சமந்தாவின் பதில்… நயன்தாராவை அவமானப்படுத்தினாரா கரண் ஜோகர்?

Published On:

| By Kavi

நடிகை நயன்தாராவை அவமானப்படுத்தும் விதமாக கரண்ஜோகர் பேசினார் என அவரது ரசிகர்கள் இணையத்தில் ட்வீட் செய்து வருகின்றனர்.

பாலிவுட் தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘காபி வித் கரண்’ நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தற்போது தொடங்கி இருக்கிறது. இந்த மாதம் ஆரம்பத்திலிருந்து டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் செயலியில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. பிரபல பாலிவுட் தயாரிப்பாளரும் நடிகரும் இயக்குநருமான கரண் ஜோஹர் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார்.

இந்தியாவில் உள்ள பிரபல முன்னணி நடிகர் நடிகைகள் இதில் பங்கு பெறுவர். இந்த நிகழ்ச்சி டாக் ஷோவுக்கும் அதன் சர்ச்சைகளுக்கும் பெயர் போனது. ஏழாவது சீசனில் நிறையத் தென்னிந்தியாவைச் சேர்ந்த நடிகர் நடிகைகளும் பங்கேற்றுள்ளனர். நடிகை சமந்தாவும் பங்கேற்றார். இந்த எபிசோடில் நடிகை சமந்தா தன்னுடைய சினிமா, சொந்த வாழ்க்கை, நாக சைதன்யாவுடன் விவாகரத்து உள்ளிட்ட பல விஷயங்களை மனம் திறந்து பேசியுள்ளார்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சமந்தாவின் எபிசோடு ஒளிபரப்பானது. இதில் கரண் ஜோஹர் சமந்தாவிடம் தென்னிந்தியாவில் யார் மிகப்பெரிய நடிகை என நீங்கள் நினைக்கிறீர்கள் என கேட்டுள்ளார். இந்த கேள்விக்கு நடிகை சமந்தா, நயன்தாரா பெயரை குறிப்பிட்டுள்ளார். ‘நான் அவருடன் சமீபத்தில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்துள்ளேன். அவர் தென்னிந்தியாவில் மிகப்பெரிய நடிகை’ என குறிப்பிட்டார்.

அவர் பேசிக் கொண்டிருக்கும் பொழுது கரண் ஜோஹர், சமந்தாவை இடைமறித்து, ‘ஆனால் அவர் என் பட்டியலில் இல்லை’ என கூறியுள்ளார். கரண் சொல்லியுள்ள இந்த பதில்தான் நயன்தாராவின் ரசிகர்களைக் கோபப்படுத்தியுள்ளது. ‘உங்களுடைய மலிவான பட்டியலில் நிச்சயம் நயன்தாரா இடம்பெற மாட்டார். ஏனெனில் அவர் ஒரு லேடி சூப்பர் ஸ்டார்’ எனவும், கரண் ஜோஹர் நீங்கள் தென்னிந்தியாவுடன் மோதாதீர்கள் அமைதியாக இருங்கள்’ என்றும் நெட்டிசன்கள் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.

ஆதிரா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share