”மத ரீதியான பாகுபாடு கேவலம்!” – நடிகை சனம் ஷெட்டி அதிருப்தி

சினிமா

சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்த தன்னிடம் அங்குள்ள ஊழியர்கள் மத ரீதியாக பாகுபாடு காட்டி சோதனை செய்ததாக நடிகை சனம் ஷெட்டி ஆதங்கத்துடன் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

திரைத்துறையில் கடந்த 2012ஆம் ஆண்டு தமிழில் வெளியான ‘அம்புலி’ திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை சனம் ஷெட்டி . அதன் பிறகு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, தனது நேர்மையான, துணிச்சலான செயல்களுக்காக மக்களால் பாராட்டப்பட்டார்.

அதனை தொடர்ந்து தற்போது தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில் கோவை விமான நிலையத்தில் தன்னிடம் மத ரீதியாக ஊழியர்கள் பாகுபாடு காட்டியதாக சனம் ஷெட்டி அதிருப்தி தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘‘இப்போது தான் கோயம்புத்தூரில் இருந்து சென்னைக்கு ஏர்இந்தியா விமானத்தில் வந்தேன். வருத்தமான ஒரு நிகழ்வு நடந்தது. ரொம்ப கஷ்டமாக இருந்தது. அதனை கண்டிப்பாக உங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது.

அதாவது கோவை விமான நிலையத்தில் பாதுகாப்பு என்கிற பெயரில், விமானம் ஏறுவதற்கு முன்பு எனது மற்றும் இரண்டு ஆண்களின் உடமைகளை மட்டும் தனியாக எடுத்து சென்று சோதனை செய்தார்கள்.

என்னை என் பெயருக்காக சோதனை செய்தார்கள். அந்த பயணிகள் இருவரும் ரொம்ப வருத்தப்பட்டார்கள். நான் அவர்களிடம் பேசிய போது, தொப்பி அணிந்ததால் எங்களை சோதனை செய்கிறார்கள் என்று அவர்கள் கூறியது ரொம்ப கஷ்டமாக, கோபமாக இருந்தது. சோதனை செய்தது, ஒரு பெண் அதிகாரி. அவர் யார் என்பதும், ஏர்லைன்ஸிற்கு தெரிந்திருக்கும்.

அங்கு ஸ்கேனர் இல்லை எதுவும் இல்லை. வெறும் பார்வையில் சந்தேகப்பட்டு சோதனை செய்வது சரியானது இல்லை. சோதனை செய்த அந்த பெண்ணுக்கு மட்டும் எக்ஸ்ரே பார்வை இருக்கிறதா? மொத்தம் 190 பயணிகள் இருக்கும் போது எங்களை மட்டும் தனியாக சோதித்தது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.

ஏன், அங்கே இருக்கும் மற்றவர்களிடம் பேக் இல்லையா? அவர்கள் எதுவும் கொண்டு செல்ல வாய்ப்பு இல்லையா? ஏன் எங்களை மட்டும் தனியாக அழைத்து சோதிக்கிறீர்கள் என கேட்டேன். அதற்கு குடியரசு தினம், பாதுகாப்பு நடவடிக்கையாக இது ரேன்டம் செக் தான் என்றார்கள். அது நல்ல விசயம் தான்.

அதற்காக எங்கள் மூன்று பேர் உடமைகளை மட்டும் சோதனை செய்தது ஏன்? அதில் என்ன லாஜிக் இருக்கிறது? சோதனை செய்வதாக இருந்தால், அனைவரின் உடைமைகளும் சோதனை செய்திருந்தால் சந்தோசமாக இருந்திருக்கும்.

ஏன், தோற்றத்தை வைத்து, மதத்தை வைத்து முடிவுக்கு வருகிறார்கள்? இப்படி மத ரீதியாக பாகுபாடு காட்டி சோதனை செய்வது எங்களைப் புண்படுத்துகிறது. முதலில் மத ரீதியான பாகுபாடுகளை நிறுத்த வேண்டும். இது எவ்வளவு கேவலம்? தயவு செய்து இதை நிறுத்துங்கள்,’’ என அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

இந்த சம்பவம் கடந்த 15ம் தேதி நடந்த நிலையில் நடிகை சனம்ஷெட்டி ஆதங்கத்துடன் பேசும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

”நீதிக்கு நாம் செய்யும் பிழை!” – காவலர்களிடம் கண்டிப்பு காட்டிய முதல்வர்

முகமது சிராஜின் செயல்: நெகிழ்ந்த தாய்!

+1
0
+1
0
+1
1
+1
4
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *