிபர் கடத்தப்பட்ட விஷயம் ஊடகங்களின் வழியே வெளியே தெரிந்தால் ஆட்சி கவிழும் என்ற பயத்தில் ஆழ்கிறார் கேசவா.

அந்த நிலையில், சத்யாவைச் சேதாரமின்றி அழைத்துவரச் சரியான ஆள் ஒருவர் இருப்பதாகச் சொல்கிறார் டிஜிபி.

அவரது பெயர் யாதகிரி தாமோதர ராஜு (வெங்கடேஷ்). உடல்பலமும் அறிவும் அதிகமாகக் கொண்டவர். ஆனால், அவர் தற்போது காவல் துறையில் இல்லை. காரணம், ஒரு சம்பவம்.
அந்த சம்பவத்தினால் மனமுடைந்து தனது வேலையை ராஜினாமா செய்துவிடுகிறார் ராஜு. அவரது காதலி தான் மீனாட்சி. குறிப்பிட்ட சம்பவத்திற்குப் பிறகு இருவரும் பிரிந்துவிடுகின்றனர்.

ஆறு ஆண்டுகள் ஆனாலும், அவரது நினைவாகத் தனியே வாழ்ந்து வருகிறார் மீனாட்சி.
தனது பதவியைக் காப்பாற்றும் பொருட்டு, சத்யா அகெல்லாவை மீட்கும் நடவடிக்கைக்காக ராஜுவை அழைத்து வரத் தயாராகிறார் மீனாட்சி. அவர் இருக்குமிடத்தை அறிந்து, அந்த ஊருக்கு நேரில் செல்கிறார்.

அப்போதுதான், ராஜுவுக்கு பாக்யலட்சுமி (ஐஸ்வர்யா ராஜேஷ்) என்ற பெண்ணுடன் திருமணமாகியிருக்கும் விஷயம் தெரிய வருகிறது. அது, அவரை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது.

கணவனின் முன்னாள் காதலி வந்திருக்கிறார் என்று தெரிந்ததும், மீனாட்சி உடன் ராஜுவை அனுப்ப மறுக்கிறார் பாக்யலட்சுமி. பிறகு, முதலமைச்சரின் வேண்டுகோளுக்கு இணங்கச் சம்மதிக்கிறார். அதேநேரத்தில், அந்த ஆபரேஷனில் கணவனுடன் தானும் பங்கேற்க வேண்டுமென்று நிபந்தனை விதிக்கிறார்.

அதற்கு முதலமைச்சர் சம்மதித்தாரா? ராஜுவுக்காக மீனாட்சியும் பாக்யாவும் முட்டிக் கொண்டார்களா? சத்யா அகெல்லாவை உயிருடன் ராஜு மீட்டாரா என்பது உட்பட இக்கதையைப் படித்தவுடன் உங்கள் மனதில் எழுகிற பல கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது இப்படத்தின் மீதி.

’கடுகளவு’ கதை என்றபோதும், அதனை உருட்டித் திரட்டி யானையின் வயிற்றை நிறைக்கும் கவளமாக்கித் தந்திருக்கிறார் இயக்குனர் அனில் ரவிபுடி. அதில் சில இடங்கள் நம்மைச் சிரிப்பில் ஆழ்த்துகின்றன. அதுவே இப்படத்தின் தற்போதைய ‘மெகா’ வசூலுக்கும் காரணமாக உள்ளது.

சில இடங்களில் சிரிக்கலாம்!

வெவ்வேறுவிதமான நடிப்புக்கலைஞர்களை ஒரு திரைப்படத்திற்குள் கொண்டுவருவதில், அவர்களது நடிப்புத்திறமையை வெளிப்படுத்த வைப்பதில் இயக்குனர் அனில் ரவிப்புடி வல்லவர். இதிலும் அந்த மாயஜாலத்தை நிகழ்த்தியிருக்கிறார்.

வெங்கடேஷை நாயகனாகக் காட்டும்போது, நாயகிகளை விட அவருக்கு வயது அதிகம் என்ற விஷயத்தைத் தொடக்கத்திலேயே அடிக்கோடிட்டுச் சொல்லிவிடுகிறார் இயக்குனர். அதனால் ஐஸ்வர்யா ராஜேஷ், மீனாட்சியோடு வெங்கடேஷ் நடனமாடுவதும் கொஞ்சிக் குலாவுவதும் நமக்கு ‘வித்தியாசமாக’த் தெரிவதில்லை. இது போன்ற சிறிய உத்திகள்தான் இப்படத்தின் பலம். வழக்கம்போல, நகைச்சுவையில் தனக்கேயுரிய பாணியில் வெளுத்துக் கட்டுகிறார் வெங்கி.

அவருக்கு இணையாக நடித்து ரசிகர்களின் கைத்தட்டல்களை அள்ளுகிறார் ஐஸு.
மீனுவோ லேசுபாசாக கவர்ச்சி காட்டி, தியேட்டரில் ரசிகர்களின் கூக்குரல்கள் குறையாதவண்ணம் பார்த்துக் கொள்கிறார்.

