இயக்குநர்கள் ஹரி சங்கர் – ஹரிஸ் நாராயண் இயக்கத்தில் சமந்தா கதையின் நாயகியாக நடித்துள்ள படம் யசோதா.
அறிவிக்கப்பட்டதில் இருந்து வெளியாகும் வரை படம் பற்றி வெளியான தகவல்கள் பில்டப்புகள் ஏராளம்.
அந்த எதிர்பார்ப்புகளுடன் படம் பார்க்க செல்பவர்களுக்கு ஏமாற்றத்தையும் எதிர்பார்ப்பு இல்லாமல் படம் பார்க்க அமர்பவர்களுக்கு நிறைவையும் தரக்கூடிய படமாக இருக்கிறது.
யசோதா கதையின் நாயகியான யசோதா(சமந்தா) தன்னுடைய தங்கையின் மருத்துவச் செலவுக்கு பணம் இன்றி வாடகைத் தாயாக ஏஜெண்ட் ஒருவரின் மூலமாக தனியார் நிறுவனத்தின் பராமரிப்பில் இருக்கிறார்.
மூன்றாவது மாத பரிசோதனைகளை முடித்து காத்திருப்பவருக்கு ஒரு அழைப்பு வருகிறது
வயிற்றில் இருக்கும் குழந்தையின் பெற்றோர்கள் பணக்காரர்கள் என்பதால் ஏழ்மையில் சிரமப்படும் யசோதாவை மருத்துவமனை அமைப்புடன் கூடிய கட்டடத்திற்குக் கூட்டிச் செல்கிறார்கள்.
அங்கு யசோதாவைப் போலவே நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் வயிற்றில் குழந்தையுடன் செவிலியர்களின் கண்காணிப்பில் இருக்கிறார்கள்.
மற்றொருபுறம் ஹாலிவுட் நடிகை ஒலிவியாவும், மாடல் ஒருவரும், தொழிலதிபரும் இறந்துகிடக்கிறார்கள்.
காவல் துறை இந்த வழக்கை தீவிரமாக விசாரிக்க, யசோதா இருக்கும் தனியார் நிறுவனத்தில் பல முறைகேடான விஷயங்கள் நடக்கின்றன.
இதை யசோதா எப்படி கண்டறிகிறார்? காவல் துறை விசாரிக்கும் வழக்குக்கும் யசோதாவுக்கும் என்ன தொடர்பு என்பதை சஸ்பென்ஸ் – த்ரில்லர் பாணியில் சொல்லியிருக்கும் படம் தான் ‘யசோதா’.
ஆணாதிக்கம் மிகுந்த சமூகத்தில் பெண்மையின் ஆளுமை ஆண்களுக்கு நிகரானது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் பெண்ணின் மைய உள்ளடக்கத்தை ஏற்று, தனது மொத்த நடிப்பையும் கதாபாத்திரத்தின் மீது ஏற்றி அழகுபடுத்தியிருக்கிறார் நடிகை சமந்தா.
கதாநாயகிக்கு உரிய வழக்கமான நடிப்பை கடந்து சண்டை காட்சிகளிலும் ஆண்களுக்கு நிகரான உறுதி தன்மை வெளிப்படும் வகையில் நடித்திருக்கிறார் சமந்தா
எதிர்மறையான கதாபாத்திரத்தில் வரும் வரலட்சுமி கதாபாத்திரம் சில இடங்களில் ‘சர்கார்’ பட வில்லியை நினைவுபடுத்தினாலும் கதாபாத்திரத்திற்கான நடிப்புக்கு நியாயம் செய்திருக்கிறார்
டாக்டர் முகுந்தன் கதாபாத்திரத்தில் உன்னி முகுந்தன் நடித்துள்ளார்.
வாடக்கைத்தாய் விவகாரத்தை கதைக்கருவாக எடுத்துக்கொண்டு அதையொட்டி திரைக்கதை உருவாக்கி இறுதியில்
வேறொரு விஷயத்தை காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். கதாபாத்திரங்களை பார்வையாளர்களுக்குள் நுழைப்பதற்காக அவர்கள் எடுத்துக்கொண்ட நேரம், பார்வையாளனை சோர்வடைய வைக்கிறது.
இடைவேளைக்கு முன்புதான் திரைக்கதை படத்தின் மைய திரைக்கதைக்குள் நுழைகிறது.
படத்தின் இரண்டாம் பாதி வேகமெடுக்கிறது. இரண்டு வெவ்வேறு கதைகளும் ஒன்றிணையும் இடம், இறுதிக்காட்சியில் வரும் திருப்பம் ரசிக்கும்படியாக இருக்கிறது. பின்னணி இசை, பாடல்கள், ஒளிப்பதிவு, தொழில்நுட்ப ரீதியாக வலிமையாக இருக்கிறது.
யசோதா கதாபாத்திரம் பெண்களுக்கான தன்னம்பிக்கையை கட்டமைத்திருக்கிறார்கள். வாடகைத்தாய் விவகாரத்தில் நடக்கும் விஷயங்கள் நமக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் காட்டியிருக்கும் விதத்தில் முக்கியமான படம்.
மருத்துவமனைக்கு வருகிற பெண்களை ஆசை வார்த்தை கூறி வாடகைத்தாயாக மாற்றுவது, அதற்குள் நடக்கும் கமிஷன் விவகாரங்கள், முறைகேடான வாடகைத்தாய், குடும்பச் சூழலால் வாடகைத்தாயாக ஒப்புக்கொள்ளும் பெண்களை தவறாக பயன்படுத்துவது,
உள்ளிட்டவை ‘யசோதா’ மூலம் பொதுவெளியில் வெளிச்சம் பெறுவதற்காக இதில் உள்ள வழக்கமான சினிமா மசாலாக்களை கண்டுகொள்ளாமல் கடந்து போகலாம்.
இராமானுஜம்
இயக்குநர் ராம்-நிவின் பாலி கூட்டணியின் புதிய அப்டேட்!
தொழிலில் சிறக்க எந்தக் கடவுளைக் கும்பிடலாம்?