உபேந்திர லிமாயே, சாய்குமார், நரேஷ், விடிவி கணேஷ் தொடங்கி ஐஸ்வர்யாவின் தந்தையாக நடித்துள்ள முரளிதர் கவுட், மகனாக வரும் மாஸ்டர் ரேவந்த் என்று பல பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் இப்படத்தில் இரண்டொரு காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

இது போக ‘லக்கி பாஸ்கர்’ புகழ் சர்வதமன் பானர்ஜியும் இப்படத்தில் இருக்கிறார். ஸ்ரீனிவாஸ் அவசரலாவுக்கு இதில் பெரிய பாத்திரம் கொடுக்கப்படவில்லை. இருந்தாலும், கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

ஏ.எஸ்.பிரகாஷின் தயாரிப்பு வடிவமைப்பில், பெரும்பாலான காட்சிகள் சினிமாத்தனத்துடன் ஆக்கப்பட்டிருக்கின்றன. ‘செட்ல எடுத்திருக்காங்க’ என்று ரசிகர்கள் சொல்லும்விதமாக, காட்சிக்களங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

’ஒரு கமர்ஷியல் படத்தில் ரசிகர்கள் இப்படிப்பட்ட ஒளிப்பதிவைத்தான் எதிர்பார்ப்பார்கள்’ என்ற நம்பிக்கையோடு, பளிச்சென்று தெரியும் வகையில் காட்சியாக்கம் செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சமீர் ரெட்டி.

தம்மிராஜுவின் படத்தொகுப்பானது, நடிப்புக்கலைஞர்களின் ’காமெடி டைமிங்’ மிஸ் ஆகாமல் பார்த்துக் கொள்கிறது.

பீம்ஸ் சிசிரோலியோ இசையமைப்பில் ’கோடாரி கட்டு’, ‘மீனு’, ‘பிளாக்பஸ்டர் பொங்கல்’ பாடல்கள் ஏற்கனவே ‘வைரல்’ ஆகிவிட்டன. அவை தவிர்த்து, நகைச்சுவைக் காட்சிகளை அடிக்கோடிடும்விதமாகப் பின்னணி இசையமைத்தும் பீம்ஸ் நம்மைக் கவர்கிறார்.
’பண்டிகைக் காலத்தில் வெளியாகும் பெரிய நட்சத்திரங்களின் படம் இப்படித்தான் இருக்கும்’ என்று வரையறுக்கும் வகையில் இதனை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் அனில் ரவிப்புடி. எழுத்தாக்கத்தில் அவருக்கு எஸ்.கிருஷ்ணா மற்றும் ஆதிநாராயணா இருவரும் உதவிக்கரம் நீட்டியிருக்கின்றனர்.

’நோ லாஜிக் ஒன்லி காமெடி மேஜிக்’ எனும் தாரக மந்திரத்தின் அடிப்படையில் இதன் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. அதனால், சில இடங்களில் நன்றாகவே சிரிக்க முடிகிறது. சில காட்சிகளில் ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரிக்கும்போது, ‘இது அப்படியொண்ணும் பெரிய ஜோக் இல்லையே’ என்று சந்தானம் போல ‘கமெண்ட்’ அடிக்கத் தோன்றுகிறது.

உண்மையைச் சொன்னால், இயக்குனரின் முந்தைய படங்கள் போன்று இப்படம் வயிறு வலிக்கச் சிரிக்க வைக்கும் ரகம் அல்ல. ஏற்கனவே நாம் பார்த்த தெலுங்கு, மலையாளம், இந்தி, தமிழ் படங்களைப் பிரதியெடுத்த காட்சிகள் இதில் பல இருக்கின்றன. ஆனாலும் வெங்கடேஷ், ஐஸ்வர்யா உள்ளிட்ட கலைஞர்களின் நடிப்பு அதனை மறக்கடிக்கிறது. அதுவே இப்படத்தின் மாபெரும் ப்ளஸ்.

அதனால், பாலகிருஷ்ணாவை மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்த ‘பகவந்த் கேசரி’யோடு ‘சங்கராந்திக்கு வஸ்துனாம்’ திரைப்படத்தை ஒப்பிடுவது முற்றிலும் தவறானது. இன்னும் எளிமையாகச் சொன்னால், பாலய்யாவை வெங்கடேஷ் முந்தவில்லை என்று சொல்வதே சரி. அதேநேரத்தில், அந்தப் படத்தைவிட இப்படத்திற்கு ரசிகர்களின் வரவேற்பு அதிகம் என்கிற முரணுக்கு எவராலும் விளக்கம் சொல்ல முடியாது.

இயக்குனர் அனில் ரவிப்புடி இயக்கிய முந்தைய படங்களிலும் இரட்டை அர்த்த நகைச்சுவை வசனங்கள் உண்டு. ஆனால், இப்படத்தில் ஆபாச சைகையை அடிப்படையாக வைத்து இரண்டொரு காட்சிகள் எழுதப்பட்டிருக்கின்றன. அவை அருவெருப்பாக உணர வைக்கின்றன. போலவே, குழந்தை நட்சத்திரம் ரேவந்த் வசை பாடுவதாகவும் இதில் காட்டியிருக்கிறார் இயக்குனர். அக்காட்சிகள் குடும்பத்தோடு தியேட்டருக்கு வருபவர்களை நெளியச் செய்யும்.

அது போன்ற ஆபாசமான நகைச்சுவை காட்சிகள், வசனங்களுக்கு ‘கட்’ கொடுத்திருந்தாலே போதும்; குடும்பத்தோடு ரசிக்கத்தக்க எண்டர்டெயினர் ஆக மலர்ந்திருக்கும் ‘சங்கராந்திக்கு வஸ்துனாம்’. அது நிகழாதபோதும், அப்படியொரு படமாகக் கொண்டாடப்படுவது காலம் செய்த கோலம் தான். இதனை இயக்குனர் அனில் ரவிப்புடி தனக்கான எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளலாம். அடுத்த படத்தில் அவர் சுதாரித்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான எச்சரிக்கை மணியாகவே இதனைக் கருதுவது நலம் பயக்கும்.

ஓடிடி தளத்தில் தமிழில் வெளியாகும்போது ‘சங்கராந்திக்கு வஸ்துன்னாம்’ சில பல ரசிகர்களால் கொண்டாடப்படுவதற்கான வாய்ப்புகள் அனேகம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